தங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் , வாய்ப்புகள் வழங்க வேண்டும் என அமெரிக்காவில் கிளர்ந்து எழுந்த பெண்களின் வெற்றியை உரக்க சொல்வதுதான் ‘பெண்கள் சமத்துவ தினம்’. 19 வது திருத்தம் ஆகஸ்ட் 18, 1920 அன்று பெண்களுக்கு தேசிய அளவில் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. ஆனால் ஆகஸ்ட் 26 ஆம் தேதிதான் உலக சமத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. அதற்கான காரணம் மற்றும் சமத்துவ தினத்தில் வரலாறு குறித்து பார்க்கலாம்.




வரலாறு :


பெண்களை பணியமர்த்த வேண்டும் , வாக்களிக்கும் உரிமை வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்து 1848 இல் நியூயார்க் மாநிலத்தில் நடந்த உலகின் முதல் பெண்கள் உரிமை மாநாட்டில் முதல் முறையாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைய துவங்கியது .குறிப்பாக வாக்களிக்கும் உரிமை மீதான தீர்மானம் சம உரிமையின் பிற தீர்மானங்களைவிட அதிகமான சர்ச்சைக்குரியதாக இருந்தது. உலகளாவிய வாக்குரிமைக்கான முதல் மனு 1866 ஆம் ஆண்டில் காங்கிரஸ்க்கு அனுப்பப்பட்டது. அமெரிக்க 19 வது  திருத்தச் சட்டம் 1919, ஜூன் 4 ஆம் தேதி செனட் ஒப்புதலுடன்  மாநிலங்களுக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 18, 1920 அன்று பெண்களுக்கு தேசிய அளவில் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. ஆனால் அரசியலமைப்புத் திருத்தம் அங்கீகரிக்கப்பட்டாலும், சரியான அரசாங்க அதிகாரியால் சான்றளிக்கப்படும் வரை அது அதிகாரப்பூர்வமானது அல்ல. 1920 இல் அமெரிக்க வெளியுறவுச் செயலராக இருந்தவர் பெயின்பிரிட்ஜ் கோல்பி. பெண்களுக்கு தேசிய அளவில் வாக்களிக்கும் உரிமைக்கான ஆவணத்தில் அவர் கையெழுத்து இட வேண்டும் .  




ஆகஸ்ட் 26, 1920 அன்று, வாஷிங்டன், டி.சி.யில் உள்ள தனது சொந்த வீட்டில் காலை 8 மணிக்கு கோலிபி ஆவணங்களில் கையெழுத்திட்டார். ஒரு நூற்றாண்டு போராட்டம் அன்றைக்குதான் நிறைவுக்கு வந்தது. எனவேதான் ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளை விடுத்து, கையெழுத்திட்ட நாளான அதாவது அமலுக்கு வந்த நாளான ஆகஸ்ட் 26 ஆம் தேதியை ‘உலக மகளிர் சமத்துவ நாளாக ‘ கொண்டாடுகிறோம்.1971 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் பிரதிநிதி பெல்லா அப்சுக் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கஸ்ட் 26 ஆம் தேதி மகளிர் சமத்துவ தினமாக நினைவுகூரும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். 1973 ஆம் ஆண்டில் யுனைடெட் ஸ்டேட்ஸ் காங்கிரஸ் மற்றும் அமெரிக்காவின் 37 வது ஜனாதிபதியான ரிச்சர்ட் நிக்சன் ஆகஸ்ட் 26 ஐ பெண்கள் சமத்துவ தினமாக முறையாக அங்கீகரித்தனர்.



நோக்கம்:


ஆண்களுக்கு நிகரான பெண்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டும் என இந்த நாள் வலியுறுத்துகிறது. அதே போல ஆண்கள் மட்டுமே கோலோச்சிய துறைகளில் பெண்கள் நிகழ்த்திய சாதனைகளையும் , போராடி பெற்ற வெற்றிகளை உலகறிய செய்வதே இந்த மகளிர் சமத்துவ நாளின் முக்கிய நோக்கம் .