Aavesham Movie Review in Tamil: ஃபகத் ஃபாசில் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் ஆவேஷம். ஹிப்ஸ்டர், மிதுன் ஜெய் ஷங்கர், ரோஷன் ஷானவாஸ், மன்சூர் அலிகான், சஜுன் கோபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். ஆவேஷம் படத்திம் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.


ஆவேஷம்




கேரளாவைச் சேர்ந்த பிபி, அஜு, சாந்தன் ஆகிய மூவரும் இஞ்சினியரிங் படிக்க பெங்களூரில் பெரிய கல்லூரிக்குச் செல்கிறார்கள். சீனியர்கள் ரேக் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒரு வேகத்தில் அவர்களை எதிர்க்க முடிவு செய்கிறார்கள். சீனியர்களிடம் மோதினால் அதற்கு என்ன பலன் கிடைக்குமோ அதுதான் மூவரின் கதியும்.


மூன்று பேரையும் நாட்கணக்கில் கொண்டு போய் சாப்பாடு போட்டு அடித்து வெளுக்கிறார்கள். தங்களை அடித்தவர்களை எப்படியாவது திருப்பி அடிக்க வேண்டும் அதற்கு உள்ளூர் ரவுடிகளை தங்களது நண்பர்களாக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒவ்வொரு வைன் ஷாப்பாக சென்று அங்கு இருப்பவர்களுடன் பழக முயற்சிக்கிறார்கள். அப்படி அவர்கள் கடைசியாக போய் சேரும் ஆள்தான் ரங்கா ( ஃபகத் ஃபாசில்)


சிறப்பான ஹீரோ எண்ட்ரி




சமீபத்தில் வெளியான படங்களில் சிறந்த ஹீரோ எண்ட்ரி என்று இப்படத்தில் ஃபகத் ஃபாசிலின் எண்ட்ரியை சொல்லலாம். மூவரும் ரங்காவுடம் நெருங்கி பழகத் தொடங்குகிறார்கள். அதே நேரம் ரங்காவும் மூவரின் மேல் அளவுகடந்த அக்கறை காட்டுகிறான். சேர்ந்து குடிப்பது, சண்டை பார்க்க கூட்டிப்போவது என மூவருக்கும் எல்லா வசதிகளையும் செய்து தருகிறான் ரங்கா. ரங்காவை வைத்து தங்களை அடித்த சீனியர்களை புரட்டி எடுத்து கல்லூரியில் பிரபலமாகிறார்கள் மூவரும். ஆனால் இந்த மூவருக்கும் இருக்கும் உண்மையான பிரச்சனை சீனியர்கள் இல்லை ரங்கா தான் என்பது கொஞ்சம் லேட்டாக தான் அவர்களுக்கு புரிய வருகிறது. அது என்ன பிரச்சனை? பாசமான இந்த கேங்ஸ்டருக்கு பின் இருக்கும் இன்னொரு பக்கம் என்ன என்பது தான் மீதிக்கதை.


கேங்ஸ்டர் படம் என்றாலே அதில் பில்டப் கொஞ்சம் தூக்கலாக இருப்பது வழக்கம். ஆவேஷம் படத்திலும் அந்த மாதிரியான பில்ட் அப் நிறைய இருக்கின்றன. ஆனால் அந்த பில்டப் நாம் எதிர்பார்க்காத வகையில் இருக்கின்றன. மிகப்பெரிய ரவுடிகளின் கூட்டத்திற்கு தலைவனாக இருக்கு ஃபகத் ஃபாசில் ஒருவரைக் கூட அடிப்பதில்லை. எல்லா சண்டைகளிலும் அவரது வேலை யாரை எப்படி அடிக்க வேண்டும் என்று தன் அடியாட்களிடம் சொல்வது தான்.


தனது அம்மாவிடம் இனிமேல் யாரையும் அடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டதால் ரங்கா யாரையும் அடிப்பதில்லை என்று ஒரு பிளாஷ்பேக் சொல்லப்படுகிறது. ரங்கா என்பவர் யார்? அவன் எப்படி இவ்வளவு பெரிய ரவுடி ஆனான் என்று அவனைப் பற்றி சொல்லப்படும் எந்த கதையும் நம்பும்படியாக இருப்பதில்லை. சீரியஸான காட்சிகளில் எல்லாம் ரங்காவின் செயல்கள் எல்லாம் காமெடியாக முடிகின்றன. உண்மையாவே இந்த ஆள் கேங்ஸ்டர்தானா இல்லை, ஊரை ஏமாற்றுகிறானா என்கிற சந்தேகம் பார்வையாளர்களுக்கு ஏற்படும் நேரத்தில் இந்த பில்ட் அப் காட்சிகள் நம்மை வாய்பிளக்க வைக்கின்றன.


க்ளைமேக்ஸ் காட்சி ரசிகர்களுக்கு ஆக்‌ஷனும் காமெடியும் கலந்த ஒரு ட்ரீடாக நிச்சயம் இருக்கும்.


நடிப்பு எப்படி?


கேங்ஸ்டர் என்றால் சைலண்டாக இருந்து மிரட்டுவது. ஆனால் கிட்டத்தட்ட ஒரு காமெடியான உடல்மொழியை வைத்து நம்மை சிரிக்க வைக்கும் ஃபகத் ஃபாசில் அடுத்த காட்சியில் கொடூரமான இரக்கமில்லாத ஒருவனாக தெரியும்படி தன் நடிப்பை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். கழுத்து நிறைய நகைகளை அணிந்துகொண்டு வெள்ளை சட்டை பேண்ட் போட்டுக்கொண்டு சட்டை கிழியாமல் சண்டை செய்யும் ஃபகத் ஃபாசிலை பார்த்துகொண்டே இருக்கலாம்.


ஃபகத் ஃபாசிலுக்கு அடுத்தபடியாக சஜூன் கோபியின் கதாபாதிரமும் அவரது நடிப்பும் சிறப்பாக உள்ளது.  சுஷின் ஷியாமின் பின்னணி இசை. சமீர் தாஹிரின் ஒளிப்பதிவு , விவேக் ஹர்ஷனின் ஒளிப்பதிவும் இணைந்து ஆவேஷம் படத்தை ஒரு சிறப்பான சம்பவமாக மாற்றுகின்றன.