தூக்கம் என்பது உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் முக்கியமான ஒன்றாக. குறிப்பாக மனிதர்களுக்கு தினசரி 7 முதல் 9 மணி நேரம் வரை தூக்கம் தேவை. அப்படி சரியான தூக்கம் இல்லை என்றால் அன்றாட வேலை செய்வது கூட கடினமாகிவிடும். தூக்கம் இல்லை என்றால் உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் அதிக தூக்கத்தால் கூட சில நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நம் அனைவருக்கும் தினசரி காலையில் எழும் போது, இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கிக்கலாம் என்ற எண்ணம் வருவது உண்டு. இது வழக்கமான ஒன்று தான். ஆனால் ஒரு சிலருக்கு படுக்கையை விட்டு எழுவதற்கு கூட முடியாமல் படுக்கையிலேயே இருக்க தோன்றும், அந்த எண்ணம் நாள் முழுவதிலும் இருக்கும். இப்படி இருந்தால் அதனை நாம் உதாசினப்படுத்தாமல் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனை டிசானியா என மருத்துவர் கூறுகின்றனர். டிசானியாவை ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவர்களை நாடி தகுந்த சிகிச்சை எடுக்கவில்லை என்றால், தினசரி பணிகள் கூட தடைப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
டிசானியா நோய்க்கான அறிகுறிகள் என்ன?
எல்லோருக்கு இரவு முழுவதும் நன்றாக தூங்கினாலும் காலை எழும் போது ஒரு 5 நிமிடம் தூங்கிக்கொள்ளலாம் என தோன்றுவது வழக்கம். ஆனால் டிசானியா இருக்கும் நபர்களுக்கு, தூக்கத்தை தவிர வேறு விஷயங்களை பற்றி சிந்திப்பது கூட கடினமாக இருக்கும். அதுமட்டுமின்றி நன்றாக தூங்கி எழுந்தாலும் உடல் சோர்வு அதிகப்படியாக இருக்கும். மேலும் எந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாத நிலை, குழப்பமான மனநிலை, எந்த ஒரு முடிவு எடுக்க முடியாமல் ஏற்படும் சிக்கல், ஹாலுசினேஷன் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்.
மேலும் பலதரப்பட்ட மருத்துவ காரணங்களால், டிசானியா நிலை மோசமாவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஹைப்போ தைராய்டிஸம், ரத்த சோகை, மன அழுத்தம், தைராய்டு, இதய நோய், க்ரோனிக் பாடிக் சிண்ட்ரோம் (Cronic Fatigue Syndrome) ஆகிய நோய்களால் இந்த டிசானியா தீவிரமடைவதாகவும் கூறுகின்றனர்.
டிசானியாக்கான சிகிச்சை முறைகள் என்ன:
டிசானியா இருக்கக்கூடிய நபர்களுக்கு வாழ்க்கைமுறை மாற்றங்கள் மட்டுமே போதுமானது இல்லை. மருத்துவர்களை அனுகி இதற்கான தீர்வு என்ன, மருத்துவர்கள் கூறும் விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
சில எளிய முறைகள்:
- உங்களுக்கான ஒரு திட்டத்தை வரையறுக்க வேண்டும். தினசரி குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் வைத்து பழகுங்கள். தினமும் அதே நேரத்தில் எழுந்திரிக்க முயற்சி செய்யுங்கள். அப்படி செய்வதன் மூலம், biological clock ல் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என மனநல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
- தூக்கமின்மை அல்லது தூக்கம் சம்மதமான பிற பிரச்சனை உள்ளவர்களுக்கு, உடற்பயிற்சி செய்வதால் நல்ல மாற்றம் இருப்பதாக கூறுகின்றனர். உடற்பயிற்சி மனநிலையை மேம்படுத்தவும், பதட்டத்தை குறைக்கவும் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசானியா இருப்பவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்தால் நல்ல மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
- மூச்சுப்பயிற்சி, தியானம், யோகா ஆகியவை மன அழுத்தத்தை போக்கி தூக்கத்தை மேம்படுத்த உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- முக்கியமாக படுக்கையை படுக்க அல்லது தூங்கும் போது மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளனர். அப்படி செய்வதன் மூலம் தூக்கம் சம்மதமான பிரச்சனைகள் வெகுவாக குறையும் என கூறப்படுகிறது.