தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் என்பது குறைந்துவிட்டது. பெற்றோர் குழந்தைகளுடன் சேர்ந்து இருக்கும் பொழுது தான் குழந்தைகளிடம் நற்பண்புகள் வளர தொடங்கும் .தனியாகவே இருக்கும் குழந்தையிடம் அதீத கோபம் ,மன உளைச்சல் ஆகியவை உண்டாகும்.


குழந்தைகளிடம் பெற்றோர் கலந்து பேசி மகிழ்ந்திருக்கும் போது தான் குழந்தை ஒரு இனிமையான, பாதுகாப்பான ஒரு சுற்று சூழலைப் பெறுகிறது.


குழந்தைகளின் கோபம் மற்றும் மன உளைச்சலுக்கு , தனிமை மற்றும் கொடுமைப்படுத்துதல் முக்கிய காரணங்களாக  கருதப்படுகிறது.


மன அழுத்தம், பதற்றம் அல்லது பிற அசௌகரியங்களை எவ்வாறு சமாளிப்பது என குழந்தைகளுக்கு தெரியாததால் அவர்கள் கோபப்படும் நிலைக்கு ஆளாவதாக கூறப்படுகிறது. 


ஆகவே குழந்தைகளுக்கு கோபம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே பெற்றோரின் முதல் தலையாய கடமையாக இருக்கிறது. குழந்தைகள் மீது அன்பு ,பாசத்தை பெற்றோர்கள் வெளிப்படுத்தும் போது தான் அவர்களும் மகிழ்ச்சியாக ஒரு அரவணைப்பை பெறுவார்கள்.


தங்களது உணர்ச்சிகளை எவ்வாறு கையாள்வது என குழந்தைகளுக்கு தெரியாத போது அது தீவிர கோபம்,  ஆக்ரோஷமாக கத்துவது உள்ளிட்டவற்றின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.


பொதுவாக குழந்தைகள் கோபத்தில் கத்துவது, கூச்சலிடுவது, அழுவது,  அடிப்பது ,பொருட்களை தூக்கி எறிவது உள்ளிட்ட செயல்களில் குழந்தைகள் ஈடுபடும் போது பெற்றோர்கள் அதனை கவனத்தில் கொண்டு சரி செய்ய முற்பட வேண்டும். குழந்தைகள் கோபம். எரிச்சல் அடைய பெற்றோர்களே காரணமாக இருக்கக் கூடாது. குழந்தைகளை அழகாக தமது வழியில் கொண்டு செல்லக்கூடிய திறம்படைத்தவர்கள் தான் பெற்றோர்கள் .ஆகவே ஒரு அழகான சகல பண்புகளையும் கொண்ட குழந்தையை உருவாக்கக்கூடிய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே நல்லவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும் .அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க வேண்டும். ஆகவே பெற்றோர் முன்மாதிரியாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் அடம்பிடிப்பதை தவிர்ப்பார்கள்.


பெற்றோர்கள் குழந்தைகளை சிறுவயது முதலே நல்வழிப்படுத்தினால் குழந்தைகள் தமது உணர்வுகளை ஆரோக்கியமான முறையில் எவ்வாறு வெளிப்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வர்.


கடுமையான திட்டமிடல் இடக்கூடாது


குழந்தைகளை இயல்பாகவே அவர்களது வேலைகளைச் செய்ய விட வேண்டும். குழந்தைகளுக்கு சிறு வயது முதலே கடுமையான சட்ட திட்டங்கள் உள்ளிட்ட திட்ட அட்டவணைகளை பெற்றோர்கள் இடக்கூடாது. குழந்தைகளை பொழுதுபோக்கு நேரத்திற்கு அவர்களின் விருப்பப்படி விட்டுவிட்டால் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்.ஓவியம் வரைதல், படித்தல் போன்ற பயனுள்ள பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுத்தலாம். ஆகவே குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடித்து வழிகாட்டுவதே சிறந்த முறை.


கொடுமைப்படுத்துதல்  கூடாது


 குழந்தைகளின் கோபம் மற்றும் மன உளைச்சலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கொடுமைப்படுத்துதல் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.  வீட்டில் பெற்றோர்களாலோ, சுற்றத்தவர்களாலோ அல்லது சமூக ஊடகங்கள் , அல்லது நண்பர்களால் கூட  உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ கொடுமைப்படுத்தப்படலாம். ஆகவே பெற்றோர்கள் தமது குழந்தைகளை கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியமாகிறது. அவர்களை வழிநடத்த அன்பு என்ற ஒரு மந்திரமே போதுமானது.


திகில் படங்கள் மற்றும் புத்தகங்கள் :


தற்போதைய காலகட்டத்தில் திகில் திரைப்படங்களுக்கு  குறைவே இல்லை என்று சொல்லலாம் இதற்கு ஏராளமான குழந்தைகளும் ,சிறுவர்களும் அடிமையாகி உள்ளார்கள். பெரியவர்கள் இவ்வாறான படங்களை பார்க்க ஐய்யப்பட்டாலும் குழந்தைகள் அதனை விடுவதாக இல்லை. இவ்வாறான திகிலூட்டும் திரைப்படங்கள் , கார்ட்டூன்கள், காமிக்ஸ் புத்தகங்கள் போன்றன சிறுவர்களுக்கு ஒரு கடுமையான  ,பொறுப்பற்ற எதிர்ப்பு மனநிலையை உருவாக்குகிறது. இவ்வாறான காரணங்கள் குழந்தைகளிடையே வன்முறையை ஏற்படுத்தும். ஆகவே சிறு வயது முதல் குழந்தைகளுக்கு நல்லவற்றை வழங்க பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் . நல்லது கெட்டதை  தெரிந்து கொள்ள பெற்றோர்கள் பழக்கப்படுத்த வேண்டும். ஆகவே திகிலூட்டும் படங்கள், பயங்கரமான எதிர்மறை எண்ணம் கொண்ட கதைகளை குழந்தைகளுக்கு கூறுவதை, பார்க்க வைப்பதை தவிர்த்து, அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்களை புகுத்துவதே சிறந்ததாகும்.


திகிலூட்டும் செய்திளை தவிர்க்கலாம் -  இயற்கை பேரழிவுகள், வன்முறை மற்றும் பயங்கரவாதம் போன்ற  பயங்கரமான நிகழ்வுகளை குழந்தைகளிடம் தெரியப்படுத்தாமல் இருப்பதே சிறந்தது. ஏனென்றால் அவற்றைப் பார்க்கும் போதோ அல்லது கேட்கும் போதோ .சில குழந்தைகளின்  மனநிலை மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.


 குழந்தைகள் கோபத்தில் அடம் பிடிக்கும் போது  அதனை மேலும் தூண்டிவிடும் வகையில்  கடினமான வார்த்தைகள் பயன்படுத்துவதை பெற்றோரோ அல்லது மூத்தவர்களோ தவிர்க்க வேண்டும். அவர்களிடம்  எவ்வாறு பேசினால் கோபத்திலிருந்து விடுபட்டு அமைதியாக இருப்பார்கள் என்பதை தெரிந்து வைத்து கொண்டு குழந்தைகளுக்கு சரியான வழிகாட்டுதலை பெரியவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். 


ஆகவே குழந்தைகளிடம் பெற்றோர் வைத்துள்ள நேரடியான தொடர்பாடல் மூலம் அவர்களை சிறந்த முறையில் நல்வழிப்படுத்தலாம்.