இன்று உலகம் முழுவதும் ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது. ஹோமியோபதியின் நிறுவனரான ஜெர்மன் மருத்துவர் டாக்டர் சாமுவேல் ஹானிமனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.
ஹோமியோபதி மருத்துவம்
ஹோமியோபதி என்பது நாட்டில் பரவலாக நடைமுறையில் உள்ள மற்றும் பிரபலமான மருத்துவ முறைகளில் ஒன்றாகும். உலகளவில் ஹோமியோபதி மருந்து உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் இந்தியா மிக முக்கியமான ஒரு நாடு. ஹோமியோபதி இந்தியாவில் ஆயுர்வேதத்தைப் போலவே பிரபலமாக உள்ளது, இவை இரண்டும் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர் என்பதுபோலவே, ஒவ்வொரு மனிதருக்கு வரும் நோயும், அதன் காரணங்களும் தனியானவை. ஒருவருக்குத் தலைவலி வருகிறதென்றால், அதற்கு ஒற்றைப் பொது மருந்து கிடையாது என்பதே ஹோமியோபதி காட்டும் வழிமுறை. ஒவ்வொரு உயிரும், அதற்கே உரிய பிரத்யேக உயிர்சக்தியால் கட்டுப்படுத்தப்படவும் நிர்வகிக்கவும்படுகிறது என்பதை உலகுக்கு முதலில் சொன்னவர் டாக்டர் ஹானிமன்.
ஹோமியோபதி தினம் - காரணம்
ஜெர்மனியைச் சேர்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர் சாமுவேல் ஹானிமன், 1796ஆம் ஆண்டில் கண்டுபிடித்த மருத்துவ முறைதான் ஹோமியோபதி. இவரது பிறந்த தினத்தைதான் உலக ஹோமியோபதி தினமாக ஏப்ரல் 10-ஆம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அலோபதி மருத்துவத்தின் பக்கவிளைவுகள் குறித்துப் பெரும் சங்கடம் கொண்டிருந்த டாக்டர் ஹானிமனுக்கு, ஹோமியோபதி மருத்துவம் பெரும் மனநிம்மதியைத் தந்தது. தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மொத்தம் 99 மருந்துகளைக் கண்டறிந்தார். இந்த மருந்துகள், அவற்றின் பண்புகள் குறித்த தொகுப்பு ‘மெட்டீரியா மெடிக்கா’ என்ற நூலாக வெளிவந்தது. விரைவிலேயே உலகம் முழுவதும் இது ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பரவியது. ‘ஹோமியோபதி’ என்ற புதிய மருத்துவ முறையை உலகுக்கு வழங்கிய சாமுவேல் ஹானிமன் 88-வது வயதில் (1843) மறைந்தார்.
இந்த ஆண்டின் கருப்பொருள்
ஒவ்வொரு ஆண்டும் உலக ஹோமியோபதி தினத்தை கொண்டாட ஒரு குறிப்பிட்ட தீம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு, "ஒரே ஆரோக்கியம், ஒரே குடும்பம்" என்ற கருப்பொருளில் உள்ளது. அருகில் உள்ள மருத்துவர்கள் மூலம் ஹோமியோபதி சிகிச்சையை மக்களிடையே ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு சுகாதார நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஹோமியோபதியின் செயல்திறனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வாமை, ஆஸ்துமா, மனச்சோர்வு அல்லது பதற்றம் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க இது பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஹோமியோபதி மருந்துகள் தாதுக்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
முக்கியத்துவம்
ஹோமியோபதி மருத்துவத்தின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதும், பொதுமக்கள் இதனை ஏற்கச் செய்வதும் இந்த தினத்தின் நோக்கங்களாகும். இந்த வருடம் போன்றே எல்லா வருடமும் வழக்கமாக இந்த தினத்தில் ஹோமியோபதி அறிவியல் மாநாடு ஒன்றை இந்தியா நிகழ்த்தும். ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் இந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில் திங்கள்கிழமை ஒரு நிகழ்வை நடத்துகிறது. கடந்த ஆண்டு, உலக ஹோமியோபதி தினத்தின் கருப்பொருள் 'ஹோமியோபதி: ஆரோக்கியத்திற்கான மக்கள் தேர்வு'. ஹோமியோபதி மற்றும் அதன் மருந்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் கருப்பொருள்களின் அடிப்படையில் பல நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
அத்துடன் ஹோமியோபதி வளர்ச்சிக்கான எதிர்கால உத்திகள் வகுத்தலும் இதன் நோக்கமாகும். மேலும், மக்களின் நல்வாழ்வுக்கான முதல் தேர்வாக ஹோமியோபதியை முன்னேற்றுவதற்குத் தேவையான கருத்துக்களும், இதில் விவாதிக்கப்படும்.