தேவையான பொருட்கள்


கடலைப்பருப்பு – 1 கப் – 150 கிராம், சின்ன வெங்காயம் – 1, பூண்டுப்பல் – 1, காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு, சமையல் எண்ணெய் – 2 தேக்கரண்டி, சோம்பு – ½ தேக்கரண்டி, பட்டை – 1 துண்டு, லவங்கம் – 5 ,பிரிஞ்சி இலை – 1,  பெரிய வெங்காயம் – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி, புதினா – சிறிதளவு, பச்சை மிளகாய் – 3, கொத்தமல்லி – சிறிதளவு, தக்காளி – 1,மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி, மல்லித்தூள் – ½ தேக்கரண்டி, மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி, கரம் மசாலா – ½ தேக்கரண்டி,  உப்பு – தேவையான அளவு.


தேங்காய் விழுது அரைக்க தேவையான பொருட்கள்


தேங்காய் – 3 தேக்கரண்டி, முந்திரிப் பருப்பு – 3, கசகசா – ½ தேக்கரண்டி


செய்முறை


முதலில் ஒரு கப் கடலை பருப்பை 2 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.  ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து,  அதனுடன் ஊறவைத்துள்ள கடலை பருப்பை தண்ணீரை முற்றிலுமாக வடித்துவிட்டு சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனை மசால் வடை பதத்திற்கு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


அடுப்பில் கடாய் வைத்து, அதில்  எண்ணெய் சேர்த்து சூடானதும்,  தயார் செய்து வைத்துள்ள கடலைப்பருப்பு கலவையை சிறிது சிறிதாக போட வேண்டும். நன்றாக வெந்து ஓரளவு பொன்னிறமாக ஆனதும் எண்ணையை வடித்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 


ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் சோம்பு,  லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். 


பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை அதனுடன் சேர்க்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, 3 பச்சை மிளகாய், சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றை அதனுடன் சேர்க்க வேண்டும்.  இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போகும்வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.


ஒரு பழுத்த தக்காளியை நறுக்கி அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி நன்றாக வதங்கிய பின் மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலா,மிளகாய் தூள் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இப்போது இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். 


சிறிது நேரத்தில்  ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்ததும், இதனுடன்  3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பின் தயார் செய்து வைத்துள்ள வடைகளை சேர்த்து 4 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும்.


ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், 3 முந்திரி பருப்பு மற்றும் கசகசா சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் விழுதை வடகறியுடன் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை  தூவி  இறக்கினால், சுவையான வடகறி தயார்.