பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு நீர்ம கலவை ஆகும். பஞ்சகவ்யம் என்றால் பஞ்ச என்பதற்கு அர்த்தம் ஐந்து என்பதும் கவ்யம் என்பதற்கு பசுவிடமிருந்து என்பதும் அர்த்தமாகும். 

இந்த பஞ்சகவ்யம் கோயில்களில் அபிஷேகப் பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலத்துக்கு ஊட்டச்சத்து மிகுந்த பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகிறது. 

பசுவிடம் இருந்து பெறப்படும் 5 பொருட்களான சாணம், கோமியம், பால், நெய், தயிர் போன்றவற்றை மூலமாக வைத்து பஞ்சகவ்யம் தயாரிக்கப்படுகிறது. இயற்கை விவசாயத்தில் பூச்சிகளை கட்டுப்படுத்த இது முக்கிய பொருட்களாக பயன்படுகிறது. 

பஞ்ச கவ்யத்தை தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

பசுவின் சாணம் - 5 கிலோ

பசுவின் கோமியம் - 3 லிட்டர்

பசுவின் பால் - 2 லிட்டர்

பசுவின் தயிர் - 2 லிட்டர் 

பசுவின் நெய் - 1 லிட்டர் 

கரும்பு சாறு - 1 லிட்டர்

தென்னை இளநீர் - 1 லிட்டர் 

வாழைப்பழம் - 1 கிலோ

செய்முறை எப்படி?

பசுவின் சாணத்தையும் நெய்யையும் சேர்த்து கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு வைக்க வேண்டும். மூன்று நாட்கள் இதை அப்படியே வைத்திருக்க வேண்டும். இந்த மூன்று நாட்களும் அவற்றை அவ்வபோது பிசைந்து விட வேண்டும். 

அடுத்ததாக நான்காவது நாள், இவற்றுடன் மற்ற பொருட்களான கோமியம், பால், தயிர், கரும்பு சாறு, இளநீர், வாழைப்பழம் சேர்த்து மண்பானை அல்லது சிமெண்ட் தொட்டி, அல்லது பிளாஸ்டிக் தொட்டி,  இவற்றில் ஏதேனும் ஒன்றில் போட்டு நன்கு கரைக்க வேண்டும். அதோடு அவற்றை கம்பி வலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும். 

ஒரு நாளைக்கு இரண்டு முறை நன்றாக கலக்கி விட வேண்டும். குறைந்தது 20 நிமிடங்களாகவது ஒரு நாளைக்கு கலக்கி விட வேண்டும். இதை 15 நாட்களுக்கு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் பஞ்ச கவ்யம் தயாராகிவிடும். 

இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்துவது எப்படி?

ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் பஞ்சகவ்யம் என எடுத்துக்கொள்ள வேண்டும்.   அவற்றை கை தெளிப்பான் கொண்டு வயலுக்கு தெளிக்கலாம். 

பஞ்ச கவ்யம் அபிஷேக பொருளாக பயன்படுவது எப்படி என்று பார்க்கலாம். 

கருவறைகளில் உள்ள சாமி சிலைகள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். அங்கு சூரிய ஒளி எப்போதும் குறைவாகவே இருக்கும். இதனால் கருவறைகள், சிலைகள், இடுக்குகள், பிளவுகளில் கிருமிகளும், பாசிகளும் பூச்சிகளும் வளர அதிகமான வாய்ப்புகள் உண்டு. 

இதை அறிந்தே முன்னோர்கள் பஞ்சகவ்யத்தை அபிஷேக பொருளாக பயன்படுத்தி உள்ளனர். பூச்சிகளையும் கிருமிகளையும் அகற்றும் தன்மை பஞ்ச கவ்யத்தில் உண்டு. இதனால் தான் பஞ்ச கவ்யம் அபிஷேக பொருளாக பயன்படுகிறது. 

பசுக்கள் பல்வேறு நிறங்களில் உண்டு. ஆனால் ஒவ்வொரு பசுவிடம் எதை எடுக்க வேண்டும் என்ற கூற்றும் உள்ளது. அதாவது பொன்னிற பசுவிடம் பாலும், நீல நிறப்பசுவிடம் தயிரும், கருநிற பசுவிடம் நெய்யும், செந்நிற பசுவிடம் கோமியமும் சாணமும் தனித்தனியே எடுத்து பஞ்சகவ்யம் தயாரிப்பது சிறந்தது என்றும் சொல்லப்படுகிறது.