Women Mentality: ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசுவது ஏன் என்பது போன்ற காரணங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
கணவன் மனைவி மோதல்:
இந்திய நீதிமன்றங்களில் இன்றைய தேதிக்கு தீர்க்கப்படாத விவாகரத்து வழக்குகள் மலைபோல் குவிந்துள்ளன. அண்மையில் கல்யாணமானவர்கள் தொடங்கி, கால் நூற்றாண்டுக்கு முன்பு கல்யாணமானவர்கள் வரை, விவாகரத்து செய்து கொள்வது என்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது. இதற்கு பிரதான காரணமாக இருப்பது கணவன் மற்றும் மனைவி இடையே போதிய புரிதல் இல்லாதே ஆகும். முந்தைய தலைமுறை பெண்கள் அமைதியின் மறு உருவம், அருகில் இருப்பவர்களை தாண்டி மற்றவர்களால் கேட்க முடியாத அளவிற்கு தான் பேசுவார்கள், கணவன் முன்னிலையில் பேசக்கூட மாட்டார்கள் என சொல்லி கேள்வி பட்டிருப்போம். நமது அம்மாக்களே அப்படிப்பட்ட சூழலில் இருந்ததாகவும் அனுபவங்களை பகிர்வதும் உண்டு. ஆனால், இன்றைய தேதியில் திருமணமான ஆண்களில் பெரும்பாலானோர் மனைவி மீது சுமத்தும் குற்றச்சாட்டு, ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” என்பதாக தான் உள்ளது.
பெண் சுதந்திரம்
அதெப்படி முந்தைய தலைமுறையில் கணவன் முன்பு பேச கூட யோசிக்கும் பெண்கள், சில தசாப்தங்கள் இடைவெளியிலேயே கணவனையே எதிர்த்து பேசும் அளவிற்கு மாற்றமடைந்துள்ளனர்? என்ற கேள்வி எழுந்தால் அதற்கு ஒரே பதில் “கல்வி” மட்டுமே. பெண்கள் ஆண்களை விட இயல்பாகவே அதிகம் யோசிக்கும் திறன் கொண்டவர்கள். ஆனால், முந்தைய காலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது, இதனால் வாழ்வாதாரத்திற்கு யாரையேனும் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். ஆனால், இன்று கல்வி மூலம் சுயசார்பு அடைந்துள்ள பெண்கள், தங்களுக்கு எது சரி என தோன்றுகிறதோ அதையே செய்கின்றனர். மேலும், முழு சுதந்திரத்துடன் சிந்தித்து செயல்படுகின்றனர்.
திணறும் ஆண்கள்
பெண்களின் சிந்திக்கும் திறனை கையாள முடியாமல் இன்றைய ஆண்கள் திணறி வருகின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மை. ஒரு சண்டை என வந்தால் மணிக்கணக்கில் ஆயிரக்கணக்கான வார்த்தைகளை அள்ளி வீசுவது, ஒரு சிறிய பிரச்னையை பேசி பேசி பெரிதாக்குவது, அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் கருதி வீட்டில் பிரச்னைகளை பெரிதாக்குவது, கோபம் வந்தால் நாள்கணக்கில் பேசாமல் இருப்பது என “பொண்டாட்டிய சமாளிக்க முடியலடா சாமி” என சினிமாக்களில் கூறும் வசனங்கள் எல்லாம் கட்டுக்கதை என நினைக்க வேண்டாம். நான்கு சுவர்களுக்கு அதனை எதிர்கொள்ளும் கணவர்களுக்கு தெரியும் அது எவ்வளவு உண்மை என்று. இதனால் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக தான், பல குடும்பங்களில் விவாகரத்தே நிகழ்கிறது.
பெண்களின் அதீத திறமைகள்
ஆனால், மனைவியுடன் இல்லற வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ விரும்பினால், பெண்களின் மூளை செயல்பாட்டை பற்றி ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
- ஒரு சண்டை அல்லது வாக்குவாதம் என வந்தால், பெண்கள் ஏன் இவ்வளவு பேசுகிறார்கள் என யோசித்து இருக்கிறீர்களா? அதற்கு காரணம் ஆண்களுக்கு மூளையின் இடது பக்கத்தில் மட்டுமே வாய்மொழி மையம் ( Verbal Center ) இருக்கும். ஆனால், சராசரி பெண்ணுக்கு மூளையின் இரண்டு பக்கமும் வாய்மொழி மையம் உள்ளது. இதன் காரணமாகவே பெண்கள் அதிக வார்த்தை பயன்பாட்டை விரும்புகின்றனர். அதன்படியே, ஒரு சம்பவம் குறித்து விளக்கவோ அல்லது உணர்வை பற்றி பேசவோ, ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு அதிக வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.
- எப்போதும் அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என நினைத்து கவலைப்படுவது ஏன்? என்பது மனைவிகளை நோக்கி பெரும்பாலான கணவர்கள் எழுப்பும் கேள்வி ஆகும். இதற்கு பதில், "முடிவெடுத்தல், பகுத்தறிவு, ஆளுமை வெளிப்பாடு, சமூகத் தகுதியைப் பேணுதல் மற்றும் பிற சிக்கலான அறிவாற்றல் நடத்தைகளுக்குப் பொறுப்பான, மூளையில் உள்ள prefrontal cortex-ன் செயல்பாடும், அளவும் ஆண்களை விட அதிகம். இதன் காரணமாகவே, அடுத்தவர்களின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, எந்த இடத்தில் எது சரியானது என்ற சமூக முடிவையும் ஆண்களை விட பெண்கள் தெளிவாக எடுக்கின்றனர். இதன் காரணமாகவே நட்பு மற்றும் குடும்ப வட்டாரங்களை, பெண்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர்.
இதனை மிகவும் ஆழமாக யோசித்து குழப்பிக் கொள்வதை தவிர்த்து, ஆண்கள் மற்றும் பெண்களின் பலம், பலவீனங்களை புரிந்து விட்டுக் கொடுத்து செயல்பட்டால், இல்லற வாழ்க்கை நல்லறம் பயக்கும் என்பதை நிதர்சன உண்மை.
பொறுப்பு துறப்பு: மேற்கூறிய கருத்துகள் அனைத்தும் பெண்களின் மூளை திறனை பற்றி துறைசார் வல்லுநர்கள் கூறிய கருத்துகளே ஆகும். எந்தவொரு தனிநபரையும்/பெண்களையும் குறை கூறும் நோக்கத்துடன் கருத்துகள் பதிவிடப்படவில்லை.