பெண்களுக்கு மட்டுமன்றி மக்கள் அனைவருக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள அரியவன் படம் தன் கடமையை சரியாக செய்ததா அல்லது சொதப்பியதா? வாங்க பார்க்கலாம்.


கதையின் கரு:


பெண்களை காதல் வலையில் விழவைத்து ஏமாற்றி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வருகிறது டேனியல் பாலாஜியின் (துறைப்பாண்டி)தலைமையில் இயங்கும் கும்பல். வன்கொடுமை செய்வது மட்டுமன்றி, அதை வீடியோ ரெக்காரட் செய்து, “நாங்கள் கைக்காட்டும் ஆட்களுக்கு அடிபணியவில்லை என்றால் இதை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம்” என அப்பாவி பெண்களை மிரட்டவும் செய்கின்றனர். இப்படித்தான் ஆரம்பக்கிறது, அரியவன் திரைப்படம். 




ஆரம்ப காட்சிகளிலேயே திறமை மற்றும் துணிச்சல் மிக்க கபடி போட்டியாளராக களமிறங்குகிறார் ஜீவா (இஷோன்) என்ற இளைஞர். இவர் உருகி உருகி காதலிக்கும் பெண்ணாக வருகிறார், மித்ரா (பிரணாளி). மித்ராவின் தோழி ஜெஸ்ஸி, டேனியல் பாலாஜியின் மிரட்டல் கும்பலில் சிக்கிக்கொண்ட பெண்களுள் ஒருவர். இவரைக் காப்பற்றப் போகும் நாயகன் ஜீவாவும் நாயகி மித்ராவும் வில்லன் கும்பலுக்கு வில்லனாக மாறுகின்றனர். அந்த சண்டையில், டேனியல் பாலாஜியின் தம்பி, பப்புவின் கைகளை வெட்டி விடுகிறார், கதையின் நாயகன் ஜீவா. இதனால், தம்பியின் கையை வெட்டியவனை பழி வாங்கியே தீர வேண்டும் என முடிவெடுக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? வில்லனின் பழிவாங்கலில் இருந்து ஹீரோ தப்பித்தாரா? அந்தக் கும்பலிடம் மாட்டிய பெண்களின் கதி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையாக வருகிறது மீதி கதை. 


ரிவெஞ்ச் த்ரில்லரா? விழிப்புணர்வு படமா?


பாதி படம் வரை, பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றி பெரிதும் பேசாத அரியவன் திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு, ரிவெஞ்ச் த்ரில்லராகவும் விழிப்புணர்வு படமாகவும் மாறி மாறி பயணிக்கிறது. “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு பெண்கள்தான் காரணம்” என்ற கருத்தை முன்னிறுத்தி பல படங்கள் வெளிவருவதற்கு மத்தியில், “உங்களை ஒருவன் வீடியோ எடுத்து மிரட்டுகிறான் என்றால், தவறு உங்களுடையது இல்லை அவனுடையது” என்று கூறும் அரியவன் போன்ற படங்களை பார்ப்பது அரிதுதான். இருந்தாலும் சொல்லவந்த கருத்தை இன்னும் தெளிவாகக் கூறியிருந்தால் படம் பலராலும் கவனிக்கப்பட்டிருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது. 




கதாப்பாத்திரங்களின் பங்களிப்பு:


கொடூர வில்லனாக வரும் டேனியல் பாலாஜி தனக்கு கொடுத்த ரோலை கனக்கச்சிதமாக செய்து கொடுத்துள்ளார். அதிலும் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு மெனக்கெடாமல் வில்லத்தனமாக பேசும் டயலாக்குகளில் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கிறார். அவரைத் தவிர நன்றாக நடிப்பது என்றால், ஹீரோவின் அம்மாவாக வரும் நடிகை ரமா மட்டும்தான். இப்படம் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து மட்டுமே சுழல்வதால், எந்த இடத்திலும் படம் பார்த்த உணர்வே வரவில்லை. ஏதோ பெரிய திரையில் மெகா சீரியல் பார்ப்பது போன்ற எண்ணத்தில்தான் ரசிகர்கள் படத்தை பார்க்கின்றனர்.




ஹீரோவின் நண்பராக வரும் நடிகர் சத்யனை காமெடிக்காக மட்டும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். நாயகி பேசும், “என்ன ஜீவா இது..என்னடி இது..” போன்ற டயலாக்குகள் எரிச்சலூட்டுகின்றன. 


தனது முதல் படத்திலேயே ஹீரோவாகக் களமிறங்கியுள்ள இஷோன், நடிப்பில் நிறைய ட்ரெய்னிங் எடுக்க வேண்டியுள்ளது. சீரியசான சண்டைக் காட்சிகளிலும் சரி, ஹீரோயினுடன் டூயட் பாடும் காதல் காட்சிகளிலும் சரி கொஞ்சம் கூட உடல் மொழியை உபயோகிக்க முயற்சிக்கவில்லை நம்ம ஹீரோ. குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் உடலை வளைக்காமல் கை கால்களை மட்டும் அசைத்து சண்டை போடுவது சிரிப்பை வரவழைக்கிறது.


தெறிக்கவிடும் பின்னணி இசை:


சுப்பிரமணியபுரம், ஈசன், பசங்க போன்ற படங்களில் ‘நச்’சென பாடல்களுக்கு மெட்டு போட்டு கொடுத்த ஜேம்ஸ் வசந்தன், அரியவன் படத்தில் அதைக்கொடுக்க தவறி இருக்கிறார். காதல் பாடல்கள் அனைத்தும் படத்தில் இடைச்செறுகல்களாகவே உள்ளன. சண்டைக் காட்சிகளில் மட்டும் பின்னணி இசை ஜெயித்திருக்கிறது. மற்றபடி, இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு மற்ற சீன்களுக்கு இசையமைத்திருக்கலாமோ..என்ற கேள்வியை நமது மனங்களில் விதைக்கிறார் ஜேம்ஸ். 


தாக்கத்தை ஏற்படுத்தாத க்ளைமேக்ஸ்:


சமீப காலமாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து அதிகமான படங்கள் எடுக்கப்படுவதாலோ என்னவோ, அரியவன் படமும் பத்தோடு பதினொன்றாக கடந்து விடுகிறது. படத்தில் உபயோகித்திருந்த வசனங்களையும் அவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை சட்ட ரீதியாக எப்படி அணுகுவது என்ற புரிதலையும் ஏற்படுத்தியிருந்தால், படம் இன்னும் பேசப்பட்டிருக்கும். பெண்கள் பயத்தை துறந்தால் அசுரனாக இருந்தாலும் அவனை அழித்து விடுவார்கள் என்ற கருத்து பாராட்டுதலுக்கு உரியது. இருந்தாலும், க்ளைமேக்சில் அந்த “ஐகிரி நந்தினி” பாடல் கொஞ்சம் ஓவர்தான். 


மொத்தத்தில் அரியவன் திரைப்படம் தான் சொல்ல வந்த கருத்தை தெளிவாகக் கடத்தத் தவறிவிட்டது.