கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் இயக்குநர் கிரண்ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘777 சார்லி. கன்னட மொழியில் உருவாகியிருக்கும் இந்தத்திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
கே.ஜி.எஃப்பிற்கு பிறகு மீண்டும் கன்னட சினிமாவில் இருந்து ஒரு தரம் மிகுந்த படைப்பாக ‘777 சார்லி’ உருவாகியிருக்கிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றி இருக்கிறார்.
கதையின் கரு
சிறுவயதிலேயே குடும்பத்தை இழந்த தர்மா (ரக்ஷித் ஷெட்டி) வாழ்கை மீது எந்த பிடிப்பும் இல்லாமல், தான்தோன்றித்தனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது வாழ்வில், சார்லி என்ற பெண் நாய் நுழைகிறது.
ஆரம்பத்தில் வலுக்கட்டாயத்தின் பேரால் நாயை வளர்த்து வந்த தர்மாவிற்கு, சார்லியின் அப்பழுக்கில்லா அன்பு மாற்றத்தை கொண்டுவர, தர்மாவின் எல்லாமுமாக மாறிவிடுகிறாள் சார்லி. ஒரு கட்டத்தில் சார்லிக்கு கேன்சர் இருப்பது தர்மாவிற்கு தெரிய வர, இந்த கேன்சரில் இருந்து சார்லியை தர்மா காப்பாற்றினாரா இல்லையா? அதன் பின்னரானா அவரது வாழ்கை என்ன ஆனது என்பது மீதிக்கதை.
தமிழில் நாயை மையப்படுத்தி சில படங்கள் வந்திருந்தாலும் அவற்றில் நாய்கள் பெரும்பாலும் நகைச்சுவைக்காகவும், சாகச காட்சிகளுக்காகவுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் மீறி நாய்களுக்கான உண்மை தன்மை சார்ந்த காட்சிகள் அவற்றில் இடம் பெற்றிருந்தாலும், அவையெல்லாம் மிக சொற்ப நிமிடங்களிலேயே முடிந்துவிடும். அந்த வரிசையில் சற்று மடை மாறி கதை சொல்லியிருக்கிறது. ‘777 சார்லி’.
படத்தின் பாதிமுதுகெலும்பு ரக்ஷித் ஷெட்டி என்றால் மீதி முதுகெலும்பு சார்லிதான். ஆரம்பத்தில் தனது சுட்டித்தனத்தாலும், சேட்டைகளாலும் நம்மை சிரிக்கவைக்கும் சார்லி, தனது நுணுக்கமான அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் நம் கண்களை குளமாக்கிவிடுகிறாள்.
நூல்பிடித்தாற் போல அதன் எமோஷனை எந்த பிசிறும் இல்லாமல் கடத்திய இயக்குநர் கிரண்ராஜூக்கு தனிபாராட்டுகள். அடுத்தாக ரக்ஷித் ஷெட்டி, முரடனாக வெறுப்பை கக்கும் காட்சிகளாட்டும், சார்லியுடனான அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளாட்டும், மறைக்கப்பட்ட தன் வாழ்கையை சார்லியின் மூலமாகவும், பயணத்தின் வாயிலாகவும் உணரும் காட்சிகளாட்டும் எல்லாவற்றிலும் சதம் அடித்துவிடுகிறார். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் அலட்டல் இல்லாத நடிப்பு ஆச்சரியப்படவைக்கிறது.
இப்படி ஒரு கதை நல்ல கதை, இடையில் வரும் பாபி சிம்ஹா உட்பட பல கதாபாத்திரங்களுக்கு அதற்கான கனத்தை சரியாக கொடுத்திருப்பது உள்ளிட்டவற்றை நேர்த்தியாக செய்திருக்கும் இயக்குநர் படத்தின் நீளத்தில் சற்று கோட்டை விட்டுஇருக்கிறார். இதோ முதல்பாதி வந்துவிட்டது என்று நினைக்கும் அந்தத்தருணத்தில் ஒரு பாடலை போட்டு பார்வையாளர்களை சோதிக்கவைக்கிறார்.
அதே போல இராண்டாம் பாதியில் பல காட்சிகள் நம்மை எமோஷனின் உச்சத்தில் கட்டிப்போட்டாலும், அந்த காட்சிகளுக்கு இடையே நுழையும் காட்சிகள்…நம்மை நெழிய வைத்துவிடுகின்றன. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றன. நீளத்தை மட்டும் கொஞ்சம் நறுக்கியிருந்தால் சார்லி இன்னும் கொண்டாடப்பட்டிருக்கும்.