Body Cremation: தகனத்திற்கு பிறகு கூட ஒரே ஒரு உடல் உறுப்பு மட்டும் முழுமையாக அழியாததன் காரணம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
மரணம்:
பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் இறப்பு என்பது நிச்சயம். இயற்கையால் நிர்ணயிக்கப்பட்ட அந்த நிகழ்வை மாற்றி அமைப்பது என்பது முடியாத காரியம். ஒருவரின் வாழ்வுகாலம் முடிவுக்கு வரும்போது, அவர் புவி வாழ்விலிருந்து விடுதலை பெறுகிறார் என்று நம்பப்படுகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை, ஒவ்வோரு மதத்தினரும் வெவ்வேறு சடங்குகளைக் கொண்டுள்ளனர். இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள், இறந்தவர்களின் உடலை எரிப்பதை ஒரு பிரதான வாடிக்கையாக கொண்டுள்ளனர். அப்படி ஒரு உடலை எரிக்கும்போது கூட, ஒரே ஒரு மனித உடலுறுப்பு மட்டும் முழுமையாக அழிவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
உடல் தகனம்
தகனம் செய்யும் போது ஒரு இறந்த உடலை தீ வைத்து எரித்தால், சில மணி நேரங்களிலேயே உடலின் ஒவ்வொரு பாகமும் எரிந்து சாம்பலாக தொடங்கிவிடும். இந்த நேரத்தில், பெரும்பாலான எலும்புகள் சாம்பலாக மாறும். ஆனாலும், சில பாகங்கள் எஞ்சியிருக்கும். அதை எடுத்து நாம் நதிகளில் கரைக்கிறோம். இது அஸ்தி என்று அழைக்கப்படுகிறது. ஆனால் தகனம் செய்யும் போது உடலின் எந்தப் பகுதி முற்ற்லுமாக எரியாது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உண்மையில், உடலின் ஒரு பகுதி ஒருபோதும் தீப்பிடிப்பதில்லை.
படிப்படியாக அழியும் உடல் பாகங்கள்:
ஆராய்ச்சியாளர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு, தகனம் செய்யும் போது உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன்படி, 670 முதல் 810 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வெறும் 10 நிமிடங்களில் உடல் உருகத் தொடங்குகிறது. 20 நிமிடங்களுக்குப் பிறகு எலும்புகள் மென்மையான திசுக்களில் இருந்து விடுபடுகின்றன. மண்டை ஓட்டின் மெல்லிய சுவரில் அதாவது டேபுலா எக்ஸ்டெர்னாவில் விரிசல்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
30 நிமிடங்களுக்குள் தோல் முழுவதும் எரியும் மற்றும் உடலின் பாகங்கள் தெரியும். தகனம் தொடங்கி 40 நிமிடங்களுக்குப் பிறகு, உள் உறுப்புகள் கடுமையாக சுருங்கி, வலை போன்ற அல்லது பஞ்சுபோன்ற அமைப்பு தோன்றும். இது தவிர, சுமார் 50 நிமிடங்களுக்குப் பிறகு, கைகள் மற்றும் கால்கள் ஓரளவு அழிக்கப்பட்டு, உடல் மட்டுமே எஞ்சியிருக்கும். ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு உடலும் உடைகிறது. மனித உடலை முழுமையாக எரிக்க சுமார் 2-3 மணி நேரம் ஆகும். இந்த கடும் வெப்பத்திற்கு பிறகும் உடலின் ஒரே ஒரு உறுப்பு மட்டும் முழுமையாக எரிந்திருக்காது.
எரியாத உடலின் உறுப்பு:
மருத்துவ ஆராய்ச்சி தகவலின்படி, இறந்த பிறகு ஒருவரின் உடலை எரிக்கும்போது, பற்கள் மட்டுமே முழுமையாக எரியாமல் இருக்கும். எரிந்த உடலில் நீங்கள் எளிதாக அடையாளம் காணக்கூடிய பகுதி இதுவே. இதற்கு காரணமும் அறிவியல் தான். உண்மையில், பற்கள் கால்சியம் பாஸ்பேட்டால் ஆனவை. இதன் காரணமாக அவை தீப்பிடிக்காது. இருப்பினும், மிக அதிக வெப்பநிலையை கொண்டு பற்களையும் எரித்து சாம்பலாக்க முடியும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.