சர்க்கரை என்பது ஜீனி, இனிப்பு பண்டங்கள், பழச்சாறுகள், கார்பனேடட் பானங்கள் வாயிலாக அதிகமாக நம் உடலில் சேர்கிறது. மற்றபடி நாம் உண்ணும் உணவு அனைத்துமே கடைசியில் குளுக்கோஸாக மாறித்தான் உடலில் சக்தியாக இயக்கத்தை நடத்துகிறது. இருப்பினும் நேரடியாக ஜீனி, சர்க்கரை, வெல்லம், தேன், கரும்பு, அதிக இனிப்பு கொண்ட பழங்கள், இனிப்பு பண்டங்கள், கார்பனேடட் ட்ரிங்க்ஸில் கிடைக்கும் சர்க்கரையை நாம் தவிர்க்கலாம். அவ்வாறாக ஒரு மாதம் தவிர்த்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று விவரிக்கிறார் டாக்டர் அம்ரிதா கோஷ்.


சர்க்கரை அதிக கலோரி கொண்ட உணவுப் பொருள் என்பதால் இது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். அதனால் சர்க்கரையை உணவில் தவிர்க்க ஆரம்பித்தால் உடல் எடை குறையும். அதிக சர்க்கரை டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கிறது. அதனால் சர்க்கரையை தவிர்க்கும்போது உடலில் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. ஒரு மாதம் இதை நீங்கள் பரிசோதித்து பார்க்கும் போது உடலில் சக்தி அதிகரிப்பதை நீங்களே உணர்வீர்கள். சர்க்கரையை தவிர்க்கும் போது உடல் நாள் முழுவதும் உற்சாகம் கொள்ளும். விழிப்புடன் இயங்குவதை நீங்களே உணர்வீர்கள். உங்கள் மனநிலையில் நல்ல மாற்றம் தெரியும். மூட் ஸ்விங்ஸ் பாதிப்புகள் குறையும். ரீஃபைண்ட் சர்க்கரை இதய நோய்க்கும் வழி வகுக்கும் என்பதால் சர்க்கரையைத் தவிர்ப்பது இதயத்திற்கும் நலம் சேர்க்கும். அதேபோல் சர்க்கரை நேரடியாக ரத்த அழுத்தத்திற்கு வழி வகுக்கும், உயர் கொலஸ்ட்ராலையும் ஊக்குவிக்கும். இவையெல்லாம் இதயத்திற்கு ஆபத்தானது. ஆகையால் ஒருமாதம் சர்க்கரையை தவிர்த்தால் உங்கள் உடலில் பல்வேறு நன்மைகளை நீங்கள் உணர முடியும். குடல் நலத்தை பேணுவதற்கும் சர்க்கரையை தவிர்த்தல் ஒரு நல்ல வழியாக இருக்கும். சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் வயிறு உப்பசம், மலச்சிக்கல், வயிற்றோட்டம் ஆகியனவற்றை ஏற்படுத்தும். முழுதாக ஒரு மாதம் நீங்கள் உங்கள் உணவில் சர்க்கரையை தவிர்த்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் உங்கள் உடல் நலத்தில் நேர்மறையான பலன் வேண்டும் என்று எதிர்பார்த்தால் சர்க்கரையை ஒரு மாதம் தவிர்த்துப் பாருங்கள்.


லைஃப்ஸ்டைலை மாற்றுங்கள்:


சர்க்கரை என்பதே நம் வாழ்க்கை முறையால் ஏற்படும் பாதிப்புதான். நீங்கள் எடை அதிகம் கொண்டவராக இருந்தால் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். தகுந்த பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்து உங்கள் உடல் எடையில், 5% மாவது குறைத்துவிடுங்கள். கூடவே, அதிக நார்ச்சத்து, குறைந்த ட்ரான்ஸ் ஃபேட் மற்றும் சர்க்கரை கொண்ட உணவை உட்கொள்ளுங்கள். அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். இப்படி லைஃப்ஸ்டைலை மாற்றிவிட்டால் சர்க்கரையை தள்ளிவைக்கலாம்.


சரி சர்க்கரை பாதிப்பு வந்தேவிட்டது என வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நாம் முதலில் செய்ய வேண்டியது உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றுவதே ஆகும். லோ கார்ப், ஹை ஃபைபர் இதுதான் தாரக மந்திரம். நம் தென்னிந்திய உணவில் அதுவும் குறிப்பாக தமிழக உணவில் அரிசி சாதம், இட்லி, தோசை என கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்த உணவே அதிகம் அப்படியிருக்கும்போது அதை எப்படி நமக்கேற்ற மாதிரி மாற்றிக் கொள்வது எனக் கேள்வி எழலாம். ரொம்பவே எளிதுதான். அரிசிக்கு பதில் சிறு தானியங்கள். அதிலும் குறிப்பாக கேரளத்து மட்டை அரிசியைப் பயன்படுத்தலாம். கேரளாவின் பாலக்காட்டில் விளையும் இந்த அரிசி மட்டா அரிசி, ரோஸ்மட்டா, பாலக்காடன் மட்டா அரிசி, கேரள சிவப்பு அரிசி, சிவப்பு அரிசி என்றெல்லாம் அறியப்படுகிறது. இதை சாதமாகவும், இட்லி மாவாகவும், அப்பம் இன்னும் பிற திண் பண்டமாகவும் மாற்றலாம். இது தவிர லோ க்ளைசிமிக் இண்டக்ஸ் கொண்ட பழங்களையும், நிறைய காய்கறிகளையும் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் உறுதி.