நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் முக்கியமான ஒன்றான தலையணையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்றவேண்டும் என்று பிரபல வைராலஜிஸ்ட் கூறியுள்ளார்.


மாற்றாமல் பயன்படுத்தும் பொருள்கள்:


நான் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருள்களில் எந்த மாற்றமும் செய்யாமலேயே வைத்த இடத்தில் வைத்தே பல ஆண்டுகளாகப் பயன்படுத்துவோம். சுவர் கடிகாரம், டிவி, ஃபேன் போன்றவைகள் ஆண்டுகள் மாறினாலும் இடம் மாறாமல் இருக்கும். சில பொருள்களை பயன்படுத்தும் காலம் முடிந்தாலும் தொடர்ந்து பயன்படுத்துவோம். உதாரணத்திற்கு பல் துலக்கும் ப்ரஷ், ஷாம்பு போன்றவைகள். பெட்ரூமில் தலையணை, போர்வை போன்றவைகளை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருவோம். சுத்தத்திற்காக தலையணை உறை, போர்வை ஆகியவற்றை அவ்வபோது துவைத்து பயன்படுத்துவோம். ஆனால், நன்றாக இருக்கிறது என்பதற்காக தலையணையை பல ஆண்டுகளாக மாற்றாமலேயே பயன்படுத்துவோம்.




வைராலஜிஸ்ட் எச்சரிக்கை:


தலையணையை இப்படி மாற்றாமலேயே பயன்படுத்துவது ஆபத்து என்கிறார் பிரபல வைராலஜிஸ்டான லிண்ட்ஸே ப்ராட்பெண்ட். மருத்துவரான சிஜே ஹுட்க்ராஃப்ட் ட்விட்டரில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் பெட்ரூமில் இருக்கும் தலையணையை எவ்வளவு காலத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும் என்று ரேடியோவில் பேச அழைக்கிறார்கள் என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள, வைராலஜிஸ்ட்டான லிண்ட்ஸே ப்ராட்பெண்ட், மக்கள் பயன்படுத்தும் தலையணை இரண்டு ஆண்டுகள் பழமையானதாக இருந்தால் அதன் எடையில் பத்து சதவீதம் வீட்டில் உள்ள தூசியும், பூச்சிகள் மற்றும் அதன் எச்சங்களும் அடங்கும் என்று கூறியுள்ளார்.


தலையணையை மாற்றாமல் பயன்படுத்தும்போது அதில் உள்ள தூசிகள் மூலம் அலர்ஜி உண்டாகும் என்றும் அலர்ஜி ஏற்பட நமக்குத் தெரியாத காரணிகளில் தலையணையும் ஒன்றாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு அதை இந்த தலையணைகள் மேலும் தீவிரப்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர். தலையணை உறையை துவைத்து பயன்படுத்தும் அதே சமயத்தில், தலையணையையும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாற்றிவிட வேண்டும் என்று கூறுகின்றனர். 






மருத்துவர் கரன் ராஜ் எச்சரிக்கை:


இதே போன்ற ஒரு எச்சரிக்கையை பிரபல மருத்துவர் கரன் ராஜும் கூறியிருந்தார். நம் உடலில் இருந்து சராசரியாக 4 கிலோ தோல் உதிர்கிறது. அவை பெரும்பாலும் தலையணை அல்லது பெட்டில் தான் உதிரும். இவைகள் தான் சிலவகை கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளுக்கு உணவு. நூற்றுக்கணக்கான பூச்சிகள் தலையணையை ஆக்கிரமித்திருக்கும்போது யோசித்துப் பாருங்கள் எப்படி இருக்கும் என்று. உங்கள் தலையணையை இரண்டாக மடித்துப் பாருங்கள். அது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை என்றால் அது உயிரிழந்துவிட்டதாக அர்த்தம். அதை தூக்கிப்போட்டுவிட்டு புதியதை பயன்படுத்துங்கள். அது உங்கள் கழுத்து மற்றும் முதுகெழும்பை சரியாக வைத்திருக்க உதவாது. கழுத்து வலி உருவாக காரணமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.




எனவே, உங்கள் வீட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலே ஒரே தலையணையைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் அதனை உடனே மாற்றிவிடுங்கள்.