பண்டிகை நாட்களில் சாப்பிடும் நேரம்,உறங்கும் நேரம் என எல்லாம், நடைமுறையில் இருந்து மாறிக்கொண்டே இருக்கும். இதே போலவே ஷாப்பிங் செல்வது மற்றும் சொந்த ஊருக்கு போவது என, நமது அன்றாட செயல்பாடுகளில் இருந்து, பண்டிகைகள்,முற்றிலுமாக வேறு பழக்கத்திற்கு நம்மை கொண்டு சேர்க்கின்றன. இதனால் நமது உணவு நேரம் மாறுவது மட்டுமல்லாமல்,உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதிலும் சற்று சிக்கல் ஏற்படத்தான் செய்கிறது. இதனால், சருமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல்,சருமம் பாதிப்படைகிறது.
இத்தகைய பண்டிகை நேரங்களில் மட்டுமல்லாது,எப்போதுமே,சரும பராமரிப்பு என்பது,நமக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.
நம்முடைய அன்றாட வேலைகளில் மட்டுமல்லாமல்,நமக்கு நம் மீது நம்பிக்கை ஏற்படவும்,தோற்ற பொலிவு என்பது மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. இதற்கு மிக முக்கியமானது சரும பராமரிப்பாகும்.ஏனெனில் உங்கள் உடை புதிதாக இருக்கிறதா அல்லது பழையதாக இருக்கிறதா என்பதை காட்டிலும் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. தமிழில் கூட ஒரு அற்புதமான முதுமொழி உண்டு."கந்தையானாலும் கசக்கி கட்டு,கூழானாலும் குளித்துக் குடி"என மேனியின் சுத்தத்தையும், பராமரிப்பையும் நம் முன்னோர்கள் திறம்பட சொல்லி இருப்பார்கள்.
ஆகவே, யாராக இருந்தாலும்,எந்த வயதினராக இருந்தாலும்,சரும பராமரிப்பு என்பது,நம்முடைய தன்னம்பிக்கைக்கும்,வயதை வெளியில் தெரியாமல் கட்டுக்குள் வைத்திருக்கவும்,சருமத்தின் வழியாக நுண்கிருமிகள் உள்ளே செல்லாமல் இருக்கவும், மிக முக்கியமானதாக இருக்கிறது.
சத்தான உணவுகளை சாப்பிடுவது, தினமும் இரு முறை நன்றாக குளிப்பது,வெயிலில் செல்லும் போது, மாய்ஸ்ரைசர் பயன்படுத்துவது. சருமத்தை நீரோட்டமாக வைத்திருப்பது என,நிறைய விஷயங்கள், இதில் அடங்கும். இதிலும் குறிப்பாக விட்டமின் டி,ஏ,ஈ மற்றும் சிஆகியவை சருமபராமரிப்புக்கு,மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.
விட்டமின் டி நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளுங்கள்:
பொதுவாக சூரிய ஒளியிலிருந்து நமக்கு விட்டமின் டி ஆனது நிறைய கிடைக்கிறது.இருப்பினும் மலைப்பாங்கான இடங்களில் வசிப்பவர்கள் மற்றும் மழை காலங்களில் நமக்கு விட்டமின் டி கிடைப்பதில்,சற்று குறைபாடு ஏற்படுகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. விட்டமின் டி ஆனது,நமது சருமத்தின் பளபளப்பை கொடுப்பதில்,முக்கிய பங்காற்றுகிறது. மேலும் ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது.அழற்சி எதிர்ப்பையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது.
ஆகவே விட்டமின் டி ஆனது,நமக்கு இன்றியமையாததாக இருக்கிறது. இதனை பால் பொருட்களில் இருந்தும் ,நாம் பெறலாம்.பசும்பால் தவிர தேங்காய்,ஓட்ஸ் மற்றும் சோயாவில் இருந்து பெறப்படும் பாலிலும்,இந்த விட்டமின் டி இருக்கிறது. இதைப் போலவே கானாங்கெளுத்தி மற்றும் மத்தி மீன்களிலும் விட்டமின் டி நிறைந்து காணப்படுகிறது. முட்டை மற்றும் காளானிலும் விட்டமின் டி இருக்கிறது.
