மேற்குத் தொடர்ச்சி மலை என்பது இந்தியத் தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரைக்கு இணையாக 1,600 கி.மீ. (990 மைல்) நீளத்தில் 1,60,000 கி.மீ. (62,000 சதுர மைல்) பரப்பளவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களைக் கடந்து செல்லும் ஒரு மலைத்தொடர் ஆகும். இதை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரித்துள்ளது.


மேலும் இது உலகின் எட்டு பல்லுயிர் மையங்களில் ஒன்றாகும். நம் நாட்டின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் பெரும்பாலானவை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. அவற்றில் பல இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன, உலகில் வேறு எங்கும் இல்லை. 


யுனெஸ்கோவின் கூற்றுப்படி, மேற்குத் தொடர்ச்சி மலைகள் இமயமலையை விடப் பழமையானவை. மேற்குத் தொடர்ச்சி மலையில் தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் காப்புக்காடுகள் உட்பட மொத்தம் 39 பகுதிகள் 2012-ல் உலக பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 




ஆனைமலை புலிகள் காப்பகம்


மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம், முன்பு இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா என்றும், ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்பட்டது, இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தாலுகாக்களிலும், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை தாலுகாவிலும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். 


ஆனைமலை புலிகள் காப்பகம் சிறிய பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகள் முதல் புலிகள் வரை பல்வேறு வகையான உயிரினங்களின் இருப்பிடமாகவும், உலகின் மிகப்பெரிய பல்லுயிர் பெருக்கத்தின் இருப்பிடமாகவும் உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சாம்பல் மந்தி, கருமந்தி, நாட்டுக் குரங்கு, சிங்கவால் குரங்கு, தேவாங்கு ஆகிய ஐந்து வகையான விலங்கினங்கள் உள்ளன. இந்த ஐந்து விலங்கினங்களின் வாழ்விடமாக ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது. அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ள இந்த முக்கியமான பாலூட்டிகளை நாம் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.


மனிதர்கள் மாறுவோம்


நாம் வனப்பகுதிகளில் பயணம் செய்யும்போது இந்த உயர் பாலூட்டி இனங்களுக்கு உணவு தருகிறோம் என்று பெருமிதம் கொள்கிறோம். அவ்வாறு நாம் கொடுக்கின்ற உணவுகளுக்குப் பழகிவிடும் பாலூட்டிகள், சாலையோரங்களில் காத்திருக்கப் பழகுகின்றன. இதனால் பல்வேறு விபத்துகளில் சிக்கி, உயர் பாலூட்டி இனங்களே மெல்ல மெல்லக் குறைந்து வருகின்றன. 




வன உயிரினங்கள் வனத்தில் உள்ள உணவினை உண்டு, இனப்பெருக்கம் செய்வதுதான் அவசியம். ஏனென்றால் ஒரு மரத்தில் உள்ள பழத்தினை உண்ட பின்பு அந்த பழத்தின் விதையினை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு விதை பரவுதல் மூலமாக எடுத்துச் செல்லும் பணியினை இந்த பாலூட்டி இனங்கள் செய்கின்றன. இதன் மூலம் காடுகளில் உள்ள முக்கியமான மரவகைகள் காப்பாற்றப்படுவதோடு பாலூட்டி இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன.


உதாரணமாக, உலகிலேயே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மட்டுமே இருக்கின்ற சிங்கவால் குரங்குகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் சிங்கவால் குரங்குகள், மேற்குத் தொடர்ச்சி மலையின் சோலைக் காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன. சிங்கத்தின் வாலைப் போன்று இவற்றுக்கும் வால் இருப்பதால், சிங்கவால் குரங்குகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் உடல் கருப்பாகவும், பிடரிப் பகுதி வெண்மையாகவும் இருக்கும். இவை சோலை மந்தி என்றும் கருங்குரங்கு என்றும் அழைக்கப்படுகின்றன.


யானைகள் வழித்தடம்     


யானைகள்தான் காட்டின் ஆதார உயிர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை பகுதியில் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது பரிதாபமாக உயிரிழந்த யானைகளை இன்னும் நம்மால் மறக்க முடியவில்லை. குறிப்பாக யானைகளின் வழித்தடத்தை மறைத்ததால், அவை குடியிருப்புகள் வழியாகவும் தேயிலை தோட்டங்கள் வழியாகவும் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. 




சோலைக் காடுகள் 


மேற்குத் தொடர்ச்சி மலைகள் பல்வேறு ஆறுகளின் ஆதாரமாக உள்ளன. பருவத்தில் பெய்யும் மழை, இந்த சோலைக் காடுகள் வழியாகவே சோலை புல்வெளிகளுக்குச் செல்கிறது. இந்தப் புல்வெளிகள் மழைநீரைச் சேமித்து, திவலை திவலைகளாகத் தண்ணீரை விடுவித்து, ஆண்டு முழுவதும் சிறந்த குடிநீர் ஆதாரத்தை நமக்கு வழங்குகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக இந்த சோலைக் காடுகள் உள்ளன.


பூக்கும் தாவரங்கள் (ஆர்க்கிட்ஸ்) 


ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மலைகளில் பல்வேறு பூக்கும் தாவர இனங்கள் உள்ளன. குறிப்பாக ஆர்க்கிட் எனப்படுகின்ற ஒருவித்திலை பூக்கும் தாவரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. பூக்கும் தாவரங்களில் இதுவே அதிக எண்ணிக்கையிலான சிற்றினங்களைக் கொண்ட குடும்பமாக கருதப்படுகிறது. பூக்கும் தாவரங்களில் இதுவே இரண்டாவது பெரிய குடும்பம் ஆகும். இதில் 700-க்கும் மேற்பட்ட இனங்கள் மற்றும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளதாக ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 


இந்த ஆர்க்கிட் இனங்கள் மலர்ந்து பின், பல நாட்கள் வாடாமல் இருக்கும். தீபகற்ப இந்தியாவில் பல ஆர்கிட் தாவர இனங்கள் உள்ளன. குறிப்பாக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 146 இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த ஆர்க்கிட் வகை தாவர இனங்களை தனியாக இனம் கண்டறிந்து அவற்றை வால்பாறை பகுதியில் ஒரு பசுமைக் குடிலில் காட்சிப்படுத்தி, அத்தாவர இனங்களைப் பற்றிய ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது. 



வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாப்பது


பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆனைமலை புலிகள் காப்பகம். கடந்த காலங்களில், சிங்கவால் கொண்ட குரங்குகள் அவற்றின் இறைச்சி மற்றும் ரோமங்களுக்காக வேட்டையாடப்பட்டன, இப்போது சுமார் 400 உயிரியல் பூங்காக்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை மனித பராமரிப்பில் பிறந்தவை. அரசாங்கக் கொள்கையில்,  சிங்கவால் குரங்குகள் வாழும் இடங்களில் மனிதர்களின் அத்துமீறலை நிறுத்துதல், மற்றும் வேட்டையாடுதலைத் தடுத்தல், சாலை விபத்துகள் மற்றும் மின்சாரம் தாக்குதலைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை அடங்கும். 


ஆனைமலை புலிகள் காப்பகத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்த பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும், அழிந்து வரும் விலங்குகள் மற்றும் தாவர இனங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 


நாம் சுவாசிக்கும் காற்றும், குடிக்கும் தண்ணீரும் இயற்கையின் கொடை. இயற்கையையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது நமது கடமை.


- ஜி. கண்ணபிரான், ஒருங்கிணைப்பாளர்
கலிலியோ அறிவியல் கழகம், உடுமலைப்பேட்டை.