தீபாவளி என்றாலே இனிப்புகள், பட்சனங்கள், விருந்துகளுக்கு பஞ்சமிருக்காது. அன்றைக்கு மட்டும்தான் சாப்பிட வாய்ப்பிருப்பதுபோல் நம்மில் பலரும் ஃபுல் கட்டு கட்டுவது உண்டு. வீட்டில், உறவினர்கள் வீட்டில், நண்பர்கள் வீட்டில் என பாரபடச்மில்லாமல் இனிப்புகளையும் உணவுகளையும் ருசி பார்க்கும் நாம் நம் உடலை எப்படி நீர்ச்சத்து நிறைவுடன் வைத்திருப்பது என்பது பற்றி அக்கறை கொள்வதில்லை. அஜீரணம், வயிற்றுவலி, வாந்தி, சோர்வு என்று அடுத்தநாள் மருத்துவரை அணுகுவது வழக்கமானதாகிவிட்டது.


நீரின்றி அமையாது உடல்… உடலில் நீரேற்றம் குறையாமல் வைத்திருப்பது உடல் ஆரோக்யங்களில் மிகவும் அவசியமானது ஆகும். அதற்கு கண்டிப்பாக தண்ணீர் குடிக்கவேண்டியது அவசியம்தான்.  தண்ணீர் வாழ்க்கையின் அமுதம், ஆனால் அனைவருமே பொதுவாக போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. நீரேற்றம் இல்லாததால் தலைவலி, சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், கவலைகள் மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் வாழ்க்கைமுறை பயிற்றுநர் கரிஷ்மா சாவ்லா என்பவர் உடலை எப்படி நீர்ச்சத்து நிரம்பியதாக கவனித்துக் கொள்வது என்று நம்முடன் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.


நம் உடலானது நாம் குடிக்கும் தண்ணீரால் மட்டுமே நீர்ச்சத்து பெறுகிறது என்று நினைக்க வேண்டாம். நாம் உண்ணும் உணவிலிருந்து நீர் ஆதாரம் உடலுக்குக் கிடைக்கிறது. அதாவது உடலுக்கு தேவையான 20 சதவீத தண்ணீர் உணவு மூலமே பெற்றுக் கொள்ளலாம். அப்படி என்றால் நம் உணவுப் பழக்கவழக்கத்தில் அதற்கேற்ப மாற்றம் கொண்டுவர வேண்டும். பழங்கள், காய்கறிகள் ஆகியனவற்றை அப்படியே சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு உண்ணும் போது உடலுக்குத் தேவையான தண்ணீர் சத்து கிடைக்கிறது.


நிறைய தண்ணீர் குடித்தால், உடல் அனைத்து உறுப்புகளையும் சரியாக செயல்பட உதவுகிறது. மேலும் உடலில் இருந்து நச்சுகளை வெளியிட உதவுகிறது. எனவே, தண்ணீரை நிறைய உட்கொள்வது மிகவும் முக்கியமானது. இது ஆரோக்கியத்திற்கு பெரிய நன்மைகளை தரும். ஆனால் பலருக்கு தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கம் இருப்பது இல்லை. அவர்களுக்கு வேறு வழிகள் உள்ளன. பழங்கள் மூலமாகவும் உங்கள் உடலுக்குத் தேவையான நீரேற்றத்தைக் கொடுக்கலாம். பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்திருப்பது மட்டுமல்லாமல், உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும் அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பழங்கள் உள்ளன.ஆப்பிள், தர்ப்பூசணி, பப்பாளி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி பழங்களில் தண்ணீர் சத்து நிறைய இருக்கின்றன. உணவில் இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.


நீர்ச்சத்தைப் பெற சில டிப்ஸ்:
1. ஒரு கப் கேரட் ஜூஸ் அல்லது செலரி ஜூஸ் குடித்துப் பாருங்கள். அதுவும் காலை உணவுக்கு முன்னால் குடித்தால் காலைப் பொழுது முழுமைக்குமான நீர் ஆதாரம் கிடைத்துவிடும்.
2. காலை எழுந்தவுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான தண்ணீர். அதில் அரை எலுமிச்சையின் சாறும், விரும்பினால் கொஞ்சம் பட்டை தூளும் சேர்த்து அருந்தலாம்.
3. இரவு விருந்தில் கலந்து கொண்டால் நிச்சயமாக சூப் அருந்துங்கள்.
4. மாலை நேரங்களில் உடலுக்கு நீர் ஆதாரம் பெறும் கொஞ்சம் வீட்டிலேயே தயாரித்த ஹெர்பல் டீ அருந்தலாம். அதில் கொஞ்சம் மிளகு, இஞ்சி சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
5. தேங்காய் தண்ணீர் பருகலாம். அதில் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ் இருக்கிறது. அது உடலில் நீர்ச்சத்தின் அளவை சீராக பராமரிக்க உதவும்.
6. தண்ணீரில் புதினா, எலுமிச்சை, பேஸில் சேர்த்து பருகலாம்.
7. நீங்கள் மது அருந்துபவர்கள் என்றால் அதை தனியாக அப்படியே அருந்தாதீர்கள். ஒவ்வொரு டம்ப்ளர் ஆல்கஹாலுக்கு முன் இரண்டு டம்ப்ளர் தண்ணீர் அருந்துங்கள்.