உலகம் முழுவதும் மலட்டுத் தன்மை என்றழைக்கப்படும் பாதுகாப்பற்ற உடலுறவு மேற்கொண்டாலும் கரு தரிக்காத பிரச்னை பலரையும் கவனிக்க வைக்கும் ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் பால்வினை நோய்கள் தொடர்பான அமெரிக்க ஆய்வு ஒன்றில், `கொனொரியா, க்ளேமிடியா முதலான பால்வினை நோய்களால் பெண்களின் கருமுட்டை குழாய்களில் பாதிப்பு ஏற்படுகிறது’ எனக் கண்டறியப்பட்டுள்ளது. 


பால்வினை நோய்கள் பாலுறவு காரணமாக ஒருவரில் இருந்து மற்றொருவருக்குப் பரவும் தன்மை கொண்டவை. உடலுறுப்பு, வாய், ஆசன வாய் முதலான பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பாலியல் உறவு காரணமாக பரவும் இந்த பால்வினை நோய்கள், சில நேரங்களில் உடல் நெருக்கத்தின் காரணமாகவும் பரவுவதோடு, பெண்களிடையே மலட்டுத் தன்மை ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. 



பால்வினை நோய்களால் ஏற்படும் மலட்டுத் தன்மை பெண்களிடையே உருவாக்கும் இடுப்பு அழற்சி நோய் இன்னும் சிக்கலான ஒன்றாகும். இடுப்பு அழற்சி நோய் என்பது தொற்று காரணமாக ஏற்படுகிறது. மேலும் இது உடலின் உட்புறம் உள்ள இனப்பெருக்க உறுப்புகளில் வீக்கத்தை உருவாக்குகிறது. தொடர்ந்து இது மலட்டுத் தன்மை, தீவிர நோய்மை, மரணம் முதலானவற்றிற்கு இட்டுச் செல்கிறது என அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 


Chlamydia trachomatis என்ற நுண்ணுயிரின் காரணமாக ஏற்படும் க்ளைமிடியா என்ற நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நபரோடு பாலியல் உறவு கொள்ளும் போது, நோய்த் தொற்று பரவுகிறது. `இது மட்டும் அல்லாமல், பல்வேறு துணைகளுடன் பாலியல் உறவு கொள்ளும் பெண்களுக்கு இந்த நோய் பெரிய சிக்கலாக மாறுகிறது’ என டெல்லியின் ஷாந்தா இனப்பெருக்க மையத்தைச் சேர்ந்த மருத்துவர் அனுபா சிங் தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து பேசும் அவர், `25 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு அதிகளவில் இடுப்பு அழற்சி நோய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. பால்வினை நோய்களை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளை 25 வயதுக்கும் குறைவான பெண்களின் கருப்பை வாய் முழுமையாக மேற்கொள்ளாததால் இவ்வாறு நிகழ்ச்கிறது’ எனக் கூறியுள்ளார். 



இடுப்பு அழற்சி நோயின் அறிகுறிகள்:


1. பிறப்புறுப்பில் ஏற்படும் எரிச்சல்
2. பிறப்புறுப்பில் ஏற்படும் திரவ வெளியேற்றம்
3. வயிற்றுக்குக் கீழ் ஏற்படும் வலி
4. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதீத ரத்தப்போக்கு
5. காய்ச்சல்
6. வாந்தி
7. உடலுறவுக்குப் பின் ஏற்படும் ரத்தப்போக்கு


இந்த நோயில் இருந்து தீர்வாக மருத்துவர் அனுபா சிங், `இடுப்பு அழற்சி நோய் ஏற்படாமல் தவிர்க்க பால்வினை நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும். இதற்காக ஆணுறைகளைப் பயன்படுத்த வேண்டும். பாலியல் நலத்தை அடிக்கடி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு தெரிந்துகொள்ள வேண்டும்’ எனக் கூறுகிறார்.