அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம் வருவதற்கு முன்பாக பண்டைய இந்தியாவின் பொக்கிஷங்களாக கருதப்படும் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், உடம்பின் நரம்பு புள்ளிகளை இயக்கி செய்யப்படும் வர்ம மருத்துவம் மற்றும் தொடாமல் செய்யப்படும் மருத்துவம் என பல மருத்துவங்கள் இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இதில் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் என்பது இன்றளவும் ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக நிறைய மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் இரண்டும் சற்றேறக்குறைய,ஒரே மாதிரியான மருத்துவ முறைகள் ஆகும். அதைப்போலவே ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்களை கண்டறிய,முறையே வாதம்,பித்தம் மற்றும் கபம் என்றும்,அதுவே சித்த மருத்துவத்தில் வாதம்,பித்தம் மற்றும் சிலோத்துமம் என்றும் பிரிக்கப்படுகிறது.
வாதம் என்பது காற்றுடன் சம்பந்தப்பட்டுள்ளது. பித்தம் என்பது வெப்பம் அல்லது உஷ்ணத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது. சிலேத்துமம் அல்லது கபம் என்பது நீருடன் சம்பந்தப்பட்டுள்ளது.
இந்த வாதம்,பித்தம் மற்றும் சிலோத்துமம் பற்றி திருவள்ளுவர் திருக்குறளில் அழகாக குறிப்பிட்டு இருக்கிறார்.
"மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று".
இக்குறளின் பொருளானது,வாதம் பித்தம் மற்றும் சிலோத்துமம் என எண்ணிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும்,குறைந்தாலும் நோய் உண்டாக்கும்.
ஆகையால் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் இரண்டும் நாடி பிடித்து அல்லது உடலின் அறிகுறிகளை வைத்து மூன்றில் எது மிகுந்திருக்கிறதோ (காற்று வெப்பம் மற்றும் நீர),அதற்கான நோய் இருப்பதை கண்டறிந்து, அதை குணப்படுத்த மருத்துவம் பார்க்கிறார்கள்.
வாதத்திற்கான நோய்கள்:
நெய்தல் நிலம் எனப்படும் கடலும், கடலைச் சார்ந்த இடத்தில்,இத்தகைய வாத நோய்கள் இருக்கின்றன.
வாதம் மிகும்போது நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்கா வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் 80 விதமான நோய்கள் இந்த தன்மையில் அடங்குகின்றன.
பித்தம் சார்ந்த நோய்கள்:
வயலும் வயலைச் சார்ந்த இடமுமான மருத நிலத்தில்,இத்தகைய பித்தம் சார்ந்த நோய்கள் இருக்கின்றன.அவை செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்ள்காமாலை, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை கெட்டுப் போதல் போன்றவை பித்த சம்பந்தமான நோய்களாகும் இதில் 40க்கும் மேற்பட்ட நோய்கள் இருக்கின்றன.
சிலோத்துமத்திற்கான(கபம்) நோய்கள்:
தொண்ணூற்றாறு நோய்களை உள்ளடக்கிய பிரிவு சிலோத்துமமாகும். மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடிமன், இருமல்,ஆஸ்துமா போன்றவை அடங்கும்
ஆயுர்வேதமானது பிரம்மாவிடம் இருந்து,தன்வந்திரிக்கு வந்ததாகவும், பின்னர் ஏனைய மனித மருத்துவர்களுக்கு அந்த அறிவு வழங்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சரக சம்ஹிதை , சுஷ்ருத சம்ஹிதை போன்றவை ஆயுர்வேத மருத்துவத்தை விளக்கும் நூல்களாகும்.
சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை முழு முதல் கடவுளான சிவன் இடமிருந்து, நந்தி தேவர் பெற்று,அவர் வழியாக அகத்தியருக்கு சொல்லப்பட்டு,அகத்தியரின் மூலமாக 18 சித்தர்கள் மற்றும் அவர்கள் வழிவந்த சீடர்களின் மூலம் சித்த மருத்துவத்தை பெற்ற சித்த மருத்துவர்கள் கிராம வைத்தியர்கள் என அவர்கள் பரம்பரைக்கும் சித்த மருத்துவ அறிவு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது.
திருக்குறள்,திருமந்திரம், திருமுறைகள் மற்றும் பதார்த்த குண சிந்தாமணி போன்றவற்றிலும்,18 சித்தர்கள் வழங்கிய நூல்களிலும் சித்த மருத்துவத்திற்கான வழிமுறைகள் விரிவாக சொல்லப்பட்டிருக்கின்றன.
இந்த ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தை பொருத்தவரை, தற்காலத்தில் அலோபதியின் எம்பிபிஎஸ்-க்கு நிகராக,பட்ட மற்றும் பட்டய படிப்புகள் சிறந்து விளங்குகின்றன. இதில் பரம்பரையாக வருபவர்களும் மிகச் சிறப்பான மருத்துவத்தை அளிக்கிறார்கள்.
உடனடியான,அவசர சிகிச்சைகளை தவிர்த்து,எப்பேர்ப்பட்ட நோய்களாக இருப்பினும்,ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தின் மூலம் நிரந்தரமாக குணப்படுத்த முடியும்.
சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் உண்ணும் உணவு, அவற்றின் அளவு, பசியின் தன்மை மற்றும் சூழ்நிலை ஆகியவை நோய்க்கான காரணமாக இருக்கிறது.
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"
எனும் குரலின்படி,நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும் என்பதே,சித்த மருத்துவத்தில் அடி நாதமாக இருக்கிறது.ஆகவே தற்காலிக நோய்களைத் தவிர,நீண்ட கால நோய்களுக்கு,சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் மருந்து எடுத்துக் கொள்வது,எதிர்காலத்தில் நமக்கு எவ்விதமான பக்க வேலைகளையும் ஏற்படுத்தாது.