விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.






கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்தாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், கிங்ஸ் லீ உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். விறுவிறுப்பாக நடந்து வந்த பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அப்போது விஜய்யுடன் நெல்சன் எடுத்துக்கொண்ட புகைப்படமும், பீஸ்ட் படத்தின் செட் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகின.


ஜனவரி 1, புத்தாண்டு தினத்தையொட்டி கடந்த வருடம், டிசம்பர் 31-ம் தேதி பீஸ்ட் படத்தின் புதிய லுக் வெளியானது. அதில் படம் ஏப்ரல் மாதம் வெளியாகுமென குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி புத்தாண்டையொட்டி அப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகுமெனவும் தகவல் வெளியானது. ஆனால் பாடல் வெளியாகவில்லை.


ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்ப்பு 


விஜய் படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. ஏப்ரல் மாதம், திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதனால் இன்று வெளியாகும் அப்டேட்டில், ரிலீஸ் தேதி தொடர்பான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.