உலகின் மிகப் பழமையான ஹோட்டல் பழமையான நகரமான ரோமிலோ அல்லது வரலாற்றுச் சிறப்பு மிக்க லண்டன் அல்லது பாரிஸ் நகரில் இல்லை. கின்னஸ் சாதனைப் புத்தகத்தின் படி, இது ஜப்பானின் யமனாஷி என்னும் நகரத்தில் உள்ளது. நிஷியாமா ஒன்சென் கெய்யுங்கன் எனப்படும் இந்த ஹோட்டல் 705ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. சுவாரஸ்யமாக, இரண்டாவது பழமையான ஹோட்டலும் ஜப்பானில்தான் உள்ளது இது 718ல் கட்டப்பட்டது. இதன் பெயர் ஹோஷி ரியோகன் ஆகும். உலகின் பழமையான வணிக நிறுவனங்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது எனச் சொன்னால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
2008ல் வெளியிடப்பட்ட கொரியன் வங்கி அறிக்கையின்படி, உலகில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய காலந்தொட்டு தற்போது வரை மொத்தம் 5,586 நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில், 3,146 ஜப்பானிலும், 837 ஜெர்மனியிலும், 222 நெதர்லாந்திலும், 196 பிரான்சிலும் உள்ளன. யமனாஷி மாகாணத்தில் உள்ள ஹயகாவாவில் அமைந்துள்ள நிஷியாமா ஒன்சென் கெய்யுங்கன் கி.பி 705 இல் நிறுவப்பட்டது. அப்போதிருந்து 1,300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 52 தலைமுறைகளால் இந்த ஓட்டல் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.