காதல், காமம் சார்ந்த துணைகளைக் குறுகிய காலத் துணையாகத் (Short term relationship) தெரிவு செய்யலாமா? அல்லது நிறையத் துணைகள் வைத்துக்கொள்ளலாமா? அதை எப்படித் தெரிவு செய்யவேண்டும்? அல்லது ஓரிரவில் நிகழும் காமத்தை (One night stand) எப்படித் தெரிவுசெய்வது? Evolutionary psychology என்ன சொல்கிறது? ❤நிறையப்பேருக்கு, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற உறவில் மட்டுமே நாட்டம் இருந்தாலும், இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகும் என்கிற ஆர்வமும் இருக்கும். அவர்களும் இதைப் படிக்கலாம்.
பெரும்பாலும் குறுகிய காலத் துணைகள் என்றால், ஓரிரவில் ஒருவருடன் காமத்தைக் கடந்து( One night stand), அவருடன் அதற்குப் பின்னால் எந்தவிதமான உறவுமோ தொடர்புமோ வைத்துக்கொள்ளாமல் இருப்பதே என்கிற கருத்தும் நிலவுகிறது. குறுகிய காலத் துணை என்றால் அது மட்டும் இல்லை. ஆனால், 'One night stand' ம் அதில் உள்ளடக்கம் என்று வைத்துக்கொள்ளலாம். குறுகிய கால உறவு என்றால், இருவர் சந்தித்து, ஓர் அறைக்குள்ளேயோ வேறெங்கோ சென்று காமம் வைத்துக் கொள்வதும் உடலால் இன்பம் அடைவதும் அந்த ஒரு நாளின் பின்னால் அதை விட்டு விலகுவதும் மட்டும் இல்லை. குறுகிய காலத் துணையில் காலங்களின் நீளங்கள் மாறுகிற உறவுகளும் உண்டு. சிலவேளைகளில் அவை நீண்டகாலத் துணையாக, பல துணைகளில் ஒரு துணையாகக் கூட இருக்கலாம். அவர்களுக்கிடையில் PSYCHOLOGICAL INTIMACY கூட இருக்கலாம்.
PSYCHOLOGICAL INTIMACY என்றால் ஒருவருடன் நீங்கள் உங்கள் தனிப்பட்ட எண்ணங்கள், உணர்வுகள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டு அதன் வழி ஒரு நெருக்கத்தை உணர்வது. அவர்களிடம் எதையும் மறைக்காமல், நீங்கள் நீங்களாகவே இருந்து உரையாடிப் பகிர்ந்துகொள்வது. அவர்களை நம்புவதும் அதன் வழியாக அவர்களுடன் ஒரு உளவியல் தொடர்பினை வைத்துக்கொள்வதும் ஆகும். ஆனால் இந்த PSYCHOLOGICAL INTIMACY இல்லாமல் நாங்கள் ஈர்ப்பினால் உடலினால் மட்டும் காமம் வைத்துக்கொள்ளத் தெரிந்தவர்கள் என்று சிலர் சொல்வதும் இயங்குவதும் உண்டு. எங்களால் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியும் என்றும் சொல்வது உண்டு. அதேநேரம், ஆண்களைப் போல தங்களால் INSTANT GRATIFICATION, உடன் ஈர்ப்பினால் ஒருவரோடு காமம் கொண்டு இன்பம் அடையமுடியும் என்றும் நம்புவதும் உண்டு. இவர்கள் பெரும்பாலும் ஒரேயொருமுறை காமம் என்று One Night Stand தெரிவு செய்வது உண்டு. அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட தெரிவு.
ஆணினதும் பெண்ணினது மூளை, பல குறுகிய காலத் துணைகளுக்கும், பல உறவுகளுக்கும்(Promiscuous) அதே நேரம் நீண்ட உறவுகளுக்கும் ஏற்றபடி பல்லாயிரம் ஆண்டுகளாக மாறி வந்திருக்கிறது என்று சொல்கிறது. ஆனால் இருவரும் குறுகிய காலத் துணைகளைத் தெரிவுசெய்கிற விதம் மட்டும் மாறுபடுகிறது என்று சொல்கிறது. குறுகிய கால உறவில், ஆண்கள் பெரும்பாலும் எண்ணிக்கைகளில் அதிகமாக வைத்திருக்க விரும்புவதாகவும், பெண்கள் பெரும்பாலும் தரம் பார்த்து தேர்வு செய்வதாகவும் சொல்லப்படுகிறது. பெண்கள் பெரும்பாலும், சமச்சீர் முக அமைப்பு உள்ள ஆண்களையும், ஆண்மை அதிகமுள்ள ஆண்களையும், சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகிற ஆண்களையும் விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. நீண்ட கால உறவில் ஆண்கள் பெண்களிடம் அழகும் இளமையும் எதிர்பார்ப்பதாகவும், பெண்கள் ஆண்களிடம், மெச்சூரிட்டியும், வயதும், இன்டெலிஜென்ஸ்ஸும் எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது,
துணைகளுடன் இவை குறித்து உரையாடிக் கொள்ளுங்கள். அவர்களுடைய மெச்சூரிட்டியை அளந்துகொள்ளுங்கள். விலகினால், தர்க்கமோ என்னவோ அதை அவர்களோடு மட்டும் வைத்துக்கொண்டு விலகிவிடுங்கள். அதுவரை இருந்த உறவுக்கு மதிப்புக் கொடுங்கள். அல்லது எனக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது. எனக்கு PSYCHOLOGICAL INTIMACY வேண்டாம், என்னால் ஒரு நாள் உறவில் வெறும் உடல் இன்பம் அடைய முடியும் என எண்ணினால் அதையும் பேசி முடிவெடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் கட்டுப்பாடுகளற்ற திறந்த உறவில் உரையாடி நெருக்கம் பேணி காதலையும் காமத்தையும் உறவாடிக் கொள்ளுங்கள்.