வாழ்வை அழகாக்கும் ஒவ்வொரு விஷயங்களிலும் காதல் மிகவும் முக்கியமானது ஆகும். சரியான காதல் துணையை (கணவன்/ மனைவி) தேர்வு செய்து அவர்களுடன் குடும்ப வாழ்வில் இணைந்து வாழ்ந்தால் நிச்சயம் அமைதியான நிம்மதியான வாழ்வை வாழலாம்.


காதலின்போதோ, திருமணத்திற்கு பிறகோ எப்போதும் சிரிப்பும், சந்தோஷம் மட்டுமே இருக்கும் என்று எண்ணக்கூடாது. கண்டிப்பாக சண்டைகள், மனக்கசப்புகள், சங்கடங்கள், வருத்தங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றே ஆகும். இதுபோன்ற சூழலை பெரிதாக்காமல் அதை முடிவுக்கு கொண்டு வருவதே சிறப்பானதாகும். அதற்கு கீழே உள்ள சிலவற்றை கடைபிடிக்கலாம்.


ஆணவத்தை விடுங்கள்:


பெரும்பாலான காதல் உறவுகள் அல்லது திருமண உறவுகள் முறிவுகளில் முடிவதற்கு சில சமயங்களில் இருவரில் யார் பெரியவர்? என்ற ஆணவமே காரணம். அன்பு இருக்க வேண்டிய இடத்தில் ஆணவம் எட்டிப்பார்த்தால் அந்த உறவில் விரிசல் என்பது ஊஞ்சல் ஆடத் தொடங்கிவிடும். அதனால், காதலர்களுக்கு இடையேயா, கணவன்/ மனைவிக்கு இடையே எப்போதும் யார் பெரியவர் என்ற எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


உங்கள் துணை உங்களை விட திறமையானவராகவோ, புத்திசாலியாகவோ இருந்தால் அதை நினைத்து பெருமைப்படுங்கள். இருவரும் புத்திசாலியாகவோ, திறமைசாலியாகவோ இருப்பதற்கு நீங்கள் ஒன்றும் நிறுவனம் நடத்தவில்லை. வாழப்போகிறீர்கள். வாழ்வதற்கு அன்புதான் முக்கியம். உங்கள் துணை முன்பு நீங்கள் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்று நினைப்பதை காட்டிலும், உங்கள் காதல் துணை வெற்றி பெறுவதற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுங்கள்.


மன்னிப்பு கேளுங்கள்:


இங்கு பல உறவுகள் சேராமல் இருப்பதற்கு காரணம் மன்னிப்பு கேட்காமல் இருப்பதும், மன்னிக்காமல் இருப்பதும்தான் ஆகும். நாம் தெரிந்தோ, தெரியாமலோ ஏதோ ஒரு சூழலில் நமது காதல் துணையின் மனதை காயப்படுத்தியிருக்கலாம். சில நேரங்களில் காதலனோ/ காதலியோ தன்னால் தன் துணை காயப்படுகிறார் என்பதை உணராமலே இருக்கலாம்.


அதன்பின்பு, உங்கள் துணை உங்களால் காயப்பட்டிருக்கிறார்கள் என்று அறிந்தால் சற்றும் யோசிக்காமல் அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். காலம் முழுவதும் நம்முடன் சேர்ந்து வாழ ஆசைப்படும் உறவிடம் இறங்கிச் சென்று மன்னிப்பு கேட்பதால் எந்த குறையும் வந்துவிடாது. அடுத்த முறை நீங்கள் செய்த தவறை மறந்தேனும் செய்துவிடாதீர்கள்.


உங்கள் துணை தான் செய்த தவறை ( அவர் செய்த தவறு மன்னிக்கவே முடியாத துரோகமாகவோ, குற்றமாகவோ இருந்தால் அல்லாமல் தவறான புரிதல், மனக்கசப்பாக இருந்தால்) உணர்ந்து உங்களிடம் மன்னிப்பு கேட்டால், தயவு செய்து மன்னியுங்கள். மன்னிக்க மாட்டேன் என்று அடம்பிடிப்பதால் இருவருக்கும் மனதில் பாரமே உண்டாகும். அன்பான வாழ்க்கை என்று தெரிந்தும் வீண் கோபத்தால் இழந்து விடாதீர்கள்.


மன்னிப்பு கேட்பதற்கு இங்கு பலரும் தன்மானம் பார்ப்பார்கள். எந்தவித ஈகோவும் இல்லாமல் தொடர்ந்து உங்கள் துணை உங்களிடம் மன்னிப்பு கேட்பது உங்களை மீண்டும் தொல்லை செய்வதற்காக அல்ல. உங்கள் மீது கொண்ட காதலை ஒரு முறை நிரூபிப்பதற்காகவே. உங்கள் துணை நல்லவர் என்றால், உங்களை நன்றாக பார்த்துக் கொள்வார் என்றால் சற்றும் தாமதிக்காமல் மன்னியுங்கள்.


வாய்ப்பு:


இங்கு பலரும் தங்களை நிரூபிக்க கேட்பது வாய்ப்பு மட்டுமே ஆகும். அது உறவுக்கும் பொருந்தும். சந்தர்ப்ப சூழலில் தவறான புரிதல் ஏற்பட்டு உங்களுக்கும், உங்கள் காதல் துணைக்கும் இடையே பிரிவு ஏற்பட்டால் அது சரிசெய்யக்கூடிய காரணமாக இருந்தால் அதை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.


உங்கள் காதல் துணை தன்னால் நீங்கள் காயப்பட்டதை எண்ணி மனம் வருந்தினால், தன் தவறை சரி செய்து உங்களுடன் வாழ ஆசைப்பட்டால் அவருக்கு வாய்ப்பு அளியுங்கள். முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத பலரும், தங்களுக்கு கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பை இறுகப்பற்றிக் கொள்ள மிகவும் ஆசைப்படுவார்கள். ஆனால், அந்த இரண்டாவது வாய்ப்புதான் கிடைப்பது அரிதாக இருக்கும்.


செய்த தவறை மாற்றி உறவை அழகாக்கி, வலுவாக்க உங்கள் துணை உங்களிடம் மன்னிப்பு கேட்டு வாய்ப்பு கேட்டால், அவர் நல்லவராக இருந்து அவர் உங்களை பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையும், அவர் மீதான அன்பும் உங்களுக்கு இருந்தால் அவருக்கு தன் அன்பை காட்ட மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்.


பிரிந்து செல்வது என்பது எதற்கும் தீர்வாகாது. பிரிந்து செல்லும் அளவிற்கு நீங்கள் தேர்வு செய்த காதல் துணை மோசமான நபராக இருந்தால் பிரிந்து செல்வது தவறல்ல. அப்படி இல்லாவிட்டால் நிச்சயமாக அவருக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள். பிரிந்து செல்வதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், சேர்ந்து வாழ்வதற்கு அன்பும், காதல் மட்டுமே பிரதானம் ஆகும்.


சண்டைகள், சங்கடங்கள் இல்லாத உறவுகள் என்பது இல்லை. ஆனாலும், விட்டுக்கொடுத்துச் செல்வதாலும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பாலும் சண்டைகளையும், சங்கடங்களையும் எளிதில் கடந்து அன்பாக வாழலாம்.