விக்ராந்த் மாஸி


கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 12th ஃபெயில். விது வினோத் சோப்ரா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். விகாந்த் மாஸி, மேதா சங்கர், சஞ்ஜய் பிஷ்னாய் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இப்படம் ஓடிடியில் வெளியானது. ஐ.பி.எஸ் அதிகாரி மனோஜ் குமாரை மையப்படுத்தி அனுராக் பாதக் எழுதிய புத்தகத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. உணர்ச்சிகரமாக ஒரு படமாக எடுக்கப்பட்ட இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. மனோஜ் குமார் தனது வாழ்க்கையில் இருந்த சவால்களை எதிர்கொண்டு ஐ.பி. எஸ் பரிட்சையில் வெற்றிபெறும் தருணம் மிக உணர்ச்சிகரமாக இப்படத்தில் சித்தரிக்கப்பட்ட விதம் ரசிகர்களை மிக உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.



விக்ராந்த் மாஸி இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் நடித்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக இப்படத்தின் உதவி இயக்குநர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இப்படி கூறியுள்ளார். “இந்தப் படத்தின் இறுதிகாட்சியில் கதாநாயகன் மனோஜ் குமார் தனது தேர்வு முடிவுகளைப் பார்த்து மிகவும் உணர்ச்சிவசமாக அழுவார். நின்றவாக்கில் தரையில் முழங்காலில் விழுந்து அழ வேண்டும். அந்த காட்சி நிறைய டேக் எடுத்தது , ஆனால் விக்ராந்த் மாஸி மறுபடி மறுபடி எழுந்து மீண்டும் முழங்காலில் விழுந்து  நடித்துக்கொண்டே இருந்தார். அந்த காட்சியில் அவருக்கு ஒரு வசனம்தான் இருந்தது.


சிறந்த நடிகருக்கான தேசிய விருது






இப்படத்தின் கடைசி காட்சியின் படப்பிடிப்பின் போது தான் மிகவும் உணர்ச்சிவசப் பட்டதாகவும் தனக்கு இந்த அங்கீகாரம் கிடைக்க 19 ஆண்டுகள் ஆகியிருப்பதை நினைத்து கதறி அழுததாகவும் விக்ராந்த் மாஸி முன்னதாக தெரிவித்திருந்தார். தற்போது அவருக்கு  2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் இந்த தகவல் ஓரளவிற்கு சினிமா வட்டாரங்களில் உறுதியாக கூறப்படுகிறது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் விக்ராந்த் மாஸி ‘ ஆளுநர் மாளிகைச் சென்று தனக்கு இந்த பெருமையான விருது வாங்குவது வாழ்நாள் கனவு என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு இந்த விருது கிடைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசிக் கொள்வது நம்ப முடியாத ஒரு உணர்வாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.