பெங்களூருவில் திருமணமாகாது இளம் பெண் ஒருவர் தனக்கு வீடு தேடும் போது ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி பகிர்ந்துள்ளார்.


வீடு தேடுவது என்பது உண்மையிலேயே இந்தக் காலத்தில் மிகப்பெரிய படலம் தான். தமிழ் சினிமாவில் விதவிதமான வீடு தேடும் படலங்களும், ஹவுஸ் ஓனர் அட்ராசிட்டி படங்களும் உண்டு. அண்மையில் டூலெட் என்றொரு படம் வெளியாகியிருந்தது. அது ஒரு குடும்பம் வீடு தேடி அலையும்போது சந்திக்கும் சவால்களைப் பற்றியது. அப்படி தான் சந்தித்த சவால்களை பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் பெண் ஒருவர். இந்த வீடு தேடும் படலம் பெங்களூரில் நடந்துள்ளது.


அந்தப் பெண்ணின் ட்விட்டர் ஹேண்டிலில் இருந்து அவர் பெயர் ருச்சிதா எனத் தெரிகிறது. 



ருச்சிதா தனது ட்விட்டர் பக்கத்தில், நான் வீடு தேடிச் செல்லும் இடமெல்லாம் தரகர் கேட்கும் முதல் கேள்வி, எனக்கு திருமணமாகிவிட்டதா என்பது தான். ஏனெனில் திருமணமாகிவிட்டால் அந்தப் பெண் பார்ட்டி கொண்டாட்டம் என இருக்க மாட்டார். அவருக்கு தாராளமாக வீடு விடலாம் என்பதே பெரும்பாலோனோரின் புரிதலாக இருக்கிறது. பெங்களூரில் நான் நிறைய வீடு தேடி அலைந்துவிட்டேன். இனி நான் எனக்கு திருமணமாகிவிட்டதாக பொய் சொல்லி வீடு கேட்கப்போகிறேன். என் கணவர் ஒரு பூதமாக இருப்பார். அதனால் அவர் வீட்டில் வேறு ஆண் நண்பர்களோ அல்லது பார்ட்டியோ நடக்காமலோ பார்த்துக் கொள்வார் என்று பதிவிட்டுள்ளார்.
கூடவே அந்தப் பெண் சில வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ஷாட்களையும் இணைத்துள்ளார்.
அதில் ஒரு புரோக்கருடனான உரையாடல் இப்படிச் செல்கிறது..


ருச்சிதா: வீடு ஃபர்னிச்சர் இல்லாமல் தான் இருக்குமா?
புரோக்கர்: ஆம்
ருச்சிதா: என்னுடன் இன்னும் இரண்டு பெண்கள் தங்கினால் அவர்களுக்குப் பரவாயில்லையா?
புரோக்கர்: அதை நான் ஓனரிடம் விசாரித்துச் சொல்கிறேன். இந்த வீடு டிசம்பர் முதல் வாரத்தில் காலியாகிறது. அப்புறம் நீங்கள் பார்ட்டி ஏதும் நடத்துவீர்களா?
ருச்சிதா: பரவாயில்லை. எனக்கு இந்த வீடு வேண்டாம். நீங்கள் முன்னர் சொன்னது போல் சில வீடுகள் சொல்லவும்.
புரோக்கர்: சரி. எனக்கு சொந்தமாக ரிச்மாண்ட் டவுனில் இரண்டு அறைகள் கொண்ட வீடு உள்ளது. ஆனால் பார்ட்டிக்கு அனுமதியில்லை. ஆண் நண்பர்களும் வரக் கூடாது. உங்களுக்கு ஓகேவா?
ருச்சிதா: இல்லை சார். எங்களுக்கு இவ்வளவு கெடுபிடி விதிக்கும் நில சுவாந்தர் தேவையில்லை.






இவ்வாறாக அந்த உரையாடல் முடிகிறது. இந்தப் பதிவின் கீழ் நிறைய பேர் தங்களின் பின்னூட்டங்களைப் பதிவு செய்துள்ளனர். ஒருவர், நல்ல வேளை எனக்கு இதுபோன்ற அனுபவங்கள் இல்லை. எனக்கு வாய்த்த வீட்டு ஓனர்கள் எல்லாம் நல்லவர்களாகவே இருந்துள்ளனர். சிலர் மட்டும் ஏன் இத்தகைய மனநிலையில் இருக்கின்றனர் எனத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள மக்களும் வீட்டில் பார்ட்டி என்றால் அதை வேற லெவலில் கொண்டாடி அக்கம்பக்கத்தினரை படுத்திவிடுகின்றனர். இயல்பாக இருந்தால் இதுபோன்ற தொந்தரவுகள் வராது என்று பதிவிட்டுள்ளார்.


இன்னொருவர், இதில் தப்பு என்ன இருக்கிறது? இந்தக் காலத்து இளைஞர்களுக்கு பொறுமை குறைவு. சட்டென சண்டை பிடித்துவிடுவர். முடிவுகளும் அப்படித்தான் சட்டென் எடுப்பார்கள். சில நேரங்களில் ரொம்பவே பிடிவாதமாக இருப்பார்கள். அதனால் சில கெடுபிடிகள் சரியே என்று கூறியுள்ளார்.


மற்றுமொரு நபர், இப்படி சிங்கிள்ஸுக்கு வீடு இல்லை என்று கெடுபிடி காட்டாமல். ஏதேனும் சில அர்த்தமுள்ள நிபந்தனைகளோடு விடலாம். சில சிங்கிள்ஸ் மக்கள் பார்ட்டியால் மொத்தமாக எல்லா சிங்கிள்ஸுக்கும் வீடு மறுக்கக் கூடாது. இன்றைய காலத்தில் எல்லா வார இறுதியிலும் பார்ட்டி பண்ணும் தம்பதிகளும் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.