டார்வின் குரியகோஸ் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ளப் படம் 'அன்வேஷிப்பின் கண்டேதும்' . அர்த்தனா பினு, சித்திக், இந்திரன்ஸ், ஷம்மி திலகன் , பாபு ராஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான இப்படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.






கதை.


1980 களில் கேரள மாநிலத்தில் கோட்டையத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் தொடங்குகிறது படம். இந்த காவல் நிலையத்தில் புதிய சப் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்படுகிறார் ஆனந்த் நாராயணன் ( டொவினோ தாமஸ்). மிகுந்த கனவுகளுடனும் லட்சியத்துடனும் இந்த வேலையில் அவர் சேர்ந்திருக்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம். 




அதே ஊரில்  இளம்பெண் ஒருவர் காணாமல் போக அதை விசாரிக்கத் தொடங்குகிறார். இந்த விசாரணையின் ஒரு கட்டத்தில் கிறிஸ்தவ ஆலையத்தின் பாதிரியாரை விசாரிக்க வேண்டிய நிலைக்கு விசாரணை செல்லும் போது உயர் அதிகாரிகள் ஆனந்த் நாராயணனை இந்த விசாரணையை விட்டு விலக்கி தங்கள் கையில் எடுத்துக் கொண்டு பொய் குற்றவாளியை வைத்து வழக்கை முடிக்கத் திட்டமிடுகிறார்கள்.


தன்னுடைய விடாப்பிடியான முயற்சியால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும் ஆனந்த் இந்த கேஸை முடிக்கும் நிலையில் ஒரு முக்கியமான திருப்பம் ஏற்படுகிறது. இதனால் ஆனந்த் மற்றும் அவருடன் இருக்கும் மூன்று பேர் உட்பட நான்கு பேரும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். முதல் பாதி முடிகிறது.


முதல் பாதியில் இருக்கும் அதே விறுவிறுப்பு இரண்டாம் பாதியிலும் தொடர்கிறது. தங்களது தண்டனை காலம் முடிந்து திரும்பும் இந்த நால்வர் தங்களது  மேல் இருக்கும் கெட்ட பெயரை நீக்க அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆறு வருடங்களுக்கு முன் இறந்து போன பெண் ஒருவரின் வழக்கை விசாரிக்க இவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளை இவர்கள் கண்டு பிடித்தார்களா. என்பதே மீதிக் கதை.


விமர்சனம்


நீ ஒன்றை தேடுகிறாய் என்றால் அது நிச்சயம் உனக்கு கிடைக்கும் என்பது இந்தப் படத்தின் டைட்டிலுக்கு அர்த்தம். முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி இரண்டும் தனித்தனியாக இரண்டு படங்களின் கதைக்களங்களாக அமைந்துள்ளது இப்படம். ஒவ்வொரு கதையிலும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் உள்ளது. இரண்டு கதைகளை விசாரணை செய்யும் விதங்களும் சுவாரஸ்யமாக கையாளப்பட்டிருக்கின்றன். அதற்கேற்றபடி டொவினோ தாமஸ் மற்றும் பிற நடிகர்கள் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை ஒரு சில காட்சிகளுக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது.


என்ன மைனஸ்


விறுவிறுப்பான ஒரு த்ரில்லரான படமாக எத்தனையோ அம்சங்கள் படத்தில் இருக்கின்றன. அதே நேரத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள ஆனந்த் கதாபாத்திரம் இன்னும் கூட விஸ்தீரனமாக எழுதப்பட்டிருக்கலாம். இரண்டு வெவ்வேறு கதைகளை கொண்ட இப்படம் ஒரு படமாக முழுமை பெற தவறிவிடுகிறது. மற்ற கதாபாத்திரங்கள் படம் முழுவதும் கதாநாயகனுடன் இருந்தும் அவர்களுக்கு பெரிய அளவில் எந்த பங்கும் இருப்பதில்லை. கதாநாயகனால் மட்டுமே வழிநடத்தப்படும் படத்தில் இன்னும் கூட உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்திருக்கலாம். இயக்குநர் செய்த ஒரு நல்ல விஷயம் பேயருக்கு ஒரு காதலியை ஹீரோவுக்கு வைக்காமல் விட்டது.


வழக்கமான த்ரில்லர் படங்களை விட அன்வேஷிப்பில் கண்டேதும் படம் எதார்த்தத்துடன் ஒன்றியதாக இருக்கிறது. கதை நடக்கும் நிலம் ஒளிப்பதிவாளர் அதை காட்சிப்படுத்தும் விதம் பார்வையாளர்களை ஒரு முழுமையான த்ரில்லரை எதிர்பார்த்து ஆயத்தமாக்குகின்றன. ஆனால் கதை அந்த அழுத்தம் இல்லாதது ஏமாற்றம் தான்.