Agent Kannayiram Review in Tamil: லேபிரிந்த் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ''ஏஜென்ட் கண்ணாயிரம்'' இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். இவர்களுடன், முனிஷ் காந்த், குக் வித் கோமாளி புகழ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.தெலுங்கில் வெற்றி பெற்ற 'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' படத்தின் ரீமேக் தான் இந்த ஏஜென்ட் கண்ணாயிரம். 


படத்தின் கரு:


சிறுவயதில் தாய் மீது கொண்ட கோபத்தால் சிட்டியில் தனித்து வாழும் சந்தானம் (கண்ணாயிரம்), தாயின் இறப்பு செய்தி வர கோயம்புத்தூரில் உள்ள சொந்த கிராமத்திற்கு புறப்படுகிறார். ஊருக்குச் செல்லக் கூட கையில் காசு இல்லாமல், லாரியில் லிப்ட்டு கேட்டு ஒரு வழியாக வந்து சேர்ந்தவரால், கடைசியில் தாயின் முகத்தைக் காண முடியவில்லை.


கடைசியாக ஒரு முறை கூட தாயைக் காணமுடியவில்லையே என்ற வருத்தத்துடன் இருக்கிறார் சந்தானம்.  இந்த நிலையில் ஊரில் நடக்கும் இறப்புகளின் பின்னணி, கொலையா என ஆராயும் முயற்சியில் ப்ரைவேட் டிடெக்டிவ்வாக செயல்படுகிறார். தொடர்ச்சியாக ரயில் தண்டவாளம் ஓரம் கிடக்கும் அனாதை பிணங்கள், போலீஸின் அலட்சிய போக்கு…போலீஸுக்கும் இவருக்கும் இடையே ஊடல் என கதை நகர…ஒரு கொலையில் சந்தானத்தை சந்தேகித்து கைது செய்கின்றது போலீஸ். 


லாக்கப்பில் ஒரு தந்தையின் சோகக் கதையைக் கேட்ட கண்ணாயிரம் ஏஜெண்ட் கண்ணாயிரமாக மாற கதை சூடு பிடிக்கிறது. கண்ணாயிரம், லாக்கப்பில் சந்தித்த அந்த நபர் யார்? அவரது கதை என்ன..அவருக்கு உதவும் முயற்சியில் ஏற்படும் திருப்பங்கள்… இறுதியில் சந்தானம் டிடெக்டிவாக தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா?  என்பதே ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் கரு.



காமெடி த்ரில்லர் திரைப்படமாக ஏஜெண்ட் கண்ணாயிரம் வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும். சந்தானத்தின் அளவான கவுண்டர்கள் அனைத்தும் ரசிக்க வைக்கும் படியே அமைந்தது. எமோஷன், காமெடி, த்ரில்லர் என ஒரு கம்ப்ளீட் பேக்கேஜாக களமிறங்கியுள்ளது ஏஜெண்ட் கண்ணாயிரம். விஜய் டிவி புகழ், கிங்ஸ்லி என படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.


மெடிக்கல் மாஃபியாவை கண்டறியும் ப்ரைவேட் டிடெக்டிவ்வாக சந்தானம் கலக்கியிருக்கிறார். உடல் உறுப்பு திருட்டைத் தாண்டி, மருத்துவத்துறையில் நடக்கும் இன்னொரு குற்றம் பற்றி இந்த படம் பேசியுள்ளது. படத்தின் தொடக்கத்தில் வந்த அனிமேஷன் காட்சிகள், நடுநடுவே வந்த ட்ரான்சிஸன்கள் என புது சுவையை அளித்தது.


தாயை இழந்து வாடும் மகனாக, சமுதாயத்தில் அந்தஸ்து பெற துடிக்கும் இளைஞனாக சந்தானம் வரும் எமோஷனல் காட்சிகள் மனதை நெருடும். தாய்க்கு இறுதி சடங்குகள் செய்ய முடியாத குற்ற உணர்ச்சியில் தூக்கமின்றி வாடும் காட்சிகள், நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் காட்சிகள், டிடெக்டிவாக கண்டுபிடிக்கும் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என நடிப்பில் நியாயம் செய்திருக்கிறார் சந்தானம். 


அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ஆதிரா பாண்டிலக்ஷ்மி; சொந்த கணவர் வீட்டில் மகனுடன் வேலைக்காரியாக வரும் காட்சிகள், பின்பு கணவரின் மனைவி இறப்பிற்கு பின் ஜமீன்தார் மனைவியாக வரும் காட்சிகளில் தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.


கதாநாயகி ரியா சுமன்(ஆதிரை) கதை நாயகியாக இல்லாமல் துணை நடிகையாக தான் இருக்கிறார். ஆவணப்படம் எடுக்க சந்தானத்தின் கிராமத்திற்கு வருகிறார், ஆதிரை. அப்போது சந்தானத்துடன் நட்பு ஏற்பட, அனாதை பிணங்களின் பின்னணியை கண்டறிய சந்தானத்திற்கு உதவியாக இருக்கிறார். முனிஷ்காந்த்தின் நடிப்பு அபாரம்,படத்தில் அவர் அழும் காட்சி கண்ணாயிரத்தை மட்டுமல்ல; பார்வையாளர்களையும் கண் கலங்க வைத்தது‌.


முதல் பாதியில் இருந்தே படம் விறுவிறுப்பாக தொடங்க, இரண்டாம் பாகத்திலும் விறுவிறுப்பு குறையாத வண்ணம் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் மனோஜ். யுவன் ரசிகர்களின் ஏமாற்றமாக, படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை… ஆனால் பின்னணி இசையில் திரைக்கதையை சலிப்பில்லாமல் கொண்டு சென்ற விதம் சிறப்பு. படத்தில் திருப்பங்கள் யூகிக்க முடியாத வண்ணம் அமைந்துள்ளது. படத்தின் நீளம் ஒரு சின்ன குறை. இரண்டாம் பாக விறுவிறுப்பை சலிப்பாக பார்க்க வைத்துவிட்டது. எடிட்டர் அஜய் எடிட்டிங்கில் புதிய ட்ரான்சிசன்களை பயன்படுத்தி உள்ளார். ஒளிப்பதிவு பொறுத்த வரை எந்த குறையும் இல்லை. இரண்டாம் பாகத்தில் சிறிய மட்டும்ம் சிறு களைப்பை ஏற்படுத்தியது.


மொத்தத்தில் ஏஜெண்ட் கண்ணாயிரம் திரைப்படம் சந்தானம் கேரியரில் சிறந்த ஒன்றாக நிச்சயம் அமையும்.