பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமான நகுல் தனக்கென தமிழ் சினிமாவில் தனி இடம் கிடைக்க போராடி வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாஸ்கோடாகாமா. அறிமுக இயக்குனர் ஆர்.ஜி.கே. இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நகுல் திரை வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
படத்தின் கதை என்ன?
நகுல், வம்சி கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார். முனிஷ்காந்த், ஆனந்தராஜ் என பெரிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். படம் நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலத்தில் நடப்பது போல படமாக்கப்பட்டுள்ளது. அதாவது, பூமி படைக்கப்பட்டபோது நல்லவர்கள் மட்டுமே வாழ்ந்தனர், பின்னர், நல்லவர்கள் தீயவர்களும் தனித்தனியாக வாழ்ந்தனர், அதன்பின்பு நல்லவர்களும் தீயவர்களும் ஒன்றாக வாழ்ந்தனர் என்றும், அதற்கு அடுத்து தீயவர்களே பெரும்பாலானவர்கள் வாழ்வதாகவும், அவர்களுக்காகவே சட்டங்களும், அரசுகளும் நடைபெறுவதாகவும், அங்கு நல்லவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படும் காலம் வரும் என்றும், அந்த காலத்தில் படத்தின் கதை நடப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
தீமை செய்பவர்கள், தீயவர்கள் மட்டுமே வாழ்ந்து வரும் காலத்தில் நல்லவனாக வாழும் வாசுதேவன் (நகுல்) சந்திக்கும் சிரமம் என்ன? எதனால் வாசுதேவன் சிறைக்குச் செல்கிறான்? அந்த சிறையில் அவன் சந்திக்கும் சவால் என்ன? இதுவே படத்தின் கதை.
பலவீனமான திரைக்கதை:
படத்தின் கதை வித்தியாசமாக இருந்தாலும் திரைக்கதை மிக பலவீனமாக இருப்பதால் படத்துடன் நாம் ஒட்டுவதற்கு மிகவும் சிரமமாக அமைகிறது. கதை எந்த வருடத்தில் நடக்கிறது என்று காட்டியிருந்தாலாவது ரசிகர்கள் சற்று அந்த மனநிலைக்கு மாறியிருக்கலாம்.
நல்லவர்கள்தான் எதிர்காலத்தில் தவறானவர்களாக கருதப்படுவார்கள் என்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால் அதற்காக அமைக்கப்பட்டுள்ள காட்சிகளும், வசனங்களுடனும் ரசிகர்கள் இணக்கமாவதற்கு நேரம் எடுக்கிறது. படத்தின் முதல் பாதி வசனங்களாலும், எதிர்காலத்தில் தீயவர்களாக இருந்தால் மட்டுமே வாழ முடியும் என்பதை காட்டுவதற்கான காட்சிகளுடனே கதை செல்கிறது.
இரண்டாம் பாதி முழுவதும் சிறையிலே நகர்கிறது. இரண்டாம் பாதியில் கே.எஸ்.ரவிக்குமாருக்கான கடைசி சில காட்சிகளில் மட்டுமே ட்விஸ்ட் வருகிறது. அதிநவீன வசதிகளுடன், அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள், ஜெயிலர் விருப்பத்திற்கு நடக்கும் போட்டிகள், சிறையில் பணியாற்றும் காவலர்களின் உடைகள் என எதுவுமே ரசிகர்களுக்கு இணக்கமாக அமையவில்லை. எந்தவொரு படமும் ரசிகர்களுக்கு அன்னியப்பட்டதாக அமைந்துவிட்டால் படத்துடன் இணைவதற்கு சிரமங்கள் இருக்கும்.
படம் எப்படி?
படத்தின் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியில் ஏராளமான குறைகள் இருந்தாலும் தேவையற்ற பாடல்கள் வைக்காமல் இருந்ததே படத்திற்கு பலம். மேலும், கே.எஸ்.ரவிக்குமார் காட்சிக்கு கொடுக்கப்பட்ட பில்டப் காட்சிகளை இன்னும் அதிகமாக வைத்திருந்தாலோ, அல்லது கே.எஸ்.ரவிக்குமாருக்கும், வம்சி கிருஷ்ணா, நகுல் தொடர்பான காட்சிகளை வைத்தே அதை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருந்தாலே கண்டிப்பாக சுவாரஸ்யமாக அமைந்திருக்கும்.
பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்றே கூற வேண்டும். நாயகி அர்த்தனா சில காட்சிகள் வந்தாலும் ரசிக்கும் வகையில் இருந்தார், நீண்ட இடைவேளைக்கு பிறகு பிஜிலி ரமேஷ் திரையில் வந்தார். திரைக்கதையில் தனிக்கவனம் செலுத்தி காட்சிகளை வடிவமைத்திருந்தால் இந்த வித்தியாசமான முயற்சி ரசிகர்களுக்கு பிடித்திருக்கலாம்.