கமல்ஹாசன் இரங்கல்:
மறைந்த மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத்தின் மறைவிற்கு, கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மாஸ்டருக்கு சல்யூட் என்ற பதிவுடன் இரங்கல் கடிதம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், ”கலாதபஸ்வி கே. விஸ்வநாத் அவர்கள் வாழ்வின் திருவுருவத்தையும், கலையின் அழியாத தன்மையையும் முழுமையாகப் புரிந்துகொண்டவர். அதனால் அவருடைய கலை அவரது வாழ்க்கை மற்றும் கோலோச்சிய காலங்களுக்கு பின்னரும் கொண்டாடப்படும். வாழ்க அவரது கலை” என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் கே. விஸ்வநாத் காலமானார்
இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான கே.விஸ்வநாத், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 92 வயதான அவர் வயது மூப்பு காரணமாக கடந்த சில காலங்களாகவே, சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவ்வப்போது பல்வேறு கலைஞர்களைத் தன் வீட்டில் சந்தித்து அவர்களுடன் உரையாடி வந்தார். கடந்த நவம்பர் மாதம், நடிகர் கமல்ஹாசன் அவரை நேரில் சந்தித்து ஆசிபெற்றிருந்தார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று நள்ளிரவு அவர் வீட்டிலேயே காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரையுலகை சேர்ந்த பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திரையுலக பயணம்:
1965-ம் ஆண்டில் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கிய கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான ஆத்ம கவுரவம் படத்திற்காக சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருதை வென்றார். இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என 50-க்கும் ம்மேற்பட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார். தனது படங்கள் மூலம், பெண்ணுரிமை, சாதி ஏற்றத் தாழ்வு, நிகழ்த்துக் கலைகள் சம்பந்தப்பட்ட படைப்புகள் எனப் பல சமுக விஷயங்களை பேசி இந்தியாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை கமலை வைத்து இயக்கியுள்ளார். இயக்குனர் என்பதை தாண்டி குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா மற்றும் உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.
விருதுகள்
கடந்த 2017ம் ஆண்டு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதோடு, பத்ம ஸ்ரீ'விருதையும் வழங்கி இந்திய அரசு அவரை கவுரவித்துள்ளது. இயக்குனர் கே. விஸ்வநாத் 7 முறை நந்தி விருது, 10 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 முறை தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி:
ஐதராபத்தில் வைக்கப்பட்டுள்ள கே. விஸ்வநாத்தின் உடலுக்கு தெலுகு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் டிவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். இதேபோன்று, இந்தி உள்ளிட்ட பல்வேறு திரையுலகை சேர்ந்தவர்களு, சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஸ்வநாத்தை தனது மாஸ்டர் என குறிப்பிடும் கமல்ஹாசன், நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.