எப்போதாவது டென்ஷன் அதிகமானால் நம்மில் பலரும் ஒரு சூயிங் கம்மை வாயில் போட்டு மெல்வோம். நமக்கு டென்ஷன் நிவாரணி. ஆனால் குழந்தைகளுக்கு அது ஃபன். சூயிங் கம்மின் மனமும், நிறமும், தித்திப்பும் எந்தக் குழந்தைக்கு தான் பிடிக்காமல் போகும். கூடவே முட்டை விட்டு விளையாடலாம் அல்லவா?
இப்படி சூயிங் கம்மை நாம் அடிக்கடி பயன்படுத்தினாலும் கூட அது எதில் தயாரிக்கப்படுகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது.
சூயிங் கம் எதில் தயாரிக்கப்படுகிறது?
சூயிங் கம் ரேப்பரில் பொதுவாக அது கம் பேஸ்ட் என்று மட்டும் எழுதப்பட்டிருக்கும். நாம் இப்போது அதில் இருப்பவற்றை விளாவாரியாக அறியலாம். கம் பேஸ் என்பது 30%. மீதமுள்ள 70% சர்க்கரை, கலரிங், ப்ளேவரிங் ஏஜன்ட்டால் ஆனது.
முதன்முதலில் சூயிங் கம் என்பது சாபோடில்லா மரத்தில் இருந்து வெளியேறும் லேட்டக்ஸ் எனப்படும் பால் வகையில் இருந்து தயாரித்தனர். இந்த லேட்டக்ஸ் சிக்கிள் என்றழைக்கப்பட்டது. மெக்சிகோ மழைக்காடுகளில் இந்த வகை மரங்கள் அதிகமாக இருந்தன. அதனால் அங்குதான் சூயிங் கம் பிறந்தது என்றால் அது மிகையாகாது. அங்கிருந்து சூயிங் கம் உலகின் மற்ற பகுதிகளுக்கும் அறிமுகமானது. 1930ல் சூயிங் கம்முக்கான தேவை உலகளவில் அதிகரித்தது. அதனால் சாபோடில்லா மரங்களுக்கு ஆபத்து நேர்ந்தது. அந்த மரங்களே அழிந்து விடுமோ என்ற சூழலும் உருவானது. இந்நிலையில் தான் மாற்று வழிகளுக்கான யோசனை வந்தது.
சாபோடில்லா மரங்களில் இருந்து வெளியேறும் சிக்கிள் பால் பாக்டீரியா, பூச்சிகள், பூஞ்சைகளில் இருந்து அந்த மரத்தை பாதுகாக்க கூடியது. இது இயற்கையாக தேவையான அளவும் வெளியேறும். ஆனால் அதை வெட்டி வெட்டி பால் எடுத்தால் அதன் வாழ்நாள் குறையும்.
சின்தடிக் கம் பயன்பாடு
இந்த நிலையில் தான் சின்தடிக் கம் பயன்பாடு வந்தது. சின்தடிக் கம் என்பது 3 உட் பொருட்களைக் கொண்டது. ஒன்று ரெஸ்ஸின், இரண்டாவது எலாஸ்டோமெர், மூன்றாவது வேக்ஸ் அல்லது சாஃப்டனர். ரெஸின் என்பது பிளாஸ்டிக் தன்மை கொண்டது, எலாஸ்டோமெர் என்பது ரப்பர் தன்மையையும், வேக்ஸ் என்பது மென்மையையும் தருகிறது.
ஆனால் இந்த சின்தடிக் கம்மில் உள்ள இந்த மூன்றும் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்ற விளக்கத்தை தயாரிப்பாளர்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
ஆனால் இந்த கம்மில் பாலிஎத்திலீன், பாலிவினைல் அசிடேட், ப்யூடைல் ரப்பர், பெட்ரோலியம் வேக்ஸ், பகுதியாக ஹைட்ரஜனேற்றப்பட்ட கம் ஆகியன இருக்கலாம். என்னடா கெமிக்கல் பெயராகவே வருகிறதே அப்படி என்றால் இவையெல்லாம் நச்சுப் பொருளா என்று நீங்கள் கேட்கலாம்.
நிச்சயமாக இவை நச்சுப் பொருள் இல்லை. இவையெல்லாம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. ஆனால் இவை பயோ டீக்ரேடபிள் இல்லை. இதனால், சில சூயிங் கம் தயாரிப்பாளர்கள் சிக்கிள் எனப்படும் சாப்போடில்லா மரப் பாலை பயன்படுத்தி பழைய முறையில் சூயிங் கம் தயாரிக்கவும் முற்படுகின்றன. அதே வேளையில் அந்த மரங்களின் வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுடன் இதனை செய்கின்றனர்.