உங்கள் உணவில் கலப்படம் இல்லாத நெய்யை சேர்க்க வேண்டும் என்று நினைத்தால்  வீட்டிலேயே  பல்வேறு சோதனைகளை நீங்களே வீட்டில் மேற்கொண்டு உபயோகிக்கப் பழகுங்கள்.


நெய் சாதம் என்றால் ஒரு கை சோறு கூடுதலாக சாப்பிடுவோம். அந்தளவிற்கு நம்முடைய உணவு முறையில் இரண்டறக்கலந்துள்ளது என்று தான் கூற வேண்டும். ஆம்,  சைவமாக இருந்தாலும், அசைவமாக இருந்தாலும்  சரி நெய் உணவிற்கு கூடுதல் சுவையைக் கொடுக்கும். அதிலும் குழந்தைகளுக்கு நெய் சாதம் கொடுக்கும் பழக்கத்தை இதுவரை நாம் செய்து வருகிறோம். ஆனால் சமீப காலங்களாக நம்முடைய உணவு முறையில் இருந்து நெய் விட்டுப்பிரியும் அளவிற்கு கலப்படம் நிறைந்ததாக உள்ளது. குறிப்பாக நெய்யில், எலும்புத் துகள்கள், ரசாயனங்கள், குரங்குக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு போன்றவை சேர்க்கப்பட்டிருப்பது பல்வேறு கட்ட சோதனைகளில் தெரியவந்துள்ளன.





ஆனால் என்ன செய்வது ஏதோ நம்பிக்கையில், கடைகளில் விதவிதமான பாக்கெட்டுகளில் விற்பனையாகும் நெய்களை வாங்கி பயன்படுத்திவருகிறோம்.  இந்நேரத்தில் வாங்கும் நெய்யில் கலப்படம் உள்ளதா? என்பதை அறிந்துக் கொள்ளவேண்டுமா? இதோ இந்த முறைகளை கொஞ்சம் நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணிப்பாருங்க.


முதலில் வெப்ப சோதனை:  ஒரு பாத்திரத்தில், ஒரு தேக்கரண்டி நெய்யை நன்றாக சூடாக்க வேண்டும். அப்போது நெய் உடனடியாக உருகி, அடர் பழுப்பு நிறமாக மாறினால் நீங்கள் உபயோகிக்கும் நெய் தூய்மையானது. ஆனால் உருகுவதற்கு நேரம் எடுத்துக்கொள்வதோடு, வெளிர் மஞ்சள் நிறமாக மாறினால் அந்த நெய் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நீங்களே தெரிந்துக்கொள்ளலாம். எனவே இதுப்போன்ற நெய்யை நீங்கள் உபயோகிப்பதைத் தவிர்த்து விடுங்கள்.


அடுத்தது உள்ளங்கை சோதனை,  உங்கள் உள்ளங்கையில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டுக்கொள்ள வேண்டும். அந்நெய் கையில் வைத்திருக்கும் போது தானே உருகினால் தூய்மையானது. இல்லாவிடில் அது கலப்படம் செய்யப்பட்டிருக்கும்.


அயோடின் சோதனை: ஒரு சிறியளவு உருகிய நெய்யில், இரண்டு சொட்டு அயோடின் கரைசலை சேர்க்கவும். அப்போது ஊதா நிறமாக மாறினால், அதில் ஸ்டார்ச் கலந்திருப்பதால் இதனை தவிர்க்க வேண்டும்.


பாட்டில் சோதனை: ஒரு பாட்டிலில் ஒரு டீஸ்பூன் உருகிய நெய்யை எடுத்துக்கொண்டு, அதில் சிறிதளவு சர்க்கரையை சேர்க்கவும். பின்னர் பாட்டிலை மூடி வைத்து நன்றாக குலுக்க வேண்டும். இதனை ஒரு ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும். இப்போது நீங்கள் நெய் ஊற்றி வைத்திருந்த பாட்டிலின் அடியில் சிவப்பு நிறம் இருந்தால், நீங்கள் உபயோகித்து வரும் நெய்யில் சமையல் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.





டபுள் – பாய்லர் சோதனை: நீங்கள் உபயோகிக்கும் நெய்யில், தேங்காய் எண்ணெய் உள்ளதா? என்பதைத் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் டபுள் டாய்லர் சோதனையை மேற்கொள்ளலாம். இதற்கு முதலில் ஒரு கண்ணாடி ஜாடியில் நெய்யை உருக்கவும். பின்னர் கண்ணாடி ஜாரை சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளவேண்டும்.


அப்படி நாம் வைக்கும் போது நெய்யும், தேங்காய் எண்ணெய்யும் தனித்தனி லேயராக இருந்தால் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ளலாம்.


இதுப்போன்ற வழிமுறைகளைப் பின்பற்றி கலப்படம் இல்லாத நெய்யை நீங்கள் இனிமேல் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள முயலுங்கள்.