இத்தகைய உணவுகளை நாம் உணவில், எடுத்துக் கொள்ளும்போது, சருமத்திற்கு தேவையான விட்டமின் டி ஆனது கிடைக்கிறது.மேலும் தற்காலத்தில் விட்டமின் டி செறிவூட்டப்பட்ட,ஃபேஸ் வாஷுகள் நிறைய கிடைக்கின்றன.இவற்றைக் பயன்படுத்தியும்,வைட்டமின் டி யை உங்கள் சருமத்திற்கு வழங்க முடியும்.
விட்டமின் ஏ நிறைந்திருக்கும் உணவுகள்:
முருங்கைக்கீரை,பாதாம், கரிசலாங்கண்ணி கீரை, வாழைப்பழம்,பாதாம்,கேரட்,மாம்பழம், ஆரஞ்சு,பப்பாளி,பொன்னாங்கண்ணி கீரை,முலாம்பழம்,முட்டை,அவகோடா மற்றும் இறைச்சியின் ஈரல் ஆகியவற்றில் இந்த விட்டமின் ஏ நிறைந்து காணப்படுகிறது.
சருமத்தை பொறுத்தவரை,மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை சரி செய்யும் தன்மை மற்றும் முகப்பருவை எதிர்த்து போராடுவது, என விட்டமின் ஏ வின் பங்களிப்பு, நிறைய இருக்கிறது.இதே போலவே, சருமத்திற்கு உள்ளாக ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதிலும்,விட்டமின் ஏ பங்காற்றுகிறது.எனவே விட்டமின் ஏ நிறைந்த உணவுகளை,கவனமாக உட்கொள்வது,உங்கள் தோற்ற பொலிவிற்கு, மிகவும் இன்றியமையாததாக இருக்கும். மேலும் இது, சீரம் வடிவிலும் கிடைப்பதனால்,நீங்கள் இந்த சீரம் வகைகளை மருத்துவரின் அறிவுரையோடு பயன்படுத்தலாம்.
விட்டமின் ஈ நிறைந்த உணவுப் பொருட்கள்:
பசலைக்கீரை,மீன்கள்,சிறுதானியங்கள்,மிளகாய்,பாதாம், வேர்க்கடலை மற்றும் கடுகு ஆகியவற்றில் விட்டமின் ஈ நிறைந்து காணப்படுகிறது.இது சருமத்திற்கு மட்டுமல்லாமல்,புற்றுநோயை தடுப்பதிலும் விட்டமின் ஈ ஆனது, மிகச் சிறந்த பங்களிப்பை கொண்டுள்ளது என்பது,ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே,விட்டமின் ஈ நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டு, சருமத்தை பராமரிப்பதுடன், இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும்,அச்சுறுத்தலாக இருக்கும் புற்றுநோயை எதிர்த்து போராடவும்,பயன்படுத்திக் கொள்ளலாம்.விட்டமின் ஈ நிறைந்த மாய்ஸ்டரைசர்கள்,இன்று சந்தைகளில் கிடைக்கின்றன. வெயிலில் செல்லும் நேரங்களில் இத்தகைய மாய்ஸ்டரைசர்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
விட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்கள்:
கொய்யா பழத்தில் விட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது.விட்டமின் சி குறைபாடு உள்ளவர்கள்,இந்த கொய்யாப்பழத்தை,தினமும் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் திராட்சை என சிட்ரஸ் நிறைந்த பழங்களில் இந்த விட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. ஹைப்பர் பிக்மென்டேஷன், முகப்பரு, கரும்புள்ளிகள், நேர்த்தியான கோடுகள் மற்றும் பல தோல் சரி செய்வதற்கு விட்டமின் சி சத்தானது தேவைப்படுகிறது. விட்டமின் சி ஆனது லென்ஸிங் மில்க் எனப்படும் மேல்புற பூச்சாகவும் சந்தைகளில் கிடைக்கிறது.
ஆகவே இந்த விட்டமின்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் உணவில் எடுத்துக் கொண்டு நம் சருமத்தை பேணி பாதுகாப்போம்.