நமக்குள் இயல்பாகவே இருக்கும் ஒரு உணர்ச்சி கோபம். சில நேரங்களில் இந்த உணர்ச்சி மிக தீவிரமாக இருக்கும். நன்கு முதிர்ச்சியாக இருக்கும் பெரியவர்களால் கூட சில நேரங்களில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. ஆனால் குழந்தைகளிடம் ஏற்படும் கோப உணர்வுகளை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.மேலும் இது கடந்து சென்றுவிடும் பிரச்சினையும் அல்ல. குழந்தைகளின் கோபத்தை சரியாக கையாளா விட்டால் பிற்காலத்தில் எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்ளும் மனநிலை, சிறு சிறு தோல்விகளுக்கு கோபப்படுவது என, ஒருவித ஆக்ரோஷத்தன்மையுடன் வளர்ந்து விடுவார்கள்.


பொதுவாக  குழந்தைகளுக்கு தங்கள் உணர்ச்சிகளை எவ்வாறு கையாள்வது என்று  தெரியாத போது,  தீவிர கோபம், அவமரியாதை மற்றும் ஆக்ரோஷமாக கத்துவது உள்ளிட்டவற்றின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.


இத்தகைய தருணங்களில் பெற்றோர்களும் பதிலுக்கு கோபப்படாமல் குழந்தைகளை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.


பொதுவாக குழந்தைகள் கோபத்தில் கத்துவது, அழுவது, கூச்சலிடுவது, அடிப்பது அல்லது பொருட்களை தூக்கி எறிவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவார்கள். அந்த நேரத்தில்,அவர்களை அமைதிப்படுத்தும் வகையில், பேசுவது, எதனால் கோபமடைந்துள்ளார்கள் என்பதை கண்டறிவது மிக முக்கியமானது. நியாயமாக எதற்கெல்லாம் கோபப்படலாம், மீறி கோபம் வரும் போது அதை எப்படி கட்டுப்படுத்த முயற்சிக்கலாம் என்பதை பற்றிய நுட்பங்களை சிறு வயதிலேயே பெற்றோர்கள் கற்று கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் தங்கள் உணர்வுகளை ஆரோக்கியமான முறையில் வெளிப்படுத்துவதை சிறு வயதிலேயே கற்று கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.


குழந்தைகள் கோபத்தில் அட்டகாசம் செய்யும் போது, அவர்களின் கோபம் அல்லது அழுகையை தூண்டிவிடும் வகையில் பெரியவர்கள் கோபமாகவும் தப்பான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது. அவர்களின் உணர்ச்சிகளை தூண்டி விடுவதற்கு பதிலாக, அவர்களிடம் என்ன பேசினால் அல்லது எப்படி பேசினால் கோபத்திலிருந்து விடுபட்டு அமைதியாக இருப்பார்கள் என்பதை தெரிந்து வைத்து கொண்டு, சரியான வார்த்தைகளை பயன்படுத்தி,அவர்களை சமாதானம் செய்ய வேண்டும்.


பெரும்பாலான நேரங்களில் அவர்களின் கோப உணர்வுகளை அங்கீகரித்து,அவர்கள் விரும்புவதை செய்வதை விட, கோபம் ஏற்படும் போது அதை எவ்வாறு கையாள வேண்டும் என்ற திறன்களை அவர்களுக்கு கற்று கொடுப்பதே சிறந்தது. அவர்களுக்கு விருப்பமான விளையாட்டுக்களில் ஈடுபட வைத்து, கோபம் தணிந்த பின்பு,கோபம் வந்தால் வேறு வேலைகள் அல்லது விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கற்று தர வேண்டும்.


குழந்தைகளின் மனதில் லேசான கோப உணர்வு இருந்தால் கூட,அந்த நேரத்தில் வன்முறைகள் அடங்கிய கேம்கள் அல்லது காட்சிகளை காட்டி அவர்களை திசைதிருப்ப வேண்டாம். ஏனென்றால் வன்முறை காட்சிகள் குழந்தைகளின் மனதை  சீர்குலைத்து, அவர்களையும் வன்முறைக்கு தூண்டி, மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.


இதே நேரம் நிறைய பெற்றோர்கள் குழந்தையை சமாதானப்படுத்துவது மட்டுமே போதுமானது என்று நினைக்கிறார்கள். அவர்களை சமாதானப்படுத்திய பிறகு கோபத்தில் ஆக்ரோஷமாக இருப்பது, அடிப்பது, திட்டுவது, பொருட்களை தாக்கி உடைப்பது உள்ளிட்ட நடத்தைகள் தவறானது என்றும் தேவையில்லாத சச்சரவுகளை  ஏற்படுத்தும் என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பது பெற்றோரின் முக்கிய கடமையாகும்.


இவ்வாறு பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இனிதான ஒரு தகவல் பரிமாற்றம் இருக்கும் பட்சத்தில்,குழந்தைகளின் கோபத்தையும்,அவர்களின் பிடிவாதத்தையும்,மிக எளிதாக தனித்து,அவர்களை நல்வழிப்படுத்தலாம்.