சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள காந்தி மைதானத்தை சேர்ந்தவர் விவேகானந்தன் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பிசிஏ பட்டதாரியான பூபதி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்த நிலையில், புதிதாக பூ டெக் எனும் யூடியூப் சேனலை துவங்கி பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். 



கடந்த நான்கு வருடங்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைப்பர்களை கொண்டு பணம் சம்பாதித்து வந்த நிலையில் தனது யூடியூப் வியுவர்ஸ்களுக்காக வித்தியாசமான வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனும், சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு 1 ரூபாய் நாணயங்களாக மாற்றி தான் ஆசைப்பட்ட இரு சக்கர வாகனத்தை விற்பனையகத்தில் வாங்கியிருக்கிறார். இந்த 1 ரூபாய் நாணயங்களை பெறுவதற்காக கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு வங்கிகள் கோவில் உண்டியல் பணம் என பழனி, மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து 1 ரூபாய் நாணயங்களை பெற்று வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இதுகுறித்து பூபதி கூறுகையில்,  "வாகனம் வாங்குவது நீண்ட நாள் கனவாக இருந்தது. ஆனால் என்னைப் போன்று நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள் வாகனம் வாங்குவது அவ்வளவு எளிதல்ல. கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய நான் நண்பர்களுடன் இணைந்து பூடெக் என்று யூடியூப் நடத்தி வருகிறேன். இதில் மக்களை கவரும் விதமாக ட்ரோனில் மீன் பிடிப்பது, மொபைல் லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்திவிட்டு அதற்கான விமர்சனங்கள் கூறுவது போன்று பல வீடியோக்கள் பதிவிட்டுள்ளேன். எனது நண்பர்களுடன் இணைந்து இதுபோன்ற வீடியோக்களை யூட்யூபில் பதிவிட்டு 5 லட்சம் சஸ்கிரைப்பர்களை வைத்துள்ளேன். அதன் மூலம் வரும் வருமானத்தை நண்பர்களுடன் பகிர்ந்து நானும் எடுத்துக் கொள்வேன். இந்த நிலையில் எனது நீண்ட நாள் ஆசையாக இருந்த இரு சக்கர வாகனத்தை வாங்குவதற்கு பணத்தை சேமித்தேன். எனது இருசக்கர வாகனம் மிகவும் குறைந்த அளவு மைலேஜ் மட்டுமே கொடுக்கும் என கடையில் மேலாளர் கூறினார். தற்போது உள்ள பெட்ரோல் விலை உயர்வு தன்னைப் பெரிதும் அச்சுறுத்தியது. இதனால் மத்திய அரசுக்கு ஒரு சாமானிய நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இளைஞனின் சேமிப்பின் அவசியம் குறித்தும், பெட்ரோல் விலை நாள் ஏற்படும் பாதிப்பு குறித்தும் கொண்டு சேர்க்கும் விதமாக தனது கனவு வாகனத்தை ஒரு ரூபாய் நாணயங்களை கொண்டு வாங்குவதற்கு திட்டமிட்டு செயல் படுத்தி உள்ளேன். இதற்கு உதவிய எனது நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.