உங்கள் பாதங்களில் துர்நாற்றம் வீசுகிறதா? கவலை வேண்டாம். அதைப் போக்குவது எப்படி என்று இக்கட்டுரையில் காண்போம்.


சிலருக்கு காலில் துர்நாற்றம் வீசும். அதுஷூ சாக்ஸ் அணியும் ஆண்களுக்கு, பெண்களுக்கு இது அதிகமாக இருக்கும். வேலை நிமித்தமாக ஓரிடத்திற்கு சென்று அங்கு ஷூவை வெளியே கழற்றிவிட்டு செல்லும் சூழல் ஏற்படும்போது துர்நாற்றம் வீசி தர்மசங்கடமான சூழலுக்கு தள்ளும். ஆனால் நமக்கே புரியாது ஏன் இப்படி வீசுகிறது என்பது..


சரி என்ன காரணமாக இருக்கும்?


ஹெல்த்லைன் வெப்சைட்டில் இது குறித்து சில விஷயங்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுப்பு இதோ..


மனிதர்களுக்கு காலில் வியர்வை சுரப்பிகள் அதிகமாக இருக்கும். நாள் முழுவதும் உடல் வெப்பத்தை சீராக வைப்பதே வியர்வை சுரப்பிகளின் வேலை. ஆனால் வியர்வை சுரப்பிகள் கர்ப்பிணிகள், பதின்ம வயதினருக்கு வேறு மாதிரி இருக்கும். இதனாலேயே அவர்களுக்கு உள்ளங்காலில் அதிகமாக வேர்க்கும். அதனால் அவர்களுக்கு சில நேரங்களில் வியர்வை துர்நாற்றம் வீசலாம்.


இதனைத் தவிர்த்த கால்களை காலை, இரவு என இரு வேளையும் சோப்பு நீரால் நன்றாக அலசவும். குளியலுக்குப் பின்னர் இதனை செய்யலாம். கால் விரல் இடையே கூட நன்றாக கழுவ வேண்டும். பின்னர் கால்களில் சிறிதும் ஈரம் இல்லாமல் துடைத்துவிடவும். அடிக்கடி நகங்களை வெட்டி சுத்தமாக வைக்கவும்.


பாதங்களை ஸ்க்ரபர் கொண்டு தேய்த்து சுத்தப்படுத்துவதையும் பழக்கமாகக் கொள்ளவும். இதனால் பாக்டீரியாக்கள் அழிந்து துர்நாற்றம் வீசுவது குறையும்.


அதேபோல் ஈர சாக்ஸ் அணிவதாலும் கூட துர்நாற்றம் வீசும். சாக்ஸை துவைத்து வெயில் நன்றாக படும் இடத்தில் உலர்த்தி எடுப்பது அவசியம்.


தூங்கும் முன்னர் கால்களை கொஞ்சம் ஆல்கஹால் கொண்டு சுத்தப்படுத்தலாம். ஒரு காட்டன் பந்தை ஆல்கஹாலில் முக்கி எடுத்து அதை சுத்தம் செய்யப்பட்ட பாதத்தில் தேய்த்து எடுக்கவும்.


இவை எல்லாம் செய்தும் பலன் இல்லை என்றால் அடுத்து பூஞ்சை தொற்றை சமாளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அன்றாடம் கால்களை, பாதங்களை பூஞ்சை எதிர்ப்பு பவுடர் கொண்டு சுத்தம் செய்யவும். ஷூக்களை அணிவதற்கு முன்னர் கூட இவ்வாறாக பவுடர் போட்டுக் கொள்ளலாம்.


வெதுவெதுப்பான நீரில் வினிகர் சேர்த்து இரவு உறங்கும் முன்னர் கால்களை சுத்தம் செய்து வந்தாலும் துர்நாற்றம் குறையும்.


ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் சாக்ஸை மாற்றுவது போன்ற அடிப்படை சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.


உங்கள் காலணிகளை நீங்கள் சரிவர சுத்தம் செய்யாவிட்டால் அது பாக்டீரியாவின் இருப்பிடம் ஆகி விடும். எனவே அந்த மாதிரியான அழுக்கு நிறைந்த காலணிகளை அணியும் போது உங்க பாதங்கள் துர்நாற்றம் வீச வாய்ப்பு உள்ளது.