சேலம் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து சேலம் கோட்டை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது, "சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. எல்லா தேர்தல்களிலும் சேலத்தில் அதிமுக வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. 2021 இல் 10 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. வேட்டியைக் மாற்றி கட்டிய ஒருவர் நாடகமாடி வருகிறார். என்ன நாடகமாடினாலும் சேலத்தில் ஒன்றும் நடக்காது. போகிற இடமெல்லாம் பேசுகிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிமுக என்ற அடையாளத்தால்தான் அவர் கடந்த முறை ஜெயித்தார். அதை மறந்து, வேறு கட்சிக்கு சென்று நிற்க வெட்கமாக இல்லையா. சூடு சொரணை இல்லையா, உண்மையான அதிமுககாரனுக்குத்தான் இது இருக்கும். அவர் போலி அதிமுககாரர்.


செல்வகணபதி என்னன்னவோ பேசுகிறார். அதிமுக அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததால்தான் திமுகவில் மரியாதை கொடுக்கிறார்கள். அதிமுக தொண்டர்களின் உழைப்பால் பதவியை அனுபவித்து விட்டு, செய் நன்றியை மறந்து விட்டார். என்னைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு தகுதி கிடையாது. ஜெயலலிதாசிறை செல்ல செல்வகணபதியே காரணம். கலர் டிவி, பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளில் திமுக அரசு பதிவு செய்தது. அதனால்தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஒரு தலைவரை சிறை செல்ல காரணமானவர் நீக்கப்பட்டார். அதிமுக தொண்டர்கள் உழைக்க பிறந்தவர்கள். அவர்கள் உழைப்பால்தான் அதிமுக ஏற்றம் பெற்றிருக்கிறது. ஊர்ஊராக சென்று பொய் சொன்னாலும் எதுவும் எடுபடாது. மக்களுக்காக உழைக்கிற இயக்கம் அதிமுக. மக்களின் நம்பிக்கையை பெற்ற அதிமுக அரசு மக்களுக்காக நிறைய திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அதிமுக அரசின் நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. ஏழை மக்களுக்கு சிகிச்சை கிடைப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அம்மா மினி கிளினிக் மூடிவிட்டார்கள். தாலிக்கு தங்கம், இருசக்கர வாகனம் என எல்லா திட்டத்தையும் ரத்து செய்து விட்டனர். ரத்து செய்வதில் சாதனை படைத்து விட்டனர்.  தேர்தல் பத்திரம் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. இவர் 686 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் வாங்கியுள்ளார். சாதாரணமாக யார் இவ்வளவு பணம் கொடுப்பார்கள்.  ஆன்லைன் ரம்மி நிறுவனம் 509 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. எத்தனை குடும்பத்தினரை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த சூதாட்ட நிறுவனத்திடம் பணம் வாங்க எப்படி மனம் வந்தது. பெட்டி வாங்குவதுதான் அந்த குடும்பத்திற்கு பழக்கம். அதிமுகவில் இருந்தால் ஊழல்வாதி, ஆனால் திமுகவிற்கு போய்விட்டால் உத்தமர் ஆகி விடுகிறார்கள். மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.


 


அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். காலசக்கரத்தில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். திமுக ஆட்சியின் ஊழல் விவகாரங்களை வெளிக் கொண்டு வருவோம். இரட்டை வேடம் போடுகிற கட்சி திமுக. முதலமைச்சர் ஸ்டாலினும் இரட்டை வேடம் போடுகிறார். இதுவரை 52 குழு போட்ட திமுக அரசு, இதுவரை என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. திராவிட மாடல் இல்லை, குழு மாடல் அரசாகத்தான் திமுக அரசு உள்ளது. அதனால் திட்டங்கள் கிடப்பில் உள்ளது. 3 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் விலை உயர்ந்து விட்டது. வாழ வழித் தெரியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின் கட்டணமும் 52 சதவீதம் உயர்ந்து விட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. சொத்து வரி அதிகமாக உயர்ந்து விட்டது. வீடுகள், கடைகளுக்கு 150 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் பாதிக்கப்படுவது பற்றி முதலமைச்சருக்கு துளியும் கவலையில்லை.


 


எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஊர் ஊராக சென்று மனு வாங்கிய ஸ்டாலின் அதற்கு பிறகு  மக்களை சந்திக்கவில்லை. மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை மறந்து விட்டார். அதற்கெல்லாம் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள். கொரோனா காலம். மிக கடுமையானதாக இருந்தது. அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வசதி உடனுக்குடன் செய்யப்பட்டது. வேகமாக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அதிமுக ஆட்சியில் மக்களின் உயிரை காப்பாற்றினோம். 11 மாத காலம் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் ரேஷன் கடையில் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டன. கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்களுக்கு அம்மா உணவத்தில் இருந்து 11 மாத காலத்தில் உணவு வழங்கப்பட்டது. மக்கள் பாராட்டக்கூடிய ஆட்சியைக் கொடுத்தோம். தைப் பொங்கலுக்கு அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 கொடுத்தோம். எல்லா மக்களும் மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடினார்கள். திமுக ஆட்சியில் 21 பொருட்கள் பொங்கலுக்கு கொடுத்தார்கள். புழு அரிசி, ஒழுகும் வெல்லம் கொடுத்து ஏழை மக்களை ஏமாற்றினார்கள்.


