குரங்குகளுக்கு மற்ற விலங்குகளைவிட புத்திசாலித்தனம் கொஞ்சம் ஜாஸ்தி தான். அதனாலேயே என்னவோ மனிதர்களைக் கண்டு அஞ்சி ஓடாது. சில குரங்குகள் மனிதர்களை ஓடவிடும் அது வேறு கதை. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் காவலரிடம் காத்திருந்து மாங்கனியை வாங்கி சாப்பிட்ட குரங்கின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியைச் சேர்ந்த காவலர் ஒருவர் தனது வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் கையில் நன்கு கனிந்த மாம்பழத்தை கத்தியால் வெட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் காலடியில் முதுகில் குட்டிக் குரங்குடன் பொறுமையாக காத்திருக்கிறது தாய்க் குரங்கு ஒன்று. அவர் ஒரு பெரிய பகுதியை வெட்டித் தர அதை வாங்கி உண்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனை உத்தரப்பிரதேச காவல்துறையே தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.
குரங்குக்கு பொறுமையாக பழத்தை அரிந்து கொடுத்த காவலரின் பெயர் மோகித். அவர் கான்ஸ்டபிளாக இருக்கிறார். அதனைக் குறிப்பிட்டு வெல்டன் மோகித் என்று பாராட்டியுள்ளது உத்தரப்பிரதேச காவல்துறை. உத்தரப்பிரதேச காவல்துறை அக்கறையுடையது என்று பதிவிட்டுள்ளது.
குரங்குக்கு மாம்பழம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் கீழ் பலரும் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். இதுதான் மனிதம் என்று ஒரு நெட்டிசன் பாராட்டியுள்ளார்.
குரங்குகள் ஒரு சமூக உயிரினம். குரங்குகள் மனிதர்களை போல கூட்டம் கூட்டமாக வாழும் உயிரினம் . குழந்தைகளை நாம் எப்படி அன்புடனும் அக்கறையுடனும் வளர்க்கிறோமோ அதை போலத்தான் குரங்குகளும். குரங்குகள் தனது குட்டி இறந்தாலும் கூட தன்னுடனேயே சுமந்து செல்லும் . அது போன்ற எத்தனையோ நெகிழ்ச்சியான வீடியோக்களை நாம் இணையத்தில் பார்த்திருக்கிறோம். அண்மையில் ஒரு குரங்கு மருத்துவரிடம் காயத்திற்கு சிகிச்சை எடுக்க வாந்த வீடியோ வைரலானது. அந்தச் சம்பவம் பீகாரில் நடந்திருந்தது.
காயத்துக்கு மருந்து போடுங்க டாக்டர்.. ப்ளீஸ்!
முன்னதாக இதே போல குரங்கு ஒன்று தலையில் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற வீடியோ இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. பீகார் மாநிலம் சாசரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு சென்ற குரங்கு தனக்கு அடிப்பட்ட காயத்தினை மருத்துவரிடம் காட்டியது.
டாக்டர் எஸ் எம் அகமது அந்த குரங்கின் காயத்தினை பரிசோதித்து ஊசி மற்றும் ஆயிண்மெண்ட் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளித்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் , குரங்கு ஒரு மனிதனை போலவே சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுத்ததுதான். மருத்துவர் பரிசோதிக்கும் பொழுது காயம் பட்ட இடத்தை காட்டியது. அதன் பிறகு நோயாளியின் படுக்கையில் படுத்துக்கொண்டு ஊசி போடுவதற்கு ஒத்துழைப்பு கொடுத்ததுதான் ஹைலைட்.