நடிகர் விஜய்யின் முதல் பிளாக்பஸ்டர் படமாக அமைந்த பூவே உனக்காக வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு அடைந்துள்ளது. 


1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு படம் மூலம்  இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மகன் என்ற அடையாளத்துடன் சினிமாவில் விஜய் ஹீரோவாக அறிமுகமானார். அவரின் முகம் பரீட்சையமாக தெரிய மறைந்த நடிகர் விஜயகாந்த் உதவி செய்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய செந்தூரபாண்டி படத்தில் விஜய்க்கு அண்ணனாக அவர் நடித்திருந்தார். அதேசமயம் ஹீரோவாக மக்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடிக்க விஜய்  4  ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாக இருந்தது.


இடைப்பட்ட காலக்கட்டத்தில் அவருக்கென சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் அமையவே இல்லை. இதில் பல படங்கள் அவரது அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியும் விஜய் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் தான் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்ற தகவல் வெளியானது. விக்ரமனும், சூப்பர்குட் பிலிம்ஸூம் அதற்கு முன்னால் பல வெற்றிப் படங்களை கொடுத்திருந்தனர். 


அப்படியான நிலையில் விஜய்யை வைத்து தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கிறார்கள் என பலரும் நினைத்தார்கள். ஆனால் எல்லாவற்றையும் “பூவே உனக்காக” தவிடுபொடியாக்கியது. அந்த படம் மகத்தான வெற்றி பெற்றதோடு, விஜய்யின் சினிமா கேரியரில் முதல் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இவ்வளவு  ஏன் ஒன்சைட் லவ்வர்ஸ்களின் ஆல்டைம் பேவரைட் படமாக இப்படம் அமைந்தது. 


இப்படத்தில் விஜய், சங்கீதா, சார்லி, மலேசியா வாசுதேவன், ஜெய்கணேஷ், அஞ்சு, மீசை முருகேஷ், நாகேஷ், நம்பியார், விஜயகுமாரி, சிவா, தாரிணி, சக்திகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.


படத்தின் கதை


தான் ஆசைப்பட்ட பெண்ணுடன் தான் காதல் கைகூடவில்லை. ஆனால் அப்பெண் ஆசைப்பட்டதையாவது நிறைவேற்றி வைக்கலாமே என்பது தான் பூவே உனக்காக படத்தின் கதையாகும். ஒரு ஊரில் இந்து, கிறிஸ்துவ மதங்களைச் சேர்ந்த இரு நண்பர்கள் வீட்டில் உள்ள இருவர் காதலிக்கின்றனர். காதலர்கள் வீட்டை விட்டு வெளியேற நண்பர்களாக இருந்த குடும்பம் எதிரியாக மாறுகிறது.


இதனிடையே 25 ஆண்டுகளுக்குப் பின் இந்த இரு குடும்பங்களின் பேரன் என சொல்லிக் கொண்டு விஜய் வருவார். அவர் இரு குடும்பங்களையும் இணைத்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும்போது சங்கீதா வருவார். விஜய் அந்த இரண்டு வீட்டின் பேரன் இல்லை என சங்கீதா சொல்ல, உண்மையில் விஜய் யார்? அவர் ஏன் இருகுடும்பங்களையும் சேர்த்து வைக்க மெனக்கெடுகிறார்? என்பதை பிளாஸ்பேக் காட்சிகளோடு  அழகாக சொல்லியது “பூவே உனக்காக”. 


தேனிசை பாடல்கள் 


பூவே உனக்காக படத்தில் சொல்லாமலே யார் பார்த்தது, ஆனந்தம் ஆனந்தம் பாடலும் எவர்க்ரீன் பாடலாக அமைந்தது.  இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு இப்படம் 50வது படமாக அமைந்து மிகப்பெரிய அளவில் அவரை கொண்டு சேர்த்தது.


எவர்க்ரீன் வசனங்கள்


“மதம் மனுசங்க கிட்டதான் இருக்கு.. ஆனால் காதல் காக்கா, குருவிகிட்ட கூட இருக்கு”, “காதல்ங்கறது ஒரு செடில பூக்கிற பூ மாதிரி. உதிர்ந்துருச்சின்னா உதிர்ந்ததுதான்” என படத்தில் இடம்பெற்ற வசனங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.தமிழகத்தின் பல ஊர்களிலும் 200 நாட்களை தாண்டி இப்படம் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.