அறிமுக இயக்குநர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வரும் ஜூலை 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தேஜாவு’. மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார்.
கதையின் கரு:
டிஜிபி ஆஷா (மதுபாலா) வின் மகளை ஒரு மர்மகும்பல் ஒன்று கடத்தி விடுகிறது. அவரை மீட்க, அன் அபிஷியல் போலீஸ் அதிகாரி என்ற பெயரில் களத்தில் இறங்குகிறார் விக்ரம் குமார் ( அருள்நிதி). இந்த கடத்தலில் எழுத்தாளராக வரும் அச்யுத் குமாருக்கு தொடர்பு இருப்பது தெரியவர, அவரிடம் விசாரணை நடத்தியதில், இந்த வழக்கில் நடக்கும் சம்பவங்களையும், அடுத்து விசாரணையில் தொடரும் சம்பவங்களையும், அவர் முன்னமே கதையாக எழுதி வருவது தெரிகிறது.
இந்தக்கதைக்கும் அந்த கடத்தல் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு. ..? இறுதியாக விக்ரம் ஆஷாவின் மகளை கண்டுபிடித்தாரா..? கடத்தல் சம்பவத்திற்கு பின்னால் உள்ளவர்கள் யார்? ஏன் அந்த கடத்தல் சம்பவம் அரங்கேற்றப்பட்டது..? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில் தான் மீதிக்கதை
த்ரில்லர் ஜானருக்கு பேர் போன அருள்நிதியின் கேரியரில், அடுத்த நல்ல படமாக வந்திருக்கிறது தேஜாவு. பெரிதான மெனக்கெடல் இல்லையென்றாலும், கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். டிஜிபியாக வரும் மதுபாலாவின் நடிப்பு அசத்தல். படம் முழுக்க வரும் அவரின் கதாபாத்திரம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. அதே போல, எழுத்தாளராக வரும் அச்யுத் குமாரும், தனது நடிப்பால் கதாபாத்திரத்தை கவனம் பெற செய்திருக்கிறார்.
த்ரில்லர் ஜானரின் பெரும் பலம் அதில் இருக்கும் சஸ்பென்ஸ். அந்த சஸ்பென்ஸை, தனது திரைக்கதையால் இறுதி வரை சுவாரசியம் குறையாமல் பார்த்துக்கொள்கிறார் அறிமுக இயக்குநர் அரவிந்த் சீனிவாசன். பாடல்கள், ஃபைட் வேண்டாமென முடிவெடித்து, கதைக்கு என்ன தேவையோ,அதை மட்டும் செய்திருப்பது நிச்சயம் பாராட்டத்தக்கது.
படத்தின் இருபெரும் தூண்களாக நிற்பது இசையமைப்பாளர் ஜிப்ரானும், ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவும். முத்தையா காட்சிகளை தனது ஒளிக்கண்களால் செதுக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசையை கனகச்சிதமாக கொடுத்து படத்தை கரை சேர்த்திருக்கிறார். ஆரம்பத்தில் கதை வர நேரம் எடுத்துக்கொண்டமை, பல இடங்களில் விஷ்வலாக இல்லாமல் வார்த்தைகளால் கதை சொன்னது போன்றவை பலவீனமாக இருந்தாலும் கூட, தேஜாவு நிச்சயம் பெரிதாக ஏமாற்றவில்லை.