மோடியை கண்டு பயம் என பொய் பரப்புகிறார்கள். கள்ள உறவு, கள்ளக் கூட்டணி என்பது திமுகவிற்குத்தான் பொருந்தும். அப்பாவுக்கும் மகனுக்கும் இந்த வார்த்தைகள் தெரியும் பொருந்தும். ஒரு கூட்டணியில் இருந்து வெளியே வந்தபிறகு பேசுவது சரியல்ல. அதிமுகவை பொறுத்தவரை தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். திமுகவைப் போல அதிமுக எம்.பிக்கள் கோழைகள் இல்லை. ஓட்டு போட்ட மக்களுக்கு விசுவாசமானவர்கள் அதிமுக எம்.பிக்கள். காவிரி நதிநீர் பிரச்சினையில், 2019-ல் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி 22 நாட்கள் பாராளுமன்றத்தை ஒத்தி வைக்க போராட்டம் நடத்தியவர்கள் அதிமுக எம்.பிக்கள். இப்படி ஒரு திட்டத்திற்காவது திமுக குரல் கொடுத்ததா. ஒரு நாளாவது பாராளுமன்றத்தை முடக்க முடியுமா


ஒற்றைச் செங்கல்லை ஊர் ஊராக சென்று காட்டுகிறார். பாராளுமன்றத்தில் காட்டினால்தானே வேலை நடக்கும். 5 ஆண்டுகாலம் திமுக எம்பிக்கள் பெஞ்சு தேய்த்தார்களா, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருந்தால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்திருக்கும். இதுவே அதிமுக எம்பிக்கள் இருந்திருந்தால் செய்திருப்பார்கள். தலைவாசலில் ஆயிரம் கோடியில் அற்புதமான கால்நடைப் பூங்காவினை கொண்டு வந்துள்ளோம். ஊர் ஊராக ஒற்றை செங்கல்லை எடுத்து செல்பவர்கள், 2 ஆண்டுகளாகியும் கால்நடை பூங்காவினை ரிப்பன் வெட்டி திறக்க முடியவில்லை. பூட்டி வைத்துள்ளனர். ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடை பூங்காவினை திறக்காமல் உள்ளது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் கால்நடை ஆராய்ச்சி நிலையம் செயல்படாமல் உள்ளது. இந்த நல்ல திட்டத்திற்கு மூடு விழா நடத்தி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காட்டுகின்றனர். ஊர் ஊராக சென்று அதிமுக அரசு திட்டங்களை திறப்பது போல, இனியாவது கால்நடை பூங்காவினை திறக்க வேண்டும்.


 


இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் கடன் வாங்கியிருப்பதில்தான். அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக உள்ளது. அந்த கடன், வரியாக மக்களின் தலையில்தான் விடியும்.அதிமுக ஆட்சியில் 5.15 லட்சம் கோடி கடன் இருந்த நிலையில், திமுக ஆட்சியில் 8.50 லட்சம் கோடியாக கடன் உயர்ந்துள்ளது. கொரோனா காலத்தில் மாநில அரசுக்கு வருவாய் இல்லாத நிலையிலும் மக்கள் பாதிக்காமல் பார்த்துக் கொண்டோம். ரூ.40 ஆயிரம் கோடி கொரோனாவிற்கு செலவு செய்தோம். சேலத்திற்கு திமுக ஆட்சியில் ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை. இதனால், தமிழகம் பின்னோக்கி போய்க் கொண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனையாகிறது. சாக்லேட் மாத்திரை வடிவில் மிக எளிமையாக கிடைக்கிறது. அப்படிப்பட்ட அவல ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது. திமுகவில் அயலக அணி வைத்துள்ளனர். அந்த அணி பொறுப்பாளர் போதைப் பொருளை கடத்தியுள்ளார். தமிழகத்தை ஆளக்கூடிய முக்கியப் பிரமுகர்களை தொடர்பு கொண்டு வெளிநாட்டிற்கு திமுக நிர்வாகி போதைப் பொருளை கடத்தியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. கட்சிக்காரனை கட்டுப்படுத்த முடியாத முதல்வர் ஸ்டாலினால், நாட்டு மக்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும். வேலையில்லாத் திண்டாட்டத்தால் அவதிப்படும்போது, முதல்வர் ஸ்டாலின் நீங்கள் நலமா என கேட்கிறார்.


 


பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் இல்லை. டீசல் விலை உயர்வால்தான் விலைவாசி தொடர்ந்து உயர்கிறது. மக்கள் அதிமாக பாதிக்கப்பட்டபோதும் மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. 2021-ல் ஆட்சிக்கு வரும்போது, தேர்தல் அறிக்கையில் சொன்னபடி டீசல் விலையை திமுக அரசு குறைக்கவில்லை.


இன்னொருத்தர் புதிதாக வந்துள்ளார். இவர் அதிமுகவை ஒழிக்கிறேன் என்கிறார். அதிமுக தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி. ஆணவத்தால் பேசக்கூடாது. அதிமுக இல்லையென்றால் தமிழகம் வளர்ச்சி பெற்றிருக்காது. அதிமுக 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்ததால்தான் மக்கள் நல்ல திட்டங்களை பெற்றனர். 1998 இல் ஊர் ஊராக தாமரை சின்னத்தை கொண்டு சேர்த்தது அதிமுகதான். நீங்கல்லாம் அப்பாயிண்ட் ஆனவங்க. உங்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். அதிமுகவில் உழைத்தவர்கள்தான் பதவிக்கு வர முடியும். டெல்லியில் இருப்பவர்கள் நினைத்தால்தான் நீங்கள் தலைவராக இருக்க முடியும். கொஞ்சம் ஜாக்கிரதையாக பேசுங்கள் அண்ணாமலை, அதிமுக ஒரு மாதிரியான கட்சி. பார்த்து பேசுங்க. துணிச்சல் விடும் கட்சி அதிமுக. 500 நாளில் 100 திட்டத்தை செய்வேன் என்று அறிக்கை விடுகிறார். 2021-ல் திமுக ஏமாற்றியது போல, தற்போது அண்ணாமலை புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகிறார். ஒரு கவுன்சிலராக முடியவில்லை. நீங்கள் வந்து அதிமுகவை ஒழிக்க முடியுமா. பதவி வரும் போது பணிவு வர வேண்டும். அது உங்களிடம் இல்லை. தலைக்கர்வத்தில் ஆடக் கூடாது. மரியாதை கொடுத்தால்தான் மனிதராக பிறந்தவருக்கு மரியாதை.


வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்கிறார் பிரதமர் மோடி. அவருடைய கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸூம் வாரிசு அரசியல் படி வந்தவர்தான். அதிமுகவைப் பொறுத்தவரை வாரிசு அரசியலை நிச்சயம் இந்தத் தேர்தலில் ஒழிப்போம். 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் கட்சி அதிமுக. கூட்டணி வைத்த பிறகு இட ஒதுக்கீடு குறித்து கெஞ்சி கேட்டதாக அன்புமணி கூறுகிறார். நான் முதலமைச்சராக இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசாணை வெளியிடப்பட்டது. பேச மனமில்லை. இப்போது யாரிடம் கூட்டணி சேர்ந்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்று கூறும் பாஜகவுடன் சேர்ந்துள்ளார். நான் போட்ட அரசாணையை ஸ்டாலின் அரசு கண்டு கொள்ளாததால் நீர்த்து போய்விட்டது.


பெத்தநாயக்கன்பாளையத்தில் இளைஞர் அணி மாநாட்டில் நீட் தேர்வு ரத்துக்கு கையெழுத்து வாங்கிய கடிதங்கள் குப்பையில் போடப்பட்டது. இதுதான் நீட் தேர்வை ஒழிப்பதன் லட்சணம். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் திமுக கூட்டணிதான். அதை தடுத்த முயன்றது அதிமுக. பச்சைப் பொய்யை ஸ்டாலின் பேசுகிறார். திமுகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சராக காந்திசெல்வன் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் யாரும் கோரிக்கை வைக்காமலே, அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நீட் தேர்வில் கொண்டு வரப்பட்டது. அவர்களுக்கான கட்டணத்தையும் அரசே ஏற்று செலுத்தியது. ஒரு ரூபாய் செலவில்லாமல் மருத்துவம் பயின்று வருகிறார்கள். இது அதிமுக அரசின் சாதனை. இப்படி வேறெந்த சாதனையும் சொல்ல முடியாது. கூட்டம் போட்டு என்னை திட்டத்தான் முடியும். வேறு எதுவும் செய்ய முடியாது. சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்பது அதிமுகதான். ரமலான் காலத்தில் நோன்பு அரிசி, நாகூர் தர்காவிற்கு சந்தனக் கட்டை, ஹஜ் பயணத்திற்கு மானியம், ஹஜ் இல்லம் கட்டியது என பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ன. திமுக அரசின் பொய் பிரசாரத்தை சிறுபான்மை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்துவதை அதிமுக முழுமையாக எதிர்க்கிறது” என்றார்.