சொல்லப்படாத சமுதாய பிரச்சனைகள் , மாறுபட்ட கண்ணோட்டம் என சினிமாவில் ஆழமான கருத்துகளை பதிய வைக்கும் வித்தை தெரிந்தவர் இயக்குநர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள் , பேரன்பு , தரமணி என இவர் எடுத்த ஒவ்வொரு படங்களும் அந்த படத்தில் இடம்பெறும் வசனங்களும் மிக ஆழமானவை . இயக்குநர் ராம் படங்களில் மட்டும் சமுதாய பிரச்சனைகளை , குடும்பங்களின் மாறுபட்ட நிலையை பேசக்கூடியவர் அல்ல. கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் , சிக்குண்டு கிடக்கும் சமுதாய பின்னல்களின் அவலநிலையையும் , அதற்கு பின்னால் இருக்கும் அரசியல் வர்த்தகத்தையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அப்படித்தான் அவர் கூட்டுக்குடும்பத்தில் இருந்து தனிக்குடும்பமாக வாழ்பவர்கள் , தங்களுக்கு தெரியாமலேயே  அரசியல் வணிகத்தில் சிக்கியிருக்கிறார்கள் என  நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.





அதில் ”மனிதனின் அழகான கண்டுபிடிப்புகளில்  ஒன்று குடும்பம். இன்று அது வெவ்வேறு பரிணாமங்களை எடுத்திருக்கிறது.அன்பு மனிதனுக்கு இயல்பாக , இயற்கையாக இருக்கிறது. ஆனால் அந்த அன்பை வெளிக்காட்ட முடியாத சூழல் நிறைய உருவாகியிருக்கிறது. காரணம் மனிதனுக்கு  தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழல்ல இருக்காங்க. முன்பெல்லாம் கூட்டுக்குடும்பத்தில் இருந்தோம் . அப்போது நாம இல்லாவிட்டாலும் நமது குழந்தையை நம் குடும்பத்தில் இருக்கும் வேறு ஒருவர் பாத்துக்கொள்வார் என்றிருந்தோம். ஆனால் இப்போது  சுதந்திரமாக , தனித்தனி வீடுகளாக  மாறிய சூழலில் ,  தனித்தனியா இயங்குறாங்க.


அப்போதான் இன்செக்கியூரிட்டி உருவாகுது. குறிப்பா நான் யார் தோள்ல சாய்ந்து அழுவது அப்படிங்குற கேள்வி இருக்கு , அப்படியே தோள் இருந்தாலும் அதற்கான நேரம் இருக்கா என்பதுதான்  கேள்வி. குழந்தைகளுடன் அமர்ந்து படம் பார்ப்பதோ அல்லது சினிமாவிற்கு அழைத்து செல்வது மட்டுமல்ல . குழந்தைகளுடன் அமர்ந்து பேசணும் .


மற்றவர்களுடன் குடும்பத்தில் அமர்ந்து பேசனும் அதுதான் குவாலிட்டி டைம்னு சொல்லுறாங்க. அப்படி பேசாவிட்டால் அவங்க மன அழுத்ததுற்கு அறியாமலேயே தள்ளப்படுறாங்க. தனித்தனியாக வாழ்வதற்கு பின்னால் நம்மை அறியாமலேயே  அரசியல் இருக்கிறது. கூட்டுக்குடும்பகா இருந்து தனியாக  வந்து விட்ட பிறகு நிறைய தேவைகள் , பொருட்கள் வாங்கும் வீதம் அதிகமாயிடும். மனிதன்  தன்னுடைய வாழ்க்கையையே போராட்டமாக மாற்றிவிட்டான் என்றால் , அரசை நோக்கி வரமாட்டான்.


அரசு தனக்கு செய்ய வேண்டிய கடமைகளையோ எதித்து கேள்வி கேட்க மாட்டார். தனக்கு உண்டான மன உளைச்சலை போக்க டாஸ்மார்க்கில் சரக்கடித்துவிட்டு தூங்கிவிடுவான் . அரசு எந்த கேள்வியும் கேட்காமல் இருக்க தனியாக வாழ வியாபார நிறுவனங்கள் , அரசு உங்களை நிர்பந்திக்குது” என சமுதாயத்தின் மீதான தனது பார்வையை முன் வைத்திருக்கிறார் இயக்குநர் ராம்.