கோடை காலம் வந்துவிட்டது. சூரிய ஒளி நம் மீது படுவதைத் தடுக்கும் நேரம் இது. பெரும்பாலான நேரங்களில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தி சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து நமது சருமத்தைப் பாதுகாக்க முயல்கிறோம். ஆனால், முகம், சருமத்திற்கு தரும் முக்கியத்துவத்தை தலை முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க தருகிறோமா?


முடி ஆரோக்கியம்:


 உணவுப் பழக்கவழக்கங்களும் நமது ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை பாதிக்கின்றன. உண்மையில், உங்கள் உணவில் போதுமான ஊட்டச்சத்து இல்லாவிட்டால், எந்த செய்ற்கையான பொருட்களும் உங்களுக்கு விரும்பிய முடியை வழங்க உதவாது. கோடை காலம் மட்டுமல்ல, எப்போதுமே தலை முடி ஆரோக்கியமாக இருக்க  எதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தலைமுடி ஆரோக்கியத்தை பாதிக்கும் மோசமான உணவுகள் பற்றி  டயட்டீஷியன் ஸ்வேதா தெரிவிப்பதை காணலாம்.


அதிக மெர்குரி இருக்கும் உணவுகள்


உணவில் அதிகளவு மெர்குரி இருப்பதை தவிர்க்க வேண்டும். இது தலைமுடி உடைந்து கொட்டுவதற்கு காரணமாக இருக்கும். 


சர்க்கரை அதிகமுள்ள உணவுகள்


 அதிக சர்க்கரை உணவுகள் உடலில் அதிகளவு இன்சுலின் உற்பத்தியாகும்.  இன்சுலின் உற்பத்தியின் அதிகரிப்பு ஆன்ட்ரோஜன்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. இது ஆண் ஹார்மோன்கள். இது உங்கள் மயிர்க்கால்களை சுருக்கி முடி உதிர்வை ஏற்படுத்தும்.


முடி உதிர்வதை தடுத்து வளர்ச்சியை ஊக்குவிக்கும் உணவுகள்


 நம் தலைமுடிக்கு வைட்டமின் சி, கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம், இரும்பு மற்றும் இதர மல்டிவைட்டமின்கள் தேவைப்படும். அவை அடர்த்தியான மற்றும் நீண்ட முடி வளர உதவும். உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


1. கீரையில் வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள கீரை முடி வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் இரும்புச்சத்து குறைவாக உள்ள உணவைப் பெற்றிருந்தால், அடர்த்தியான மற்றும் நீண்ட கூந்தலைப் பெற உங்கள் உணவில் கீரையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.


2.  முடி வளர தேவையான புரதத்தின் சிறந்த மூலமாக முட்டை இருக்கிறது. புரதத்தைத் தவிர, முட்டையில் பயோட்டின் உள்ளது. இது முடி உதிர்வைத் தடுக்கிறது. நமது தலைமுடி கெரட்டின் என்ற புரதத்தால் ஆனது என்பதால், புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். அப்போதுதான் முடி வளரும்.


3. முடி வளர்ச்சிக்கு அவசியமான துத்தநாகம், வைட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவற்றால் நிரம்பிய பாதாம் தினமும் சாப்பிடலாம்.  அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர விரும்பினால் பாதாம் சிறந்த தேர்வு. பாதாம் முடியை அதன் வேர்களில் இருந்து வளர்த்து, அவற்றை பளபளப்பாகவும் வலுவாகவும் மாற்ற உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், பாதாம் முடி உதிர்வை தடுக்கும்.


4. சியா விதைகள் புரதம் நிறைந்தது. நீண்ட முடி வளர்ச்சிக்கு உதவும்.  தலைமுடிக்கு கெரட்டின் கிடைக்க சியா விதைகள் நல்ல தேர்வு. இது முடி உடைவதைத் தடுக்கும்.


முடி வளர்ச்சியை அதிகரிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். போதுமான அளவு தூங்க வேண்டும். மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும்.