சிவாஜி கணேசனின் முதல் மரியாதை படத்தில் மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல என்றொரு பாடல்வரி இருக்கும். ஆனா பாறங்க தலையணை வாங்கினா தூக்கம் வரும் எனக் கூறுகிறது இந்த கம்பெனி. அட ஆமாங்க எகிப்து பருத்தியில், மல்பரி பட்டு சேர்த்து கூடவே டச் நாட்டு ஃபோமும் கலந்து செய்த இந்த தலையணை வாங்கி படுத்தால் தூக்கம் கண்களைத் தழுவுமாம். ஆனால் அது விலை தாங்க கொஞ்சம் காஸ்ட்லி. ஆமாங்க 57,000 டாலர். இந்திய மதிப்பில் ரூ.47 லட்சம். என்னது என ஆச்சர்யப்படுகிறீர்களா? முழுசா படிங்க நிறைய தெரியும்.


தூக்கமின்மை எனும் நோய்:


பரபரவென ஓடிக்கொண்டிருக்கும் இந்த அவசரகதியான வாழ்கையில், அதே வேகத்தில் பல நோய்களும் நம்மை வந்து ஒட்டிக்கொள்கின்றன. அதற்கு காரணங்களாக முறையற்ற சாப்பாடு, உடற்பயிற்சியின்மை என பல விஷயங்கள் சொல்லப்பட்டாலும், முக்கிய காரணியாக பார்க்கப்படுவது தூக்கமின்மை. இந்தப்பிரச்சினைக்கு மனஅழுத்தம், கவலை, சொந்த வாழ்கை மற்றும் தொழில் வாழ்கை தொடர்பான வேலைகளால் 24 மணி நேரமும்  சிந்தித்துக்கொண்டே இருப்பது உள்ளிட்டவை காரணங்களாக சொல்லப்படுகின்றன. இன்சோம்னியா என்ற அழைக்கப்படும் இந்தப்பிரச்னை தொடர்ந்து இருக்கும் போது அது க்ரானிக் எனப்படும்  நாள்பட்ட தூக்கமின்மை பிரச்சினையாக  மாறுகிறது.  






ரூ.47 லட்சம் தலையணை!


இந்நிலையில் தான் நெதர்லாந்தைச் சேர்ந்த சைக்கோதெரபிஸ்ட் 57,000 டாலர் மதிப்பில் ஒரு தலையணையை தயார் செய்துள்ளார். எகிப்து பருத்தியில், மல்பரி பட்டு சேர்த்து கூடவே டச் நாட்டு ஃபோமும் கலந்து செய்த இந்த தலையணை வாங்கி படுத்தால் தூக்கம் கண்களைத் தழுவுமாம். இது மட்டுமில்லீங்க இந்த தலையணையில் 24 கேரட் தங்கமும், வைரமும் பதிக்கப்பட்டுள்ளது. 4 வைரங்கள் ஜிப்பில் உள்ளன. இந்த தலையணையில் அடைக்கப்பட்டுள்ள பருத்தி ரோபோட்டிக் மில்லிங் மெஷின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.


இத்தனை ஸ்பெஷலான தலையணை வழக்கமாக நீங்கள் வாங்குவதுபோல் பாம்பே டையிங் ஷோரூமில் வாங்கிவிட முடியாது. இந்த ஸ்பெஷல் எடிசன் தலையணை வேண்டுமென்றால், ஆர்டர் செய்து வாங்க வேண்டுமாம். அரை கோடி மதிப்புள்ள தலையணை வாங்கினால் தூக்கம் வருமா இல்லை அதை பாதுகாக்கும் எண்ணம் தான் வருமா என்பதற்கு வாங்கித் தான் பார்க்க வேண்டும்.  


காபி, டீ, சிகரெட் போன்றவை தூக்கத்தின் மிகப் பெரிய எதிரிகள்.  நீங்கள் இன்சோம்னியா பிரச்சினையால் அவதிப்படுபவரானால் மேற்சொன்ன பழக்கங்களை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அமைதியான மனநிலை, உடற்பயிற்சி, தியானம் போன்றவையும் தூக்கத்துக்கு நல்ல தூண்டுதல்.