வாசனை பொருளாக உணவில் பயன்படுத்தப்படும் அன்னாசி பூவில் இருக்கும் மருத்துவ குணம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது.


அன்னாசி பூ:


பிரியாணி, குருமா என அசைவ உணவுகளில் வாசனைக்காகவும், சுவைக்காகவும் அன்னாசி பூ பயன்படுத்தப்படுகிறது. சீனாவை பூர்வீகமாக கொண்ட அன்னாசி பூ, சீன ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்பட்ட இந்த பூ, தவிர்க்க முடியாத மசாலா பொருளாக மாறியுள்ளது. இந்தியாவில் அன்னாசி பூவின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 


காய்ந்த நட்சத்திர வடிவம் கொண்ட அன்னாசி பூ மருத்துவத்திலும், உணவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டும் இல்லாமல் வாசனை திரவியங்கள், கேக் மற்றும் மதுபானங்கள் தயாரிப்பிலும் அன்னாசி பூ பயன்படுத்தப்படுகிறது. வாசனைக்காக பயன்படுத்தப்பட்டாலும் அன்னாசி பூ சுவாச நோய்த்தொற்றுகள், வயிற்று கோளாறுகள், குழந்தைகளின் செரித்தல் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக இருப்பதாக கூறப்படுகிறது. 


ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்தவை


ஸ்டார் அன்னாசி பூவில் அதிகளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. புற்றுநோய் வருவதை தடுப்பதுடன், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. உடல் வீக்கத்தை குறைத்து மூட்டு வலிக்கு மருந்தாகவும் உள்ளது. 


சுவாச ஆரோக்கியம்


இருமல் மற்றும் மூச்சுக்குழாய் அடைப்புக்கு சிறந்த தீர்வாக அன்னாசி பூ இருக்கும் என்றும், ஆஸ்துமாவை குணப்படுத்தும் நோய் தொற்றுகளை தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. சுவாசக் குழாயில் உள்ள தொற்றுகளை நீக்கி சளி, இருமலுக்கு மருந்தாக பயன்படுகிறது. அன்னாசி பூவுடன் சீரகம், மிளகு சேர்த்து கொதிக்க வைத்து காலை, மாலை என குடித்து வந்தால் இருமல், காய்ச்சல், சளி குணமாகும். 


வாயு பிரச்சனையை நீக்கும்


இனிப்பு சுவை இருக்கும் அன்னாசி பூ வாயு பிரச்சனையை முழுமையாக குறைத்து செரிமானத்திற்கு உதவுகிறது. செரிமான பிரச்சனை இருப்பவர்கள் அன்னாசிப்பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். வயிறு உப்பசமாக இருந்தாலோ, புளித்த ஏப்பம் வந்தாலோ அன்னாசி பூ பொடியை நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் புளித்த ஏப்பம் வருவது சரியாகும். 


நரம்பு பிரச்சனையை நீங்கும்


உடல்நிலை பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அன்னாசி பூ கஷாயம் கொடுக்கலாம். சீனா, ரஷ்யா மற்றும் துருக்கி நாடுகளில் உணவு செரிமானத்து அன்னாசி பூவை பயன்படுத்தி வருகின்றனர். 


உடல்சோர்வு மற்றும் தசை வலிக்கு தீர்வு


உடல்சோர்வாக இருந்தாலோ, தசை வலியால் அவதிப்பட்டாலோ அன்னாசி பூவை நல்லெண்ணெய், விளக்கெண்ணேய் சேர்த்து தைலமாக பயன்படுத்தினால் தசை வலி குறையும். 


மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு


மாதவிலக்கு இருக்கும் பெண்கள் அன்னாசி பூவை பெருங்காயம் மற்றும் பனைவெல்லத்துடன் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து காலையில் குடித்து வரலாம். அப்படி செய்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும் என கூறப்படுகிறது. 


(பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீரியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.)