ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அனிமல் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. அமித் ராய் ஒளிப்பதிவு செய்து அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்படத்தை இயக்கியுள்ளார். டி சீரீஸ் ஃபிலிம்ஸ், பத்ரகாலி பிக்சர்ஸ் மற்றும் இனி ஒன் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளது. அனிமல் திரைப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.


கதை


தன்னுடைய தந்தையின் மேல் அதீத பாசம் வைத்திருக்கும் ஒரு மகன், அந்த தந்தையின் அன்பபையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்காக எந்த எல்லைவரை செல்வான் என்பதே அனிமல் திரைப்படத்தின் கதை.   


அப்படியான ஒரு மகனாக  நடித்திருக்கிறார் ரன்வீர் கபூர் அவரது தந்தையாக அனில் கபூர் நடித்திருக்கிறார். சிறிய வயதில் இருந்தே  இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான தனது தந்தையின் அன்பிற்காக மட்டுமே ஏங்கும் விஜய் (ரன்பீர் சிங்) கோபமான ஒரு இளைஞனாக வளர்கிறார். தன் தந்தை தன்னை எவ்வளவு காயப்படுத்தினாலும், அவரது உயிருக்கு ஒரு ஆபத்து ஏற்படும்போது அவரது எதிரிகளை கண்டுபிடித்து பழிவாங்க உறுதியேற்கிறார்.  தந்தை மகனுக்கு இடையில் இருக்கும் இந்த சிக்கலான உறவு நிலையை, ரத்த நெடியை, பார்வையாளர்கள் உணரும் அளவிற்கு ஒரு கேங்ஸ்டர் படமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர்.


ஒரு வழக்கமான கேங்ஸ்டர் படம் என்று அனிமல் படத்தை சொல்லிவிட முடியாது. ஏனென்றால் அதற்கான எந்த கதையமைப்பும் இந்தப் படத்தில் கிடையாது. பல வருடங்களுக்கு இரு குடும்பங்களுக்கு இடையில் நிகழ்ந்த ஒரு மோதலும், அதனால் ஏற்பட்ட பகையும் மட்டுமே இவ்வளவு அதீதமான வன்முறைக் காட்சிகள் நிறைந்த ஒரு படத்திற்கு அடித்தளமாக இருக்கின்றன.


தன்னுடைய தந்தையின் மீது கிட்டதட்ட அன்புப் பைத்தியமாக இருக்கும் ஒருவனின் மனதை படம்பிடித்து காட்டுவதே அனிமல் படத்தின் முக்கியமான நோக்கமாக இருக்கிறது. 


விமர்சனம்


அனிமல் படத்தைப் பற்றி சுருக்கமாக சொல்வதென்றால், ஆண் என்கிற அடையாளத்திற்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்து கொண்டாடும் ஒரு படம் என்று சொல்லலாம். படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை படத்தின் நிறைந்திருப்பது ஆண் மையச் சிந்தனையே. ஒவ்வொரு வசனம் , ஒவ்வொரு நகைச்சுவை,   ஒவ்வொரு காட்சி என இயக்குநர் அவருடைய விளக்கங்களை படம் முழுவதும் திணித்து வைத்திருக்கிறார். 


இந்த உலகத்திற்குள் இருக்கும் பெண்கள் அனைவரும் மனம் பிறழ்ந்த இந்த ஆண்களைத் தாங்கிக்கொள்ளும் சக்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படி உருவாக்குவதன் மூலன் தன் வக்கிரங்களுக்கு நியாயம் சேர்க்க முடியும் என்று நினைக்கிறார்போல இயக்குநர் வங்கா. படத்தில் அத்தனை நகைச்சுவை காட்சிகளும் ஆணின் ஆண் தன்மையை மையப்படுத்தியே.  இந்த கதைக்குள் ஹீரோக்கும் வில்லனுக்கு எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. வில்லன் தன் வீட்டுப் பெண்களை எப்படி நடத்துகிறாரோ அதேபோல் தான் ஹீரோ தன் வீட்டுப் பெண்களையும்  நடத்துவார்.


ஒரு வில்லன் எவ்வளவு மோசமானவன் என்று காட்டுவதற்கு, அவன் தன்னுடைய ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை எப்படி நடத்துவான் என்பதுதான், அர்ஜுன் ரெட்டி இயக்குநரைப் பொறுத்தவரை நியாயம் என்பதுபோல காட்டப்படுகிறது


ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களை பிற ஆண்களிடம் காப்பாற்ற கடமைப்பட்டவர்கள். அதற்காக அவர்கள் எந்த எல்லைவரை செல்லலாம். ஆனால் பெண்கள் படித்தவர்களாக இருந்து சொந்தமாக சிந்திக்கக் கூடியவர்களாக இருந்தால், அவர்கள் இந்த ஆண்களை தன் விருப்பத்தில் பேரில் தேர்ந்தெடுப்பவர்கள் என்பதை காட்டுவதன் மூலம் தன் கருத்துக்கள், ஃபேண்டஸிகளை எல்லாம் இயக்குநர் நிறைவேற்றிக் கொள்கிறார். தன் தந்தையினால் முறையான அன்பைப்பெறாத ஒருவர்  சகித்துக் கொள்ள முடியாத நடவடிக்கைகளை செய்கிறார் என்று அவர்மீது பாவப்படச் சொல்கிறார் சந்தீப் ரெட்டி வங்கா.


நடிப்பு, இசை, ஒளிப்பதிவு எப்படி?


சுமார் மூன்றரை மணிநேரம் நிகழும் இந்த கதையை தூக்கி நிறுத்தும் ஒரே ஆயுதமான இருப்பது ரன்பீர் கபூரின் நடிப்பு. ரன்பீர் கபூரின் முந்தையப் படங்களில் அவரது நடிப்பை மறக்கும்படியாக இந்த கதாபாத்திரத்தை நிஜமாக்கியிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் ஆகியவர்கள் சிறப்பாக நடித்துள்ளார்கள். வெவ்வேறு இசையமைப்பாளர்கள் சேர்ந்து வெரைட்டியான ஒரு ஆல்பத்தைக் கொடுத்திருக்கிறார்கள். மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் மிகச் சிறப்பாக படம்பிடிக்கப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால் இந்த ஆண்டு வெளியான ஆக்‌ஷன் திரைப்படங்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது அனிமல் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள்.