நோக்கம் :


ஒரு வீட்டில் தாத்தா பாட்டியுடன் வளரும் குழந்தைகள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். எதிர்கால சந்ததிகளின் வழிக்காட்டிகளாக பார்க்கப்படுபவர்கள் மூத்த குடிமக்கள். அவர்களின் பங்களிப்பு உலகத்திற்கு எவ்வளவும் முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி உலக மூத்த குடிமக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மனித சமுதாயத்தில் முதியோர்களின் பங்களிப்பை எடுத்துரைத்து அவர்களைக் கௌரவிக்க வேண்டும் . உடல்நல பிரச்சனைகளாலும் வீட்டில் உள்ளவர்களாலும் அநாதையாக கிடத்தப்படும் முதியவர்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே இந்த தினத்தின் மிக முக்கியமான நோக்கமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இது தேசிய மூத்த குடிமக்கள் தினமாகவே கொண்டாடப்படுகிறது என்பது கூடுதல் தகவல் .




வரலாறு :


உலக மூத்த குடிமக்கள் தினம் ஆகஸ்ட் 19, 1988 அன்று அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் proclamation 5847  என்னும் பெயரில் அமெரிக்க குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் தேசத்தில் உள்ள வயதானவர்களின் சாதனைகளை எடுத்துக்காட்டினார். யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ் 138 என்ற ஹவுஸ் கூட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை மூத்த குடிமக்கள் தினத்தை ரீகன் அறிவித்தார்.முதியவர்கள் தங்கள் வாழ்நாளின் எஞ்சிய காலத்தை முழுமையாகவும், கண்ணியத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ பாதுகாப்பான சூழலை சமுதாயங்கள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் அப்போதைய வலியுறுத்தலாக இருந்தது.






முக்கியத்துவம் :


ஐக்கிய நாடுகள் சபை (UN) அறிவிப்பின்படி , முதியோர்களின் எண்ணிக்கை 2050-ல் 1.5 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்கிறது.இந்த உயர்வு கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முக்கிய காரணிகளாக இருக்கும். குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் முதியோர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் என்பது ஐநாவின் கருத்தாக உள்ளது. முதியோர் இல்லங்களில் விடப்படும் பெரியவர்கள் , குழந்தைகளால் வன்முறைக்கு ஆளாக்கப்படும் மூத்த குடிமக்கள் , புறக்கணிப்பிற்கு உள்ளாக்கப்படும் முதியவர்கள் என அனைவரும் பாதுகாப்பட வேண்டும் , இது போன்ற குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆண்டும் உலக மூத்த குடிமக்கள் தினம் உணர்த்துகிறது.