சுட்டெரிக்கும் கோடையில் உடல்நலமும் சரும நலமும் மிகவும் அவசியமானது. குளர்காலம், கோடைகாலம் இரண்டிலும் சருமத்திற்கு அதிக கவனம் தேவைப்படும். கோடை வெயிலின் தாக்கம் உடல்நலனின் மட்டுமல்ல சருமத்தையும் பாதிக்கும். சரும வெடிப்பு, வறட்சி உள்ளிட்டவைகள் ஏற்படும். வெயில் காலத்தில் தண்ணீர் அதிகம் குடிப்பது உடலுக்கு நல்லது என்பதோடு சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. சருமத்திற்கென தனியாக சில வழிமுறைகளை கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.
கோடைகாலம் என்றால் வெப்பம், வியர்வை இருக்கும். வியர்வையும் கோடைகாலத்தில் நல்லதுதான். உடலில் இருந்து வியர்வை வெளியேறுவதை தடுக்கக் கூடாது என்று மருத்துவ உலகம் அறிவுறுத்துகிறது. ஏனெனில், உடலின் வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்றுவதால் உடலில் குளிர்ச்சி ஏற்படும். எனவே, ஆரோக்கியமான உணவுமுறையுடன் கோடை கால சரும பராமரிப்புகளை காணலாம்.
கோடை காலத்தில் சரும பராமரிப்பு
அடிக்கடி முகம் கழுவுதல்
தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம்
கோடைகாலத்தில் தண்ணீர் அதிகளவில் குடிப்பது சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க மிகவும் அவசியமானது. போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் சருமம் வறட்சி ஏற்படுவதற்கு அதிகளவு வாய்ப்பு இருக்கிறது. உடலில் நீர்ச்சத்து அளவை சீராக பராமரிப்பதற்கும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடநல ஆரோக்கியத்திற்கும் இது உதவும்.
மாய்சரைஸர்
உங்களுடைய சருமம் எளிதில் வறண்டுவிடக் கூடியது என்றால் அதற்கேற்றவாறு தினமும் மாய்சரைஸர் பயன்படுத்த வேண்டும்.ஆயில் பேஸ்டாக இல்லாத க்ரீம் அல்லது லோசன் சிறந்த தேர்வாக இருக்கும். ஹைட்ராலிக் ஆசிட் (hyaluronic acid), கிளிசரின் (glycerin) ஆகியவைகள் உள்ள மாய்சரைஸர் வாங்குவது நல்லது.
சன் ஸ்கிரீன் முக்கியம் பாஸ்
கோடைகாலத்தில் வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சரும பராமரிப்பு லிஸ்டில் இருக்க வேண்டிய முக்கியமான ஒன்று. தேவையில்லாமல் வெயில் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கலாம். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவசியம் தவிர வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.
உடல் ஆரோக்கியத்திற்கு....
சிட்ரஸ் சத்துமிகுந்த பழங்கள்
எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, நெல்லிக்காய் உள்ளிட்ட பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இவை சிட்ரஸ் பழங்கள் என்று அழைக்கப்படுகிறது.இதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த வகை பழங்களைச் சாப்பிடலாம்.
கிவி
கிவி பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி இருக்கிறது.இதில் அதிக அளவு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. சத்தான பழங்களில் கிவிக்கு எப்போதும் டாப் இடம்தான் என்கின்றனர் நிபுணர்கள். இதில் பொட்டாசியம், வைட்டமின் கே உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இது ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.
மாம்பழம்
மாம்பழம் சுவையான கனி என்றாலும், இதில் வைட்டமின் ஏ,சி, உள்ளிட்ட சத்துக்கள் அதிகமுள்ளன. நார்ச்சத்து,பொட்டாசியம் உள்ளிட்டவைகள் இதில் அதிகம் உள்ளன. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இதை அளவோடு சாப்பிட்டால் எடை குறைக்க உதவும் என்றும் தெரிவிக்கின்றனர்.
கொய்யா
கொய்யா பழத்தில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம் உள்ளிட்டவைகள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளிட்டவைகள் உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கின்றன.
தர்பூசணி
கோடை காலம் என்றவுடன் ’தர்பூசணி’ பழமும் நம் நினைவுக்கு வரும் இல்லையா? தர்பூசணியில் சிட்ரூலா என்ற அமினோ அமிலம் உள்ளது. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. இது நீர்ச்சத்து மிகுந்த பழம் என்பதால், உடலில் தண்ணீர் அளவை தக்கவைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
மாதுளை
மாதுளையில் நைட்ரிக் ஆக்சைட்-ஐ அதிகரிக்கும் தன்மை உள்ளது. இது மன அழுத்தத்தை குறைக்கும். இதில் ஏராளமான வைட்டமின்கள் இருக்கின்றன. செரிமானப் பிரச்சனைகளை சீராக்க உதவுகிறது. ஜூஸாக அருந்துவதை விட பழமாக சாப்பிடுவதே நல்லது.