நாகப்பட்டினம் புத்தகத் திருவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக, திரைக் கலைஞர்கள் அழைக்கப்பட்டு இருப்பது ஒரு சேர கண்டனத்தையும் எதிர்ப்பையும் எழுப்பி வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நான்காவது ஆண்டாக புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. பொது நூலக இயக்ககம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) இணைந்து இந்த கண்காட்சியை நடத்தி வருகின்றன. அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இந்த கண்காட்சி நடக்கிறது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். புத்தகக் கண்காட்சி ஆக.11ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் புத்தகக் கண்காட்சியில் உரையாற்ற, எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் வரிசையில், சினிமா கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

நடிகர் - நடிகையருக்கு அழைப்பு

குறிப்பாக திரைக் கலைஞர்கள் தேவயானி, ஐஸ்வர்யா ராஜேஷ், மிருணாளினி ரவி, ப்ரியா ஆனந்த், அபர்ணா தாஸ் ஆகிய நடிகைகளுக்கும் மிர்ச்சி சிவா, ரியோ ராஜ் ஆகிய நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதற்கு எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். புத்தகத் திருவிழாவில் சினிமா நடிகர், நடிகைகளுக்கு என்ன வேலை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து பிரபல சிறார் எழுத்தாளர் விழியன், ‘’4ஆவது நாகப்பட்டினம் புத்தகத் திருவிழா சரித்திரம் படைக்க வாழ்த்துகள். தினம் தினம் திரைப்பிரபலங்கள். மக்கள் அலை அலையாக வருவார்கள். புத்தகங்கள் அமோக விற்பனையாகும். கொடுத்து வைத்த நாகை மக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

சொற்ப எண்ணிக்கை மட்டுமே

இதுகுறித்து சென்னை நூலக ஆணைக்குழுத் தலைவரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் கூறும்போது, “நாகை புத்தகக் கண்காட்சிக்கு நடிகைகள் மட்டுமே அழைக்கப்பட்டிருப்பதாக தோற்றத்தை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது. எழுத்தாளர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என மொத்த அழைப்பாளர்களில் 5- 10% மட்டுமே திரைக்கலைஞர்கள் இருப்பார்கள்.

அதேபோல நடிகைகளுக்கு பெரும் தொகை தருவதாகக் கூறப்படுவதிலும் உண்மையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

போலியாக சித்தரிக்கப்படுகிறது

நாகை மாவட்டத் தரப்பில் கூறும்போது, 11 நாள் கண்காட்சிக்கு 50-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருக்கும் சூழலில், அதில் 7 திரைக் கலைஞர்கள் இருக்கிறார்கள், அவ்வளவே. முழுக்கவே சினிமா கலைஞர்களை வைத்து புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவதாக போலியாக சித்தரிக்கப்படுகிறது. இதில் எள்ளளவும் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளனர்.