தற்கொலை தீர்வல்ல.... தோல்வி மாற்ற முடியாததும் அல்ல...


நாம் நினைத்த ஒன்று கிடைக்காதபோது அல்லது நடக்காதபோது, சமூகம் நம்மை தூற்றுமோ என அஞ்சி, எடுக்கின்ற அபத்தமான முடிவு தான் தற்கொலை. மீண்டும் ஒரு முறை முயற்சித்தால் பெற்றுக்கொள்ளலாம், அல்லது அதை விட மேலான ஒன்றை கண்டறியலாம். மனிதர்கள் பல்வேறு தருணங்களில் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாத போது, காதல் அல்லது மண வாழ்வில் தோல்வியுறும் போது, பரீட்சையில் தோல்வியடையும் போது, வியாபரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்படும் போது, நம்மை சுற்றியுள்ளவர்கள் மத்தியில் நாம் அவமானப்பட்டு கூனி குறுகி அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாத சமயம், இப்படி இன்னும் பல்வேறு தருணங்களில் சிலர் உடனடி தீர்வாக கருதுவது தற்கொலையைத்தான். 


உண்மையாகவே தற்கொலை இந்த எந்த பிரச்சனைகளுக்குமே தீர்வை தராது.  நாம் அன்புக்குரிய உறவுகளை பற்றி சற்றும் யோசிக்காமல் நம் வாழ்வை முடித்துக் கொள்வது எப்படி சிறந்த முடிவாக இருக்க முடியும்? 


பரீட்சையில் தோற்றால் என்ன செய்யணும்?


உதாரணத்திற்கு பரீட்சையில் தோல்வியடையும் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் பரீட்சையில் தோற்கும் எல்லா மாணவர்களும் இவ்வாறான முடிவை எடுப்பதில்லை. நம் அப்பா அடிப்பாரோ, அம்மா திட்டுவாங்களோ, பக்கத்து வீட்டு பொண்ணு பஸ் பண்ணிட்டாளே, என்னை விட சுமார படிச்ச என் தோ(ழி)ழன் பாஸ் பன்னிட்டான் நம்ம எப்படி பெயில் ஆனோம். ப்ரெண்ட்ஸ் கலாய்ப்பாங்களோ என்ற பல என்ன ஓட்டங்கள் ஒரு மாணவனுக்குள் ஓடத் தொடங்குகிறது. இவை தவறான முடிவுக்கு இட்டுச் செல்கின்றது. தேர்வில் தோற்றால் மீண்டும் எழுதி வெற்றி பெற முடியும், அல்லது சிறந்த முறையில் தேர்வு எழுதியும் நீங்கள் தேர்வில் தோல்வியடைந்ததாக நினைத்தால், ரி-வெலிவேடனுக்கு அப்ளை செய்யலாம். 


இப்படி அனைத்துக்குமே ஒரு தீர்வு இருக்கும்போது நாம் ஏன் நம்மை நேசிப்பவர்களை அழ வைக்க வேண்டும். இங்கு படிப்பில் பெரிய அளவு மதிப்பெண்களை எடுக்காத, அல்லது தோல்விடைந்த எத்தனையோ பேர், சுய தொழில் செய்து, அதில் வெற்றி கண்டு, பெரும் கோடீஸ்வரர்களாக இருப்பதை பார்க்க முடிகின்றது. அல்லது அவ்வாறான கதைகளை கேட்க முடிகின்றது. இப்படி ஒரு சாதனையாளனாய் நம் ஒவ்வொருவராலும் உருவாக முடியும். அதற்கு என்னால் முடியும் என்ற ஒற்றை நம்பிக்கை போதுமானது. 


பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும்?


உங்கள் குழந்தை தோல்வியடைந்தால் மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டு காயப்படுத்துவது உளவியல் ரீதியாக அந்த குழந்தையை பெரிதும் பாதிக்கும் என்பதை பெற்றோர்கள் உணர்வது மிக அவசியம். தேர்வில் உங்கள் பிள்ளைகள் பெறும் மதிப்பெண்கள் அவர்கள் அடுத்து என்ன படிக்க முடியும் என்பதை தீர்மானிக்குமே தவிர அவர்களின் எதிர்காலத்தை அல்ல. மீண்டும் தேர்வு எழுதி அவர்கள் விரும்பும் படிப்பை அவர்களால் நிச்சயம் படிக்க முடியும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு உன்னால் முடியும் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டியதும், தேர்வில் தோல்வியுற்றால் தட்டிக் கொடுக்க வேண்டியதும் பெற்றோரின் கடமை .