ஹாலிவுட்டின் பிக்ஸர்ஸ் மற்றும் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் அனிமேஷன் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக இவர்களின் டாய் ஸ்டோரி, ஃபைன்டிங் நீமோ ஆகிய படங்கள் 90’ஸ் கிட்ஸ்ளிடையே மிகவும் பிரபலம்! அந்த வகையில் லைட் யியர் படத்தையும் ஓடிடி தளத்திள் வெளியிடவுள்ளதாக பிக்ஸார்  நிறுவனம் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. 


சயின்ஸ் பிக்ஷன் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், டாய் ஸ்டோரி படத்தில் வரும் பஸ் லைட் யியர் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தின் பின்னனி கதையை கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதாப்பாத்திரத்திற்கு மார்வல் புகழ் கிறிஸ் எவன்ஸ் குரல் கொடுத்துள்ளார். 


திரையரங்குகளில் வெளியீடு:


கடந்த மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் உலகெங்கும் உள்ள அனிமேஷன் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. மேலும் வசூல் ரீதியாக ஹிட் அடித்து மக்களிடையே நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் லைட் யியர் படத்தை வெளியிடவுள்ளதாக பிக்ஸார் நிறுவனம் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. 






ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும்..


"லைட்இயர் படத்தை பெரிய திரையில் காணும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது, ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படத்தை வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் வாழ்நாளின் பல வருடங்களை இந்தப் படத்திற்காக நாங்கள் அர்ப்பணித்துள்ளோம், அதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்”  என லைட் யியர் திரைப்படத்தின் இயக்குநர் அங்கஸ் மெக்லன் வெளிநாட்டு இதழ் ஒன்றிற்கு கொடுத்துள்ள கொடுத்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். 


"டாய் ஸ்டோரி, என் வாழ்வில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய படம். இதில் கதாப்பாத்திரங்கள் யாவும் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தக்கூடிய வகையில் அமையப்பெற்றிருக்கும்.நான் பிக்ஸார் திரைப்படங்களின் மிகப்பெரிய ரசிகன். இப்படத்தில் நடிக்க ஆரம்பிக்கும் போது மிட்டாய் கடைக்குள் நுழைந்த சிறுவனைப் போல் உணர்ந்தேன்." என்று படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறுகிறார் கிறிஸ் எவன்ஸ். 




கதையின் கரு:


இப்படத்தில் கதாநாயகனான வரும் பஸ் லைட் யியர், இளம் விண்வெளி வீரராக உள்ளார். தொலைதூர கிரகத்தில் தொலைந்த பிறகு பூமிக்கு திரும்பி வரும் வழியை  தனது விண்வெளிக் குழுவுடன் சேர்ந்து எப்படி  கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. 


படத்திற்கு தடை!


லைட் யியர் திரைப்படத்தை வெளியிட எகிப்து, மலேசியா, சவுதி அரேபியா, இந்தோனேஷியா உள்ளிட்ட 14 நாடுகள் தடை விதித்தன. குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட இப்படத்தில் தன் பாலின உறவுகள் (LGBTQ) தொடர்பான காட்சிகள் மற்றும் கதாப்பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி இப்படத்திற்கு தடை விதித்ததாக அந்நாடுகளின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


இதே காரணங்களுக்காக  மார்வல் வரிசை படங்களான எட்டர்னல்ஸ் மற்றும் மல்டி வர்ஸ் ஆஃப் மேட்னஸ் ஆகிய படங்களுக்கும் சவுதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளில் வெளியிட தடைசெய்யப்பட்டது குறிப்படத்தக்கது. 


தற்போது லைட்யியர் திரைப்படம் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதால் இதற்கு எப்படி அந்நாடுகளில் தடை விதிக்கப்போகிறது என தெரியவில்லை.