கால மாற்றத்துக்கு ஏற்றவாறு மக்களும் தமது செயல்பாடுகளை இலகுவாக மாற்றிக் கொள்கின்றனர். இயற்கையாக உள்ள பொருட்களை தவிர்த்து விட்டு இலகுவில் கிடைக்கும் செயற்கை முறையிலான பொருட்களை வாங்கி பயன்பெறுகின்றனர்.


அந்த வகையில் தலை முடியை பல்வேறு வண்ணங்களில் அழகுபடுத்திக் கொள்ள‌ இன்றைய இளைஞர்கள் ஹேர்  கலர்களை பயன்படுத்துகின்றனர்.
இந்த ரசாயன மூட்டப்பட்ட ஹேர் டை மற்றும் ஹேர் கலர்கள் காலப்போக்கில் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தலைவலி ,முடி உதிர்தல், தலையில் கட்டிகள் ,ஒவ்வாமை போன்றன ஏற்படுகின்றன. இருந்தபோதிலும் ஆரம்பகால முதல் , தலைமுடியை அழகு படுத்துவதில் எண்ணெய், மருதாணி பல இயற்கை முறையிலான காய்கறிகள் இடம் பிடித்திருக்கின்றன.


ஆகவே இயற்கை முறையில் கூந்தலுக்கு புதிய தோற்றத்தையும், நல்ல பளபளப்பையும், வளர்ச்சியையும் தரும் ஹேர் கலர்களை நாம் பார்க்கலாம்.


தலை முடியில் ஏற்படும் இளம் நரையை மறைக்க பலர் ரசாயனம் கலந்த ஹேர் டைகளை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் சந்தையில் கிடைக்கும் ஹேர் கலர்களில் ரசாயன கலப்பு இருப்பதால் அவை நாளடைவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆகவே இயற்கையான முறையில் நன்கு ஆரோக்கியமான கூந்தலை பெறவும், பளபளப்பான முடியை பேணவும் ,இயற்கை முறையிலான ஹேர்  கலர்களை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.


மருதாணி மற்றும் இண்டிகோ சாயம் (அவுரி இலை தூள்):


ஒரு கப் மருதாணி தூள், ஒரு கப் அவுரி இலை பவுடர் மற்றும் ஒரு முட்டையை எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு கலக்கவும்.


இந்த கலவையுடன் 1 டீஸ்பூன் ஹேர் கண்டிஷனரை சேர்த்து கலக்கவும். கலவை மிகவும் கெட்டியாக இருந்தால்,  கலவையில் ஓரளவு தயிர் அல்லது தண்ணீரை சேர்க்கலாம். பேஸ்ட் தயாரானதும் கைகளால் அல்லது பிரஷ் மூலமோ   தலைமுடியில் நன்கு தடவி 3 முதல் 4 மணி நேரம் நன்கு ஊர விட வேண்டும். பின்னர் சாதாரண நீரில் முடியை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும் . கூந்தல்  பளபளப்பாகவும் ,புதிய தோற்றத்துடனும் ,கருமையாகவும் காட்சியளிக்கும். 


நெல்லிக்காய் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் :


முதலில் ஒரு பாத்திரத்தில் 2 முதல் 3 ஸ்பூன் நெல்லிக்காய் தூள் மற்றும் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துகொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் தேங்காய் எண்ணெயை வைத்து சூடாக்கி அதில் நெல்லிக்காய் தூளை சேர்க்க வேண்டும். இவ்வாறு உங்களுக்கு தேவையான ஹேர் கலரை தயார் செய்து கொள்ளலாம். தயார் செய்த பேஸ்டை தலைமுடியில் நன்கு தடவி ,8 முதல் 10 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண நீரில் முடியை அலசவும். பின்னர் தலைமுடி இயற்கையாகவே கருமை நிறம் அடைந்திருப்பதை காண முடியும். இவ்வாறு செய்வதால் முடி ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வளர்ச்சியடையும்.


மருதாணி மற்றும் இலவங்க இலை சாயம் (இலவங்கப்பத்திரி):


அரை கப் உலர்ந்த மருதாணி மற்றும் 3 இலவங்கபத்திரி இலைகளை ஒரு கப் தண்ணீரில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்னர் காலையில் குறித்த கலவையை கொதிக்க வைக்க வேண்டும். ஆறியதும் வடிகட்டி எடுக்கவும். பின்னர் ஷாம்பு கொண்டு முடியை நன்கு கழுவி சுத்தம் செய்த பின்னர்  ஈரமான கூந்தலில் தடவி குறைந்தது 1 மணிநேரம் வைத்திருக்க வேண்டும். பின்னர் சாதாரண நீரில் கூந்தலை கழுவி உலர விட வேண்டும் . இந்த இயற்கையான ஹேர் கலர்கள் உங்களது தலைமுடியை இயற்கையாகவே கருப்பாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதோடு மட்டுமல்லாமல் அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.