நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் பிறந்து டோலிவுட் சென்று, பின் கோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை ஈர்த்து தென்னிந்திய சினிமாவின் குயின் எனக் கொண்டாடப்படுபவர் நடிகை அனுஷ்கா.
இறுதியாக கொரோனா காலக்கட்டத்தில் வெளியான நிசப்தம் , தமிழில் சைலன்ஸ் படத்துக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் வெறெந்த படமும் வெளியாகாத நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு பற்றி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்து வந்தனர்.
முக்கியமாக பாகுபலி படத்தில் அவர் நடித்த தேவசேனா கதாபாத்திரம் நாடு தாண்டி ரசிகர்களை ஈர்த்து பெரும் ரசிகர் பட்டாளத்தை அவருக்கு உருவாக்கித் தந்த நிலையில், அதன் பின் அனுஷ்கா பெரும் நடிகர்களுடன் ஜோடி சேர்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், முன்னதாக ஜதிரத்னலு, சிச்சோர் படங்களின் மூலம் கவனமீர்த்த நடிகர் நவீன் பொலிஷெட்டியுடன் படத்தில் கமிட் ஆகி ஆச்சர்யப்படுத்தினார் நடிகை அனுஷ்கா.
யுவி க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ் இயக்குகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகிறது. கடந்த மே 2021ஆம் ஆண்டு இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி கவனமீர்த்துள்ளது.
’ஹாப்பி சிங்கிள்’, ‘ரெடி டு மிங்கிள்’ எனும் வசனங்களைத் தாங்கிய டிசர்ட்கள் அணிந்தபடி அனுஷ்கா, நவீன் இருவரும் இணைந்திருக்கும் இந்த கலர்ஃபுல் போஸ்டர் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அனுஷ்காவின் 48ஆவது படமான இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
தமிழில் ரெண்டு படத்தில் அறிமுகமாகி ரஜினி, விஜய், அஜித், சூர்யா என டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள அனுஷ்காவை, தமிழில் பாகமதி படத்தில் இறுதியாகத் தோன்றியிருந்தார்.
முன்னதாக மகா சிவராத்திரி நிகழ்வின்போது அனுஷ்கா பெங்களூருவில் உள்ள கோயில் ஒன்றுக்கு வருகை தந்து பூஜை செய்த நிலையில், அவரது புகைப்படங்கள், வீடியோ வெளியாகி பெரும் கேலிக்கு உள்ளாகின.
உடல் எடை கூடிய நடிகை அனுஷ்காவை ஒரு தரப்பினர் கேலி செய்த நிலையில், அனுஷ்காவின் ரசிகர்கள் உள்ளிட்ட மற்றொரு தரப்பினர் இத்தகைய செய்திகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் களமாடி வந்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பழைய பொலிவுடன் இந்தப் போஸ்டரில் அனுஷ்கா தோற்றமளிக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் இந்தப் போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.
அனுஷ்கா இந்தப் படத்தில் மாஸ்டர் செஃப் ஆக நடிப்பதாகவும், நவீன் ஸ்டாண்ட் அப் காமெடியனாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் இந்த ஆண்டு சம்மர் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: தான் மறைந்தாலும் தன் கலையால் இன்றளவும் வாழ்ந்து கொண்டு இருக்கும் முதல் சூப்பர் ஸ்டாருக்கு 114ம் பிறந்த நாள் இன்று