செல்லப்பிராணிகளை கவனித்து கொள்ளும் வகையில், ஸ்விக்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்விக்கி:
ஸ்விக்கி நிறுவனமானது, உணவுகளை டெலிவரி செய்யும் நிறுவனமாக உள்ளது. உணவகங்களில் இருந்து உணவுகளை பெற்று, பயணர்களிடம் விநியோகிக்கும் சேவை பணியை ஸ்விக்கி மேற்கொண்டு வருகிறது. இதனால் பல வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சில தருணங்களில், நிறுவனத்திற்கு எதிராக குரல் எழுந்தும் வருகிறது.
இந்நிலையில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் ஊழியர்களுக்கு சாதகமான ஒரு திட்டத்தை ஸ்விக்கி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
செல்லப்பிராணிகள் திட்டம்:
இந்நிலையில், செல்லப்பிராணிகளை பராமரிக்கும் வகையில், புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டமானது, செல்லப்பிராணிகள் தினம் ஏப்ரல் 11 ஆம் தேதியையொட்டி கொண்டு வரப்பட்டது.
பாவ் டெர்னிட்டி என்று அழைக்கப்படும் இத்திட்டமானது, செல்லப்பிராணிகளை பராமரிக்கவும், தத்தெடுத்து வளர்ப்பவர்களுக்கு உதவும் வகையில், விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது, ஊதியத்துடன் கூடிய விடுப்பாக கருதப்படுகிறது. இந்த விடுப்பானது, ஆண்டு விடுப்போடு சேர்த்து கூடுதலாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செல்லப்பிராணிகள் தொலைந்தால், அதை கண்டுபிடிக்கும் வகையில் ஸ்விக்கி பாவ்லீஸ் என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் செல்லப்பிராணிகள் தொலைந்து விட்டால், அது குறித்து புகைப்படங்களை அனுப்ப வேண்டும். அந்த புகைப்படமானது, பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் ஸ்விக்கி ஊழியர்களுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊழியர்களின் உதவியுடன் எளிமையாக கண்டுபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டு வந்துள்ளது.
இதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பாலின-சமத்துவம் பெற்றோர் கொள்கையின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பை கொண்டு வந்தது. தத்தெடுப்பு, வாடகைத் தாய் உள்ளிட்டோருக்கும் விரிